தேர்தல் பெறுபேறுகள் முழுமையாக மதிப்பீடு செய்யப்பட்ட பின்னரே வாக்களிப்பு வீதம் தொடர்பான விபரம் அறிவிக்கப்படுமென மேலதிக தேர்தல் ஆணையாளர் டபிள்யூ.பி.சுமணசிறி நேற்று மாலை தெரிவித்த நிலையில் தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பவ்ரல் இது தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில் சுமார் 50-52 வீதமளவில் வாக்களிப்பு இடம்பெற்றதாகத் தெரிவித்தது.
இதேவேளை, நேற்று சூட்டுச் சம்பவமொன்று உட்பட வன்முறைகள் இடம்பெற்றதாகவும் இவற்றில் அதிகளவான சம்பவங்கள் ஆளுங்கட்சி ஆதரவாளர்களால் மேற்கொள்ளப்பட்டதாகவும் சுயாதீனமான தேர்தல் கண்காணிப்பாளர்கள் கூறினர்.
நேற்றுக் காலை 7 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பமான நான்கு மணித்தியாலங்களில் தேர்தல் வன்முறைகள் தொடர்பான 160 சம்பவங்கள் இடம்பெற்றிருப்பதாக தேர்தல் வன்முறை கண்காணிக்கும் நிலையம் (சி.எம்.ஈ.வி.) தெரிவித்தது. அரசாங்க சார்பு ஆதரவாளர்கள் வாக்காளர்களை அச்சுறுத்தியுள்ளதாக அறிக்கைகள் கிடைத்திருப்பதாக சி.எம்.ஈ.வி. இன் பேச்சாளர் டி.எம்.திஸாநாயக்க தெரிவித்தார். சில இடங்களில் இனந்தெரியாதவர்கள் வாக்காளர் அட்டைகளை அபகரித்துச் சென்றதாகவும் அவர் கூறியுள்ளார். நேற்றைய வாக்களிப்புத் தொடர்பாக இந்த நிலையத்தின் வடக்கு,கிழக்கு இணைப்பாளர் கருத்துத் தெரிவிக்கையில்;
காலையில் மக்கள் சற்று ஆர்வத்துடன் வாக்களித்ததைக் காணமுடிந்தது. பல பகுதிகளில் வன்முறைகள் இடம்பெற்றுள்ளன. நாவலப்பிட்டியில் ஆளுங்கட்சி வேட்பாளரொருவரின் ஆதரவாளர்கள் ஐக்கிய தேசிய முன்னணி,ஜனநாயக தேசியக் கூட்டணிக் கட்சிகளின் முகவர்களே வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுமதிக்காது விரட்டியுள்ளனர். அப்பகுதியில் அச்சமான சூழ்நிலை காணப்பட்டது. கிழக்கு மாகாணத்தில் பொத்துவில்,அக்கரைப்பற்று பகுதிகளில் பதற்றம் நிலவியது. தென்பகுதியில் காலி மாவட்டத்தில் இரு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. ஒரே கட்சி ஆதரவாளர்களிடையே இந்த மோதல்கள் இடம்பெற்றதாக அறியவருகிறது.
ஏனைய பொதுத் தேர்தலுடன் ஒப்பிடும்போது வாக்களிப்பு மிகவும் குறைவாகக் காணப்பட்டது. யாழ்ப்பாணத்தில் 1617 வீத வாக்களிப்பே இடம்பெற்றதாக அறியவருகிறது. இடம்பெயர்ந்த மக்கள் வாக்களிக்க உரிய வசதிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை என்று கூறியுள்ளார்.
இதேவேளை, சுதந்திரமானதும் நியாயமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான பிரசார அமைப்பு (கபே)கருத்துத் தெரிவிக்கையில்;நாடளாவிய ரீதியில் வாக்களிப்பு வீதம் 5055 வீதமாகவுள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் 74 சதவீதம் வாக்களிப்பு இடம்பெற்றது என்று கூறியுள்ளது.
இது இவ்வாறிருக்க நேற்றைய தேர்தலானது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஆளுங்கட்சிக்கு அறுதிப் பெரும்பான்மை பலத்தைக் கொடுக்குமென எதிர்பார்க்கப்பட்டது.
“தேர்தல் முடிவுகள் ஏற்கனவே வெளிவந்துவிட்டதாக மக்கள் உணர்கிறார்கள். ஆதலால் ஏன் வாக்களிக்க வேண்டுமென அவர்கள் கருதுகின்றனர். நான் வாக்களிக்கவில்லை என்று மட்பாண்டப் பொருட்களை விற்பனை செய்யும் ஜி.பிரியந்த (36 வயது) என்பவர் ஏஎவ்பி செய்திச் சேவைக்குத் தெரிவித்தார். அதே
சமயம், புலிகளுடனான மோதலை முடிவுக்குக் கொண்டு வந்ததற்காக ராஜபக்ஷவின் கட்சிக்குத்தான் வாக்களித்ததாக செச்மினி சதுரிகா என்ற பெண் கூறினார். இலங்கையின் சகல பகுதிகளிலுமிருந்தும் கிடைத்த செய்திகளின் பிரகாரம் சிறிய எண்ணிக்கையானவர்களே வாக்களித்ததாக அறிய வருகிறது என்று கொழும்பிலுள்ள தேர்தல் அதிகாரியொருவர் கூறினார். நேற்றைய தேர்தலில் 19 ஆயிரம் சுயாதீனக் கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். ஆனால், முறைகேடுகளை தடுத்து நிறுத்தக்கூடிய அதிகாரம் அவர்களுக்கு இல்லை. இது இவ்வாறிருக்க பாரதூரமான சம்பவங்கள் எதுவும் இடம்பெற்றிருக்கவில்லை என பொலிஸ் பேச்சாளர் பிரசாந்த ஜயக்கொடி கூறினார்.
தேர்தல் முடிவுகள் வந்துவிட்டன.
இனி என்ன அடுத்த தேர்தல் மட்டும் இவர்கள் தான் எம்மை பிரதிநிதிப் படுத்தப்போகிறார்கள்.
நாம் எதிர்பார்த்தவர்கள் வந்தார்களோ இல்லையோ முடிவுகளை விரிவாகப் பாப்போம்.
முக்கியமாக யாழில் எதிர்பார்த்த
Pathmanabha Eelam Revolutionary Liberation Front 1,821 (1.23%)
Group 6 JAFFNA 1,038 (0.70%)
வன்னியில்:
Democratic People’s Liberation Front 5,900 (5.52%)
Independent Group 6 VANNI 31 (0.03%)
யாழில் 721,359 பதிவு செய்த வாக்காளர் இருந்தும்
168,277 (23.33%) பேரே வாக்களித்த நிலையில்,
வன்னியில் 266,975 பதிவு செய்த வாக்காளர் இருந்தும்
117,185 (43.89%) பேரே வாக்களித்த நிலையில் வரும் மாகான சபை தேர்தல் உண்டு, அதில் எம்வாக்குகளை பிரிக்காமல் எம் தமிழர்களின் ஒற்றுமையைக் காட்டவேண்டும்.
விரிவான “நடந்து முடிந்த தேர்தலில் தமிழ் வாக்காளர்களின் நிலை…. ஓர் கண்ணோட்டம்” பின் தொடரும்….
– அலெக்ஸ் இரவி
7 ஆவது பாராளுமன்றத்திற்கு நேற்று முன்தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற தேர்தலின் பெறுபேறுகள் முழுமையாக அறிவிக்கப்படாத நிலையில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அறுதிப் பெரும்பான்மை பலத்தைப் பெற்று அமோக வெற்றியீட்டியிருப்பதுடன், அக்கட்சி ஏற்கனவே தெரிவித்திருந்த 2/3 பெரும்பான்மைப் பலத்தைப் பெற்றுக்கொள்வதற்கு இன்னமும் குறைந்த தொகை ஆசனங்களே தேவையாக உள்ளது.
நேற்று வெள்ளிக்கிழமை மாலை வரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட 180 ஆசனங்களில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 120 ஆசனங்களைப் பெற்றிருந்தது. அரசாங்கத்தை அமைப்பதற்கு 112 ஆசனங்கள் போதுமானதாகும். 225 எம்.பி.க்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் அரசியலமைப்புத் திருத்தத்தை மேற்கொள்வதாயின் 2/3 பெரும்பான்மைப் பலம் தேவைப்படுகின்றது. அதற்கு 150 ஆசனங்கள் தேவை. ஆனால், ஆளும் கட்சி அந்த இலக்கை எட்டாவிடினும் சிறிய தொகை ஆசனங்களை எதிர்த்தரப்பிலிருந்து திரட்டிக் கொள்வதற்கான வாய்ப்புகள் ஆளும் கட்சிக்குக் காணப்படுகின்றன.
தமிழ் பேசும் மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே 13 ஆசனங்களைப் பெற்று தனிப்பெருங்கட்சியாக மீண்டும் தோற்றம் பெற்றுள்ளது. தென்னிலங்கையில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தலைமையினால் ஐ.தே.மு.விலும் பார்க்க பாரிய இடைவெளி வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.
கொழும்பில் ஐ.ம.சு.மு. 10 ஆசனங்களையும் ஐ.தே.க. 7 ஆசனங்களையும் ஜெனரல் சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயக தேசியக் கூட்டணி 2 ஆசனங்களையும் பெற்றுள்ளன.
இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலிலும் பாராளுமன்றத் தேர்தலிலும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பாரிய வெற்றியீட்டியிருப்பதானது, இலங்கையின் இன நெருக்கடி, அரசியல் தீர்வு காண்பதற்கான கருத்தொருமைப்பாட்டை சம்பந்தப்பட்ட சகல தரப்பினர் மத்தியிலிருந்தும் ஏற்படுத்திக் கொள்வதற்கு ஜனாதிபதிக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்பென்று அரசியல் விமர்சகர்களும் இராஜதந்திரிகளும் கருத்துகளைத் தெரிவித்திருக்கின்றனர்.
தேர்தல் பிரசாரத்தின் போது அரசியலமைப்பில் தேவையான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு பலம் வாய்ந்த பாராளுமன்றம் ஒன்று அவசியமென ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ திரும்பத் திரும்ப கூறிவந்துள்ளார். சிறுபான்மையினர் குறிப்பாக தமிழ் மக்களின் நியாய பூர்வமான கவலைகளுக்கு பரிகாரம் காண்பதற்கான அரசியல் தீர்வை காண்பதற்கு அரசியல் அமைப்பு ரீதியான மாற்றம் தேவைப்படுகின்றது.
வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிகளவு ஆசனங்களைப் பெற்றிருக்கும் நிலையில் அரசியல் தீர்வை அமுல்படுத்துவதற்குத் தேவையான அரசியலமைப்பு மாற்றத்தை மேற்கொள்வதற்கு வேண்டிய ஆசனங்களின் எண்ணிக்கையை தமிழ்க் கட்சிகளிடமிருந்தும் எதிரணியிடமிருந்தும் ஜனாதிபதி திரட்டிக் கொள்வதற்கான வாய்ப்பு இப்போது ஏற்பட்டிருக்கிறது.
தேர்தல் முடிவுகள் ஜே.வி.பி.யின் வாக்கு வங்கி வீழ்ச்சி கண்டிருப்பதை வெளிப்படுத்துகின்றது. பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க.வின் வாக்குகள் வீழ்ச்சிகண்ட தன்மையையும் இப்பெறுபேறுகள் எடுத்துக் காட்டுகின்றன.
இது இவ்வாறிருக்க அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி இரு தடவையே பதவி வகிக்க முடியும் ஆனால், இந்த இருவருட பதவிக் கால எல்லையை மாற்றியமைப்பதற்கு சில சமயம் ஜனாதிபதி எதிர்பார்க்கக் கூடும். அதாவது, 2/3 பெரும்பான்மை பலத்துடன், அதனை மேற்கொள்ள கூடுமென தேசிய சமாதானப் பேரவையான தலைவர் ஜெகான் பெரேரா “வொய்ஸ் ஒப் அமெரிக்கா வுக்கு தெரிவித்திருக்கிறார்.
பாராளுமன்றத்தில் அதிகளவுப் பெரும்பான்மைப் பலத்தைப் பெற்றுக் கொள்வதானது ராஜபக்ஷ விரும்பிய எதனையும் செய்யக் கூடியதற்கு இடமளிப்பதாக அமையுமென்று மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் தலைவர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து கூறியுள்ளார். “இதுவே கவலையளிக்கும் விடயமாகும். நாட்டின் ஜனநாயகத்திற்குத் தாக்கத்தை ஏற்படுத்துவதாக அது அமையக் கூடும்%27 எனவும் அவர் கூறியுள்ளார்.
நன்றி! தினக்குரல்