கருணாநிதி, ஜெயலலிதா என்கிற இருபெரும் அரசியல் சக்திகளின் இருத்தல்தான் ஒருவரை ஒருவர் தாங்கிப் பிடித்துக் கொண்டும் தற்காத்தும் வருகிறது. இந்திய அரசியலில் எப்படி பிராந்தியக் கட்சிகளின் வளர்ச்சி தேசீய அரசியலில் தனிப்பெரும்பான்மை ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்து கூட்டணி( கூட்டாட்சி அல்ல) ஆட்சியை கொண்டு வந்ததோ அது போல தமிழகத்தில் சாதிக்கட்சிகள், சினிமா நடிகர்களின் கட்சிகள் என உருவாகி வளர்ந்து நிற்கும் வலுவான உதிரிகளால் அதிமுக, திமுக ஆகிய இரண்டிற்கும் உருவாகி இருக்கும் ஆபத்து தேசீயக் கட்சிகளின் நிலையை ஒத்ததே. ஆனால் இவ்வாறு உருவாகும் கட்சிகளைக் கூட தங்களின் வெற்றி தோல்விக்கு ஆதயமாக மாற்றும் முயற்சிகளும் தமிழகத்தில் இல்லாமல் இல்லை. ஆகச் சீரழிந்த தேர்தல் அரசியலின் சந்தர்ப்பவாதத்தில் இன்று சிக்கிக் கொண்டிருப்பது ஈழம்….இனப்படுகொலை…சுதந்திரத் தமிழீழம்.
எண்பதுகளில் இந்தியா எப்பாடியாவது தங்களுக்கு சுதந்திரத் தமிழீழத்தை உருவாக்கிக் கொடுத்து விடும் என்று ஈழப் போராளிக்குழுக்கள் நம்பினார்கள். தென்னாசியாவில் அன்றைய இந்தியாவின் நலனும் அதன் உண்மையான நோக்கமும் போராளிக் குழுக்களுக்குத் தெரிய அவர்கள் திம்பு பேச்சுவார்த்தைவரை காத்திருக்க வேண்டியதாயிற்று. திம்புவுக்கும் இன்றைய வடக்கின் மீதான யுத்தத்திற்கும் இடையிலான காலங்கள் கசப்பானாவை. ஈழம் என்கிற கருத்தில் உணர்வு பூர்வமாக தன்னை இணைத்துக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர் இறந்து போனார். இதே கொள்கையைக் கொண்டிருந்ததாக சொல்லிக் கொண்டிருந்த கருணாநிதி இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் சில திருத்தங்களோடு இலங்கை இனப்பிரச்சனைக்கு தீர்வுகாண முடியும் என இப்போது சொல்கிறார். இம்மாதிரி எதையும் பேசாமால் அப்பட்டமாக இலங்கை அரசை ஆதரித்து வந்த ஜெயலலிதாவோ இன்று அப்படியே நேர் எதிராக “என் சொல்படிக் கேட்கும் மத்திய அரசு அமைந்தால் நான் தனி ஈழம் பெற்றுக் கொடுப்பேன் “ என்கிறார். ஜெவின் இந்த தேர்தல் கோஷங்களை பெரும்பாலான விஷயமறிந்தவர்கள் நம்ப மறுக்கும் அதே வேளையில். ஜெயலலிதாவின் இந்த அறிவிப்பு இனப்படுகொலையில் அன்றாடம் கொல்லப்படும் ஈழ மக்களுக்கும் புலத்தில் வாழும் தமிழ் மக்களுக்கும் கொஞ்சம் ஆறுதலாக இருப்பதென்னவோ உண்மைதான்.
ஈழத் தமிழர் விவாகரம் ஒரு தேர்தல் கோஷமாக மாறாதா என்றெல்லாம் நாங்கள் ஆசைப்பட்ட காலங்கள் உண்டு, திராவிட இயக்க ஆட்சி அமைந்த பிறகு முதன் முதலாக ஈழம் என்பது தேர்தல் நேர பிரச்சனையாக மாற்றப்பட்டிருக்கிறது. தேர்தல் கோஷமாகவும் மாற்றப்பட்டிருக்கிறது. ஈழத்தின் மீதான இனவெறிப் போரை இலங்கை இராணுவம் தொடங்கிய போது சிறு சிறு தமிழ்த் தேசீய குழுக்களின் ஆர்ப்பாட்டங்களைக் கடந்து தமிழகத்தில் எதுவுமே நடக்கவில்லை. கருணாநிதியோ, ஜெயலலிதாவோ அதை சுத்தமாகக் கண்டு கொள்ளவில்லை. திருமங்கல் தேர்தலில் இவர்கள் கவனம் செலுத்திய நேரத்தில்தான் கிளிநொச்சி படையினர் வசம் வீழந்தது. பின்னர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சென்னை சேப்பாக்கத்தில் ஒரு உண்ணாவிரதம் அறிவித்த போது அதற்கு பெருத்த ஆதரவு கிடைத்தது. ஏனென்றால் ஒரு மக்கள் செல்வாக்குள்ள கட்சியொன்று முதன் முதலாக ஈழத்திற்காக களம் இறங்கியது அதுதான் முதன் முறை. ஆனால் அன்றைய கம்யூனிஸ்டுகளின் போராட்டத்தை ஜெயலலிதா ஆதரிக்கவில்லை. அந்தப் போராட்டத்திலிருந்துதான் தமிழகத்தில் வலுவான போராட்டங்கள் கிளர்ந்தது. முத்துக்குமாரில் தொடங்கி 14 பேர் ஈழத்தில் போர் நிறுத்தம் கோரி தீக்குளித்து இறந்தார்கள். முத்துக்குமார் எழுதிய மரண சாசனம். ஒட்டு மொத்த தேர்தல் அரசியல்வாதிகளை கிண்டல் செய்தாலும் , முத்துக்குமாரின் இறுதி நிகழ்வில் வெளிப்பட்ட எதிர்ப்பு அலை என்பது மத்திய காங்கிரஸ் அரசிற்கும் மாநில திமுக அரசிற்கும் எதிரானதாக உருப்பெற்றது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் கூட யாரும் இது தேர்தலில் எதிரொலிக்கும் என்று நினைக்கவில்லை. நாற்பது தொகுதிகளில் பெரும்பாலான தொகுதிகளை திமுக கூட்டணி கைப்பற்றும் என்றே பலரும் நினைத்தார்கள். ஏனென்றால் பழ.நெடுமாறன் தலைமையிலான இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தை கருணாநிதியால் எளிதாக டீல் செய்ய முடிந்தது. போட்டிக்கு ஒரு அமைப்பைத் துவங்க முடிந்தது. திருமாவை உடைத்து வெளியில் கொண்டு வரமுடிந்தது. ஒரு பக்கம் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் என்கிற பொது அமைப்பு ஜெயலதாவிடம் நெருங்கிச் சென்றது. வைகோ, கம்யூனிஸ்டுகள் என்று துவக்கத்திலேயே ஜே வோடு கூட்டணி அமைத்து விட்டு அவர்களே இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்திலும் இருந்ததால் இந்தத் தோற்றம் கிடைத்திருக்கலாம். தவிறவும் தாக்கப்படுகிற மத்திய மாநில அரசுகளாக இருக்கும் போது நிறம் ஏறுவது இயல்புதானே. தமிழகத்தில் அதிமுக, திமுக தவிர்த்த மூன்றாவது அணியான ஈழக் கூட்டணி அமைக்க திருமா எடுத்த முயற்சிகளை டாக்டர் ராமதாஸ் முளையிலேயே கிள்ளி எரிந்தார்.கடைசி வரை காங்கிரஸ் அரசில் பங்கெடுத்துக் கொண்டு அதே நேரத்தில் ஈழப் பிரச்சனையில் கருணாநிதியை மட்டும் எதிரியாக சித்தரித்து காங்கிரஸ் பற்றி மௌனம் சாதித்து. அதிமுக கூட்டணி பேரம் படிந்த பிறகு காங்கிரசையும் கருணாநிதியையும் ஈழப் பிரச்சனையில் இன்று வறுத்தெடுக்கிற ராம்தாஸ், நாளையே ஏழு நாடாளுமன்றத் தொகுதிகளிலும் வென்ற பிறகு மீண்டும் காங்கிரஸ் ஆட்சியில் பங்குபெறமாட்டார் என்பதற்கு ஒரு உத்திரவாதமும் இல்லை. கருணாநிதிக்கு சற்றும் சளைக்காத தந்திரக்காரர் இன்றைக்கு தமிழகத்தில் ராமதாஸ் மட்டுமே.
ஒரு வழியாக கூட்டணிகள் முடிவான பிறகு இன்று ஈழம் தேர்தல் கோஷமாகியிருக்கிறது. இலங்கைத் தமிழர் பிரச்சனை இந்தத் தேர்தலில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்கிறார் கருணாநிதி. ஜெயலிதாவோ தனது ஒரு மணிநேர உரையில் நாற்பது நிமிடங்கள் தனி ஈழம் குறித்தும், கருணாநிதி ராஜபட்சேயோடு சேர்ந்து செய்த துரோகம் பற்றியும் பேசுகிறார். ஆனால் இன்றைய தேதியில் தமிழகத்தில் ஈழம் என்கிற சரக்கு விற்பனையாவது உண்மைதான். இதுவரை தமிழ், தமிழர், என்கிற கொள்கைகளுக்கெல்லாம் முரணானவர் என்றிருந்த ஜே எப்படி இதை அறுவடை செய்ய முடிந்தது? இத்தனைகாலமும் கருணாநிதியைக் கொண்டாடிக் கொண்டிருந்த தமிழ் ஆர்வலர்கள் அவருக்கு எதிராகத் திரும்பி தேர்தலிலும் வேலை செய்கிற சூழல் ஏன் ஏற்பட்டது?
ஈழப் பிரச்சனைக்காக தமிழகம் கொந்தளித்த போது வழக்கறிஞர்கள், மாணவர்கள், பொதுநிலையினர் ஆகியோரின் எதிர்ப்பு என்பது காங்கிரஸ் கட்சிக்கு எதிராக மட்டுமே இருந்தது. ஒரு இடத்தில் கூட கருணாநிதியின் கொடும்பாவி கொழுத்தப்படவில்லை. தமிழக காங்கிரஸ்காரர்கள் கொடுத்த நெருக்கடியும் , மைனாரிட்டி திமுக அரசு காங்கிரஸ் தயவில் இரண்டாண்டுகாலம் ஆள வேண்டிய நிர்பந்தமுமே ஈழப் போராட்டத்தை மிக மோசமாக ஒடுக்கும் படி கருணாநிதியைத் தூண்டியது. இன்று திரைத்துறையினர், கள் இறக்கும் விவாசாயிகள், மாணவர்கள், வழக்கறிஞர்கள், தமிழ்த் தேசீய குழுக்கள், இடது சாரிக்குழுக்கள் என நூற்றுக்கணக்கான அமைப்புகள் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக திரும்பியிருப்பது கருணாநிதிக்கு தர்மசங்கடத்தை உருவாக்கி இருக்கிறது. கூடுமானவரை பிரச்சார பீரங்கிகளை அமைதியாக்க நினைத்தார். ஆனால் நீதிமன்றம் அதற்கு ஒத்துழைக்கவில்லை. “ இந்திய இறையாண்மைக்கும் தேசீய பாதுகாப்புச் சட்டத்திற்கும் சம்பந்தம் இல்லை” என்று சொல்லி கைது செய்யப்பட்ட சீமானும், நாஞ்சில் சம்பத்தும் வெளியில் வந்து விட்டார்கள். கொளத்தூர் மணி இன்னும் இரண்டொரு நாளில் வருவார் என்கிற சூழலில் திடகாத்திரமான எதிர்ப்பை காங்கிரஸ், திமுக சந்திக்கிறது.
இதே சூழலில்தான் ஜெயலலிதா ரவிஷங்கர் என்கிற சாமியார் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் ஈழம் குறித்த தன் பார்வையை மாற்றியிருப்பதாகச் சொல்கிறார். எப்படியான ஒரு நிலையில் இருந்தாரோ அதற்கு நேர் எதிரான ஒரு நிலையை ஜெ எடுத்திருப்பது ஒரு சாராருக்கு ஆச்சரியத்தையும் ஆளும் தரப்பினருக்கு அதிர்ச்சியையும் கொடுத்திருக்கிறது. ஈழ விஷயத்தில் கருணாநிதி முன்னெடுத்த கடைசி அஸ்திரம் என்று சொல்லப்பட்ட உண்ணாவிரத் காட்சிகளை அவரே கலைத்துப் போடுகிறார். போர் நிறுத்தப்பட்டுள்ளது என்கிற பச்சைப் பொய்யை வாய்கூசாமல் சொல்கிற கருணாநிதி தேர்தலுக்கு இன்னும் 13 நாட்கள் இருக்கும் நிலையில் கடைசியாக இன்னொரு அஸ்திரத்தை வீசுவார் என்றே எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள். ஈழம் குறித்த மென்மைப் போக்குகள் வாக்காளர்களை வசீகரிக்காது என்பதை தெரிந்து வைத்திருக்கும் ஜெயல்லிதாவோ நான் ஆட்சிக்கு வந்தால் இலங்கை மீது போர் தொடுப்பேன் என்கிறார். மத்திய மாநில அரசுகள் மீது அதிருப்தி அடைந்திருக்கும் தமிழக மக்களோ ஜெவின் பேச்சை கொஞ்சம் அயர்ற்சியாக பார்க்கிறார்கள். ஆனால் மத்தியில் ஆட்சியமைக்கப் போகிற பி.ஜே.பியோ காங்கிரஸ் கட்சியோ இரண்டுமே ஜெவின் தனி ஈழக் கொள்கையை நிராகரித்திருக்கிறது. அது போல தேர்தல் முடிந்த பிற்கு போய்ஸ்கார்டனுக்கு சோ ராமசாமி போய் மந்திராலோசனை நடத்துகிறவரை ஜெ இதில் உறுதியாக இருக்கலாம்.
பெரும் சந்தர்ப்பவாதிகளாலும், கேடு கெட்ட வாக்குறுதிகளாலும் ஆனது இந்திய தேர்தல்முறை. ஆனால் கண்ணெதிரில் நடக்கும் இனப்படுகொலை அதை ஒட்டி தமிழகத்தில் எழுந்த போர் நிறுத்தம் கோரிக்கை இன்று என்னவானது? இரண்டு இருக்கைகளில் தொடங்கி ஏழு இருக்கைகள் வரை அரசியல் கட்சிகளுக்குக் கிடைத்த பிறகு போர் நிறுத்தம் என்கிற கோரிக்கையை கைவிட்டு ராஜபட்சேயின் இனப்படுகொலையை வாக்குவங்கியாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டிறுக்கிறார்கள் இவர்கள். போர் நின்றால் கருணாநிதிக்கு தேர்தல் நேரத்தில் நல்லது , போர் தொடர்ந்தால் ஜெயலலிதாவுக்கு தேர்தல் நேரத்தில் நல்லது , என்றுதான் இவர்கள் இப்போது நினைக்கிறார்களோ என்று தோன்றுகிறது. ஒருவர் பாதிப்புகளில் இருந்து தப்பித்துக் கொள்ள நாடகம் ஆடுகிறார். இன்னொருவர் பாதிப்பை ஏற்படுத்த நாடகம் ஆடுகிறார். இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் என்ற ஒன்று இன்று இருக்கிறதா? என்று தெரியவில்லை.கொடூரமான மனித அவலம் ஈழத்தில் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் சூழலில் தமிழக வாக்காளர்களிடம் தோன்றீயுள்ள காங்கிரஸ், திமுக எதிர்ப்பு என்பது புரிந்து கொள்ளக் கூடியதுதான்.ஆனால் அந்த எதிர்ப்பிலேயே ஒருவர் நாற்பது தொகுதிகளையும் வெல்லலாம் என்றால் வென்றவர் தோற்றவரை விட திறமையாக நடித்திருக்கிறார் என்றுதானே அர்த்தம். ஆனால் அதையும் தாண்டி தென்னாசியாவில் இந்தியாவின் இருத்தல் தொடர்பான கொள்கை மாற்றம் நோக்கி இவர்களை யார் நகர்த்துவது?
“புரடசித்தலைவியின்”தனிஈழத்தை புலிகளின் புலம்பெயர்வுகளும் ஊடகங்களும் “சீரியசாக” ஏடுத்துள்ளனர்! இதனால் கருணாநிதி கோமாளியாக்கப்பட்டுள்ளார்! இதை பரதிபலிக்கும வகையில் யி.ரி.வி. தொலைக்காட்சியில் நிகழ்வு ஒன்று பார்க்கமுடடிந்தது! அதில் கருணாநிதி மாத்திரமல்ல>அணமையில இலங்கைக்கு செனற பிரித்தானிய பிரான்சு அமைச்சர்களையும கோமாளிகளாக சித்தரிக்கினறனர்! மொத்த்தில்> சர்வதேச சமூகம்-புலம்பெயர் சமூகம் (உண்ணாவிரதிகள்) எல்லோரையும் புலிகள் கோமாளிகள் ஆக்குகின்றனர்!