வவுனியா மாறம்பைக்குளம் பகுதியில் வீடுவீடாகச் செல்கின்ற இராணுவத்தினர் பதிவு நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும், திருமணமாகாத இளைஞர் யுவதிகள் கைத்தொலைபேசியில் படம் பிடிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதுபற்றி அந்தப் பிரதேசத்திற்குப் பொறுப்பான பொலிசாருக்கோ கிராமசேவை அதிகாரிக்கோ அல்லது கிராம அபிவிருத்திச் சங்கத்தினருக்கோ அறிவிக்கப்படாமல் இராணுவத்தினரால் இந்தச் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வீட்டில் இருப்பவர்களின் பெயர் மற்றும் விபரங்கள் திரட்டப்படுவதுடன் திருமணம் முடிக்காத இளைஞர் யுவதிகள் கைத்தொலைபேசியில் படம் பிடிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக ஊர் முக்கியஸ்தர்கள் பிரதேச பொலிஸார் மற்றும் உயர் பொலிஸ் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது அந்தப் பதிவு நடவடிக்கை குறித்த தங்களுக்கும் தெரிவிக்கப்படவில்லையென்றும் இதுபற்றி தங்களால் எதையும் கூறமுடியாதிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டதாக ஊர்வாசிகள் தெரிவித்துள்ளனர்.
கிராமங்களில் உள்ளவர்களின் விபரம் பொதுவாக கிராமசேவை அதிகாரிகளால் திரட்டப்படுவதாகவும், கிராமசேவை அதிகாரிகளிடமே சிவில் நிர்வாக அதிகாரிகளும் மற்றும் அதிகாரிகளும் விபரம் தெரிவிக்காமல் மேற்கொள்ளப்படுகின்ற இந்த இராணுவப் பதிவினால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளதுடன் திருமணமாகாதவர்களைப் படம் எடுப்பது அவர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.