வடக்கு மாகாணத்தின் எல்லையில் அமைந்துள்ள வவுனியா தெற்கு பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் விவசாயிகள் என்ற போர்வையில் 2 ஆயிரம் சிங்களக் குடும்பங்களைக் குடியேற்றும் திட்டம் ஒன்று படையினரின் ஆதரவுடன் அரசினால் திரைமறைவில் மேற்கொள்ளப்படவுள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை அரசின் இனச்சுத்திகரிப்பு தீயென எரியும் வேளையில் தமிழ்க் கட்சிகள் இலங்கை அரசையும் அன்னிய நாடுகளையும் அண்ணார்ந்து பார்த்தவண்ணம் உள்ளன. அதே வேளை சிங்கள பேரினவாதிகள் சுய நிர்ணய உரிமையின் குறைந்தபட்ச அம்சங்களைக்கூட அங்கீகரிக்க மறுத்து இலங்கை அரசின் இனச்சுத்திகரிப்பிற்குத் துணை போகின்றனர்..
இதற்கான வேலைகள் முழு மூச்சாக முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் குடி யேற்றப்பட்ட குடும்பங்களுக்கு ஒரு ஏக்கர் காணி வீதம் வழங்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.
மனிதாபிமான விவசாய உற்பத்தி நடவடிக்கைச் செயற்றிட்டத்தின் கீழ், வவுனியா தெற்கு பிரதேச செயலர் பிரிவுக்குட் பட்ட பகுதிகளில் 2 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.
30 வருடப் போரின் பின்னர் விவசாய நடவடிக்கைகளை மேம்படுத்தும் பொருட்டே வடக்கில் இந்த நடவடிக்கைகள். எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா தெற்கு பிரதேச பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பதவியா, சம்பத்நகர், போகஸ்வெள ஆகிய கிராமங்களில் படையினரின் 56 ஆவது படைப்பிரிவின் அனுசரணையுடன் ஆயிரம் சிங்களக் குடும்பங்கள் குடியேற்றப்பட்டுள்ளன.
மேலும் மகாவலி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் படையினரின் 72 ஆவது படைப்பிரிவின் அனுசரணையுடன் ஆயிரம் சிங்களக் குடும்பங்களும் குடியேற்றப்பட்டுள்ளன.
ஏற்கனவே திட்டமிட்டுக் குடியேற்றப்பட்ட சிங்களக் குடும்பங்களுக்கு வவுனியா தெற்கு பிரதேச செயலர் பிரிவிலுள்ள 2 ஆயிரம் ஏக்கர் காணியை பகிர்ந்தளிக்கும் நடவடிக்கைகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடும் முகமாக ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒவ்வொரு ஏக்கர் காணி வீதம் 2 ஆயிரம் குடும்பங்களுக்கும் காணிகள் பங்கிட்டு வழங்கப்படவுள்ளன.
இந்தக் குடியேற்ற நடவடிக்கைக்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ள 2 ஆயிரம் சிங்களக் குடும்பங்களுக்கும் படையினராலும், ஏனைய அரச நிறுவனங்களினாலும் உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
அத்துடன் விவசாய நடவடிக்கைகளுக்குத் தேவையான நவீன உபகரணங்கள், விதைகள் என்பனவும் வழங்கப்பட்டுள்ளன.
இதற்கு மேலதிகமாக விவசாய அபிவிருத்தி அமைச்சர் மஹிந்தயாப்பா அபயவர்த்தனவால், குடியேற்றப்படும் மக்களின் அடிப்படை வசதிகளுக்காக 10 மில்லியன் ரூபா நிதியும் உடனடியாக ஒதுக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் என்ற போர்வையில் சிங்களக் குடியேற்றங்களை வடக்கில் அதிகரிப்பதற்கே அரசு முனைப்புடன் செயற்படுவதாகத் தெரிவிக்கிப்படுகிறது.