வவுனியா சிறைச்சாலையில் வைத்து மிருகத்தனமான முறையில் தாக்கப்பட்ட தமிழ்க் கைதிகளில் படுகாயமடைந்த 32 பேர் மகர சிறைச்சாலைக்குக் கொண்டுவரப்பட்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களில் மூவரின் நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும் பிந்திக் கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்களுக்கு மருத்துவ வசதிகளோ மாற்று உடைகளோ வழங்கப்படவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக கம்பஹா மாவட்டத்திலுள்ள மகர சிறைச்சாலையிலிருந்து அதிர்ச்சியான பல தகவல்கள் கிடைத்துள்ளன.
வவுனியா சிறைச்சாலையில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற சம்பவத்தின்போது அதிரடிப்படை மற்றும் இராணுவத்தின் மிலேச்சத்தனமான தாக்குதலில் படுகாயமடைந்த பலர் அநுராதபுரம் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட அதேவேளையில் 32 கைதிகள் கடுமையான காயங்களுடன் இரத்தம் வழிந்தோடிய நிலையில் மகர சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டமை இப்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை நள்ளிரவுக்கு மேல் மகர சிறைச்சாலைக்குக் கொண்டுவரப்பட்டஇவர்களுக்கு இன்று காலை வரையில் மாற்று உடைகள் வழங்கப்படவில்லை. வவுனியா சிறைச்சாலையில் தாக்கப்பட்டதால் ஏற்பட்ட இரத்தம் தோய்ந்த ஆடைகளுடனேயே இவர்கள் அங்கிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனைவிட இவர்கள் அனைவரும் விடுதலைப் புலிகள் அமைப்பின் சந்தேக நபர்கள் எனக் கூறப்பட்டு இவர்களுக்கு மருத்துவ வசதிகளும் செய்துகொடுக்கப்படாமையால் இவர்கள் உயிருக்குப் போராடிக்கொண்டுள்ளார்கள்.
இவர்களில் மூவரின் நிலை மிகவும் மோசமாக இருப்பதால் அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்கள். இருந்த போதிலும் அங்கும் அவர்கள் சரியான முறையில் கவனிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. இதனைவிட படுமோசமாகக் காயமடைந்த இருவர் நிலை தொடர்பாக அறியமுடியாமலிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக அரசாங்கமோ சிறைச்சாலைகள் அமைச்சோ தகவல்களை வெளியிட மறுத்துவருகின்றது.
இதேவேளையில், வவுனியாவிலிருந்து மகர, போகம்பர மற்றும் அநுராதபுரம் சிறைச்சாலைகளுக்கு மாற்றம் செய்யப்பட்டவர்களின் நிலை தொடர்பில் அவர்களின் பெற்றோருக்குத் தெரியப்படுத்தப்படாமையால் அவர்கள் பெரிதும் அச்சமடைந்த நிலையில் காணப்படுகின்றார்கள். இது தொடர்பில் எந்தவொரு தகவலையும் அறிந்துகொள்ள முடியாமலிருப்பதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றார்கள்.
Obviously some brutal force was used to put down this uprising, They are not regular prisoners. It is time somebody do something about this.