வவுனியா முகாம்களில் உள்ளவர்களை டொல்பின் ரக வான்களில் வரும் குழுவொன்று நாள்தோறும் கடத்திச் செல்வதாக பி.பி.சீ.யின் சிங்கள சேவையான சந்தேசய தெரிவித்துள்ளது. டொல்பின் ரக வேன்கள் முகாமிற்குள் பிரவேசித்தால் மக்கள் பெரும் பீதியடைவதாகவும், தமது கூடாரங்களுக்குள் மறைந்து கொள்வதாகவும் அந்த செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.
நாள்தோறும் குறைந்தபட்சம் இரண்டு மூன்று பேர் கடத்திச் செல்லப்படுவதாக முகாமிலுள்ள உள்ள ஒருவர் தகவலளித்தார். அதிகாரிகளுக்கு பணத்தை வழங்குவதன் மூலம் சிலர் தப்பிச் செல்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடத்தப்படுகின்றார்களா அல்லது பணத்தை கொடுத்து தப்பிச் செல்கின்றார்களா என்பது தெளிவாகவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
உறவினர்களை பார்வையிடச் செல்லும் பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். குறிப்பாக அதிக முகாம்களுக்குள் சென்று மக்களை பார்வையிடுவதற்கு அனுமதி வழங்கப்படுவதில்லை. ஏதேனும் பொருட்களை அகதிகளுக்கு வழங்க வேண்டுமாயின் தூரத்தில் இருந்து பொருட்களை வீசி எறிய வேண்டும். இவ்வாறான நிலையே முகாமகளில் காணப்படுகிறது.
மழை வெள்ளத்துடன் கூடிய காலநிலையினால் மக்கள் பெரும் இன்னல்களை எதிர்நோக்கி வருவதாகவும் பி.பி.சீ சுட்டிக்காட்டியுள்ளது.