வலி.வடக்கு இடம்பெயர்ந்த மக்களிற்கு மாற்றிடம் வழங்கி குடியேற்றுவதை முற்றாக நிராகரிப்பதாக வலி.வடக்கு மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்விற்கான அமைப்பு அறிவித்துள்ளது.
ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வலி.வடக்கு நிலப்பரப்பிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் 30 இற்கும் அதிகமான முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர். அவர்களை காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையின் கைவிடப்பட்ட கற்குவாரி பகுதிகளில் குடியமர்த்த முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றது. இதனை ஏற்றுக்கொண்டால் வலி.வடக்கு நிலப்பரப்பு படையினரிற்கு கைமாறிப்போவதை என்றுமே தடுக்க முடியாதென அவ்வமைப்பின் தலைவரான சணமுகலிங்கம் சஜீவன் தெரிவித்தார்.
இன்று யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர் அரசினது மாற்றுக்காணி திட்டத்தை முற்றாக நிராகரிப்பதாக தெரிவித்தார்.
இதனிடையே வலி.வடக்கு மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்விற்காக போராடிவரும் எமது அமைப்பினை சிதைக்க சதி முயற்சிகள் ஆரம்பமாகியுள்ளது. அவ்வகையில் போலி அமைப்பொன்றை சிலர் ஏற்படுத்த முற்பட்டுள்ளனர். இத்தகைய சதி முயற்சியில் தமது சுயநல அரசியல் இலாபம் கருதி செயற்படுவதாகவும் சஜீவன் மேலும் தெரிவித்திருந்தார். அவர்கள் போராடும் மக்கள் வலுவை சிதைக்க முற்படுவார்கள். ஆனாலும் எமது அமைப்பு தொடர்ந்தும் வலி.வடக்கு நில விடுதலைக்காக போராடுமென அவர் மேலும் தெரிவித்தார். கூட்டமைப்பின் வலி.வடக்கு பிரதேச சபையின் பிரதி தவிசாளராக சஜீவன் இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே வலிகாமம் வடக்கு இடம்பெயர்ந்தோர் மீள்குடியமர்விற்காக போராடி வரும் அமைப்பு பிரதிநிதிகளை பேச்சிற்கு வருமாறு யாழ்.மாவட்ட இராணுவத்தலைமை அழைப்பு விடுத்துள்ளது.தற்போது பெருமெடுப்பினில் முன்னெடுக்கப்பட்டிருந்த போராட்டத்தின் தொடர்ச்சியாக அடுத்த கட்டப்போராட்டங்ளை வலி.வடக்கு இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்விற்கான அமைப்பு திட்டமிட்டு வருகின்றது.இந்நிலையினில் அப்பட்டமாக நீதிமன்ற உத்தரவினை தாண்டி முன்னெடுக்கப்படும் இடித்தழிப்பு நடவடிக்கைகளை கண்டித்தும் காணி சுவீகரிப்பு தொடர்பினில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை துரிதப்படுத்த கோரியுமே அடுத்த கட்டப்போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளது.