ட்விட்டர்,முகநூல், வாட்சப் போன்ற வலைத்தளங்களை தாங்கள் நம்பும் கொள்கைகளுக்காக பாஜகவைப் போன்று மிகச்சிறப்பாக கையாண்ட கட்சி வேறு எதுவும் இல்லை. 2014 ஆட்சிக்கு வருவதற்கு முந்தைய ஆண்டுகளிலும் ஆட்சிக்கு வந்த அடுத்த ஐந்தாண்டுகளிலும் அவர்களின் பலமே சமூக வலைத்தளங்களாகவே இருந்தது.
வலுவான கட்சித் தொண்டர்கள் மக்களை வாக்காளர்களாக மாற்றும் திறமை மிக்க முகங்களையே மற்ற கட்சிகள் நம்பியிருக்கும் போது,
ஒவ்வொரு பூத்துக்கும் ஐந்து வாட்சப் குழுக்களை உருச்வாக்குவதுதான் அவர்கள் பாணியே…எதிர்க்கட்சி தலைவர்கள், தங்கள் கொள்கைகளுக்கு எதிரானவர்கள் பற்றி முழு நேர வதந்திகளைப் பரப்பி மிகச்சிறப்பாக சேவை செய்தார்கள்.
வாட்சப் போன்ற தளங்களால் எத்தனை எத்தனை கலவரங்கள்.இந்தியாவில் கடந்த பத்தாண்டுகளில் நடந்த கலவரங்கள் கும்பல் கொலைகளில் வாட்சப் உட்பட சமூக வலைத்தளங்களின் பங்கு அபரிமிதமானது. கலவரம் நடந்த இடங்களில் எல்லாம் வட இந்தியாவில் பாஜக வென்றது. இது தவிற மாட்டிறைச்சி கொலைகள், லவ் ஜிகாத் கொலைகள் என அனைத்தும் வாட்சப் உள்ளிட்ட தளங்கள் மூலமே இணைக்கப்பட்டன.
ஆனால் இன்று பாஜகவின் பொய்யும்,வெறுப்புப் பிரச்சாரங்களும் சமூக வலைத்தளங்களில் அம்பலமாகின்றன. எள்ளி நகையாடப்படுகின்றன. சமுக வலைத்தளங்களில் பாஜகவின் செல்வாக்கை முதன் முதலாக ஆட்டம் காண வைத்தது தமிழகம்.
முதன் முதலாக #gobackmodi என்ற இழையை டிரெண்டிங் ஆக்கி அவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார்கள். உண்மையில் அது ஒரு போர் போல நடந்தது. சமூக வலைத்தளங்களில் பாஜகவுக்கு எதிராக டிரெண்டிங் பண்ணுவதை ஒரு திருவிழா போல தமிழகம் கொண்டாடியது. அதன் பின்னர் தெற்கிலிருந்து பரவிய நெருப்பு வட மாநிலங்களுக்கும் பரவியது. மோடி எங்கும் சென்றாலும் கோ பேக் மோடி டிரெண்டிங் ஆனது. அதன் பின்னர் வெவ்வேறு வகைப்பட்ட விமர்சனங்கள் உருவானது.
#Gobackmodi #பாசிசபாஜகஒழிக என்ற இந்த இரண்டு கோஷங்களும் இந்திய அளவில் டிஜிட்டல் தளத்தில் மிகப்பெரிய மாற்றங்களை உருவாக்கியது. அதன் பின்னர்தான் சமூக வலைத்தளங்களை கையாள முடியாமல் திணறிய பாஜக அதை கட்டுப்படுத்த நினைத்து ஏராளமான விதிகளை புகுத்தியது.
இன்னும் ஓராண்டில் உத்தரபிரதேச மாநிலம் உட்பட பாஜகவின் இதயப்பகுதிகளில் தேர்தல் வர இருக்கிறது. அதற்கும் இந்த சமூக வலைத்தளங்களை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும் அல்லது இந்தியாவை விட்டே இவைகளை அகற்ற வேண்டும் என நினைக்கிறது பாஜக.
வாட்சப்புக்கு பதில் ஆர்.எஸ். எஸ் நபரான வெம்பு உருவாக்கிய ஒரு செயலியை தொடர்ந்து இந்திய மக்களுக்கு பரிந்துரைத்து வரும் பாஜக வாட்சப், ட்விட்டரை குறிவைப்பதும் அதற்குத்தான்.