I
கிழக்கு ஐரோப்பிய நாடான போலந்தில் வாழ்ந்த இரண்டு தமிழ் நாவலாசிரியர்கள் தமது அனுபவங்களின் அடிப்படையில் இரண்டு தமிழ் நாவல்கள் எழுதியிருக்கிறார்கள். இருவரும் தமிழ் பேராசிரியர்கள். வார்ஸா பல்கலைக் கழகத்தில் தமிழ் கற்பிப்பதற்காக போலந்து சென்றவர்கள். ஐந்தாண்டு காலங்கள் போலந்தில் தமிழ் மொழி கற்பித்தவர் நாவலாசிரியர் இந்திரா பார்த்தசாரதி. அவரது ‘ஏசுவின் தோழர்கள்’ எனும் நாவல் 1987 ஆம் ஆண்டு முதல்பதிப்பு வெளியாகியது. மூன்றே முக்கால் வருடங்கள் போலந்தில் தமிழ் கற்பித்தவர் தமிழவன். தமிழவனின் நாவலான ‘வார்ஸாவில் ஒரு கடவுள்’ 2007 ஆம் ஆண்டு வெளியாகியது. இந்திரா பார்த்தசாரதியின் நாவலுக்கும் தமிழவனின் நாவலுக்கும் இடையில் இருபதாண்டு கால இடைவெளி இருக்கிறது.
இந்திரா பார்த்தசாரதியின் நாவல் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் நிலவிய சோசலிசத்தின் வீழ்ச்சிக்கு(1989) இரண்டு ஆண்டுகள் முன்பாகவும்(1987) தமிழவனது நாவல் சோசலிசத்தின் வீழ்ச்சிக்குப் பின்பாக எட்டு ஆண்டுகள் (2007) கழித்தும் வெளியாகி இருக்கிறது. நிலவிய சோசலிச அமைப்புக்கு எதிராகத் தோன்றிய லெச் வலேசாவின் சொலிடாரிட்டி இயக்கம் போலந்தில் உச்சத்தில் இருந்தபோது இந்திரா பார்த்தசாரதியின் கதை நிகழ்கிறது. வார்ஸா பல்கலைக் கழகத்தில் மாணவர்களின் ஈராக் எதிர்ப்பு அரசியல் காலகட்டத்தில் தமிழவனின் கதை நிகழ்கிறது. இந்திரா பார்த்தசாரதியின் நாவல் அதனது தனித்துவ அர்த்தத்தில் போலந்து-இந்தியா என இரு நாடுகளும் குறித்த, நடைமுறை அதிகார வர்க்க அரசியல் குறித்த, ஒப்பீட்டு நாவல் என வரையறுக்கலாம். தமிழவனது நாவல் போலந்து-இந்தியா எனும் இரு நாடுகள் குறித்த – வர்க்கம்-இனம்-சாதி-பால்வேற்றுமை-அதிகரம் போன்ற குறிப்பான – அரசியல் தவிர்ந்த, கருத்துக்களத்தில் – மேற்கத்திய மற்றும் கீழைக் கலாச்சாரம் எனும் எதிர்மையின் இடையில் – இயங்கும் ஒப்பீட்டு நாவல் என வரையைறுக்கலாம்.
‘தமிழில் எழுதப்பட்ட ஒரு ஆங்கில நாவல் என்று பேசப்பட்ட ஏசுவின் தோழர்கள் தற்போது ஆங்கிலத்திலும் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது’ என இ.பாவின் நாவல் குறித்து அதனது நான்காம் பதிப்பின் (கிழக்கு பதிப்பகம் : 2006) பின்னட்டை வாசகம் கூறுகிறது. தமிழவனின் நாவல் போலந்து நாட்டின் தலைநகர் வார்ஸாவை பின்புலமாகக் கொண்டிருந்தாலும் ஒரு தமிழனின் பார்வையில் அமைகிறது. ‘ஐரோப்பியக் கலாச்சாரத்திற்குள் ஒரு கிழக்கத்திய கலாச்சார முகமிருப்பதையும் இந்தக் கலாச்சாரத்தின் விவரிக்கமுடியாத புதிர்களையும் எளிய புதுமையான கதையமைப்பில் முன்வைக்கிறது’ என நூலின் பின்னட்டை (உயிர்மை பதிப்பகம் : 2007) குறிப்பு கூறுகிறது. இந்த நாவல் குறித்து தமிழவன் இப்படிக் கூறுகிறார் : ‘அதுவரை படிக்க கிடைக்காத பலநாட்டு கிளாசிக்குகள் எனக் கருதப்படும் நாவல்களை எல்லாம் படித்துக் கொண்டிருந்தேன். அவற்றின் தாக்கம் இந்த நாவலில் இருக்கலாம். நாவல்களையோ நாவலையோ பார்த்து எழுதுவதுதான் ஒரு புதிய நாவல் என்பது எனது பழைய கோட்பாடு‘. இ.பா தனது நான்காவது பதிப்புக்கான முன்னுரையில் அமெரிக்காவிலிருந்து இவ்வாறு குறிப்பிடுகிறார் : ‘இருபது ஆண்டுகளுக்குப் பிறகு.. ..இப்போது (இந்நாவல்) மீண்டும் வெளியிடப்படும் இக்கால கட்டத்தில், உலக அரசியலில் பல மாறுதல்கள் ஏற்பட்டுவிட்டன. சோவியத் சாம்ராஜ்யம் வீழ்ந்து, கிழக்கு ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் தங்களது சுதந்திரத்தைப் பிரகடனம் செய்துவிட்டன. போலந்து இப்போது ஐரோப்பியக் கூட்டமைப்பில் சேர்ந்துவிட்டது. ஆகவே இந்நாவலை இப்போது படிக்கின்றவர்களுக்கு, இது வரலாற்று சுவாரஸ்யமாக இருக்கக் கூடும்’.
கிழக்கு ஐரோப்பிய வீழ்ச்சிக்குப் பின்னர் போலந்து நாவல்கள் நிறைய ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படும் சூழலில் தமிழவனது போலந்து குறித்த நாவலும் ஆங்கிலநாவல் இயங்கும் உலகவெளிக்கு வருவதற்கான சாத்தியங்கள் அதிகம். நாவல் குறித்த இரு பதிப்பாளர்களின் அறிமுக வாசகங்கள், தமிழவனின் நாவல்கோட்பாடு, இ.பாவின் இருபதாண்டுகளின் பின்பான அவதானம் போன்றவை இந்த நாவல்களின் அனுபவமட்டத்தை தமிழ்மொழிக்கு வெளியில் ‘உலக’ மட்டத்துக்கு இந்நாவல்களை திட்டமிட்டு எடுத்துச் செல்கின்றன. இந்நாவல்கள் தமிழில் எழுதப்பட்டாலும், ‘உலக’ அளவில் ‘தென்னாசிய இலக்கியம்’ அல்லது ‘பின்காலனிய இலக்கியம்’ என்பது குறித்தான ‘மேற்கத்திய விவாதங்களின்’ உள்வைத்தே இந்த இருநாவல்களையும் நாம் மதிப்பிட வேண்டியிருக்கிறது.
II
உலக அளவில் தெற்காசிய நாவல்கள் பெறும் இடம் பற்றின சில அவதானங்களை நாம் மேற்கொள்வோமானால், கட்டுரையாளர் வாழும் இங்கிலாந்திலுள்ள யார்க்ஸயர் பகுதியின் வட்போரட் நகரத் தலைமைநூலக வாசிப்பறையிலிருந்து அதனைத் துவங்குவோம். இந்த நூலகத்தில் பத்தாயிரம் நாவல்கள் உள்ளன. வெகுஜன ரசனை சார்ந்த பளபளப்பான அட்டை கொண்ட நாவல்களை விலக்கிவிட்டால், இலக்கிய நாவல்கள் என்று கருதப்படுபவை மட்டுமே 6000 நாவல்கள் தேறும். மேற்கத்தியர்களால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட நாவல்கள் 3000 எனக் கொள்வோமானால், ஆங்கிலத்திலுள்ள பிற நாவல்களில் 1500 நாவல்கள் உலக இலக்கிய மொழிபெயர்ப்புக்களாகவும் 1500 நாவல்கள் தெற்காசிய நாவல்களாகவும் இருக்கும்.
தெற்காசிய நாவல்களில் இந்தியா அல்லாத தெற்காசிய நாடுகளில் இருந்து வந்த நாவல்கள் 250 நாவல்களையும் கூடத் தாண்டது. பிற 1250 நாவல்களும் இந்தியாவை மையமாகக் கொண்ட ஆங்கில நாவல்களாகத்தான் இருக்கிறது. இந்த நாவல்களிலும் 1000 நாவல்கள் இந்தியர்களால் நேரடியாக ஆங்கிலத்தில் எழுதப்பட்டதாகவும், 250 நாவல்கள் இந்தியாவின் பிராந்திய மொழிகளில் எழுதப்பட்ட நாவல்களின் ஆங்கில மொழிபெயர்ப்புக்களாகவும் இருக்கிறது.
இந்தியர்களால் நேரடியிலாக எழுதப்பட்ட நாவல்களிலும் இரு போக்குகள் உண்டு. மேற்கிலும் அமெரிக்காவிலும் வாழும் இந்தியர்களால் எழுதப்படும் நாவல்கள் ஒருவகை. இந்தியாவில் வாழும் உள்ளூர் எழுத்தாளர்களால் எழுதப்படும் நாவல்கள் பிறிதொரு வகை. முன் வகைக்கு ஸல்மான் ருஸ்டியையும் பின்னதற்கு பங்கஜ் மிஸ்ராவையும் குறிப்பிடலாம். இந்தியாவிலிருந்து ஆங்கிலத்தில் நேரடியாக எழுதப்பட்ட நாவல்களிலும் இருவகையான போக்குகளை நாம் அவதானிக்கலாம். மேற்கத்திய பாத்திரங்களைப் பகுதியாகவும் இந்தியப் பாத்திரங்களைப் பகுதியாகவும் கொண்ட நாவல்கள் ஒரு வகை என்றால், முழுக்க முழுக்க இந்தியப் பாத்திரங்களையே கொண்ட நாவல்கள் பிறிதொரு வகையாக இருக்கும். முதல் வகைக்கு பங்கஜ் மிஸ்ராவின் ‘ரொமான்டிக்ஸ்’ நாவலையும், இரண்டாம் வகைக்கு (ஆர்.கே.நாராணன் மற்றும் ராஜாராவ் வழியிலான) அருந்ததி ராயின் ‘காட் ஆப் ஸ்மால் திங்க்ஸ்’ நாவலையும் நாம் குறிப்பிடலாம்.
தெற்காசிய இலக்கியம் மேற்கில் கொடி கட்டிப் பறப்பதற்கான இரண்டு இலக்கியக் காரணங்கள் உண்டு. ஒன்று நமது நாடுகளில் பிரச்சினைகள் என்பது குவிந்து கிடக்கிறது. மேற்கில் ஒரு படைப்பு வெற்றிடமும் ஆன்மீக வெற்றிடமும் உருவாகியிருக்கிறது. பௌத்த நெறி இந்துத்துவம் போன்றவை குறித்த ஆய்வில் மேற்கத்தியர்கள் அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள். இந்தப் பிரச்சினைகளைத் தான் பெரும்பாலுமான ஆங்கிலத்தில் எழுதும் தெற்கு ஆசிய எழுத்தாளர்கள் கையாள்கிறார்கள். ஜாதியம், வறுமை, பாலுறவு, காமசூத்ரா, இனப்பிரச்சினை, மத வன்முறை, அடிப்படைவாதம் போன்றவற்றை இவர்களுடைய நாவல்கள் பேசுகின்றன. இரண்டாவதாக மேற்கத்தியர்களின் அனுபவத்துக்கு மாற்றாக புதிதான அனுபவத்தை கற்றுக் கொண்ட செய்நேர்த்தியுடன் தெற்காசிய எழுத்தாளர்கள் முன்வைக்கிறார்கள். ஒரே சமயத்தில் மேற்கத்தியன் அதே சமயம் மேற்குக்கு அன்னியன் எனும் புலம்பெயர் அனுபவத்தையும் இவர்கள் படைப்புகளில் முன் வைக்கிறபோது, பிற புலம் பெயர் மக்களான ஆப்ரிக்க மத்தியகிழக்கு இலத்தீனமெரிக்கர்களும் இவர்களது எழுத்தில் தமது முகங்களைக் காண்கிறார்கள். இப்படியெல்லாம் ஆசிய ஆங்கில எழுத்தாளர்கள் தான் இன்று உலக அளவில் வெற்றிகரமான வணிகரீதியிலும் வெற்றிகரமான எழுத்தாளர்களாக இருக்கிறார்கள்.
III
எனது வாசிப்பிலான ஐந்து தென்னாசிய நாவல்களை முன்வைத்து இ.பா.வினதும் தமிழவனதும் நாவல்களை அணுகுவது பொருத்தமானது என நினைக்கிறேன். இந்தியா குறித்த மூன்று நாவல்களை தென்னிந்தியரான அருந்ததி ராயும் (God of Small Things), வட இந்தியரான பங்கஜ் மிஸ்ராவும் (Romantics) இங்கிலாந்திலும் இந்தியாவிலும் பகுதியாக வாழும் அரவிந்த் அடிகாவும் (The White Tiger) எழுதியிருக்கிறார்கள. இலங்கை குறித்த இரண்டு நாவல்களை கனடாவில் வாழும் மைக்கேல் ஒண்டாஜியும் ( Anil’s Ghost) இங்கிலாந்தில் வாழும் அ.சிவானந்தனும் (When Memory Dies) எழுதியிருக்கிறார்கள்(1).
இந்திய நாவல்களில் அருந்ததி ராயின் நாவல் முழுக்க முழுக்க இந்திய வாழ்வையும் இந்தியப் பாத்திரங்களையும் கொண்டு உருவான நாவல். எழுபதுகளின் கேரள சமூகம், கேரள கம்யூனிசம், கம்யூனிஸ்ட்டுகளிடம் நிலவிய சாதியம் மற்றும் இந்து வைதீக மனம், நக்ஸலிசம், பார்ப்பனிய மதிப்பீடுகளால் உள்வாங்கப்பட்ட சிரியன் கிறிஸ்தவ சமூகத்தின் தீண்டாமை, பெண் வெறுப்பு போன்றவற்றைப் பேசும் நாவல் இது. விவாகரத்தான பெண்ணின் வாழ்வையும், பாலியல் சுரண்டலுக்கும் உள்ளாகும் குழந்தைகள் பற்றியும் பேசிய நாவல் இது.
பங்கஜ் மிஸ்ராவின் நாவல் இந்தியாவின் ஆன்மீகத் தலங்களான காசி, புதுச்சேரி அரவிந்தர் ஆஸ்ரமம், வடகிழக்கு புத்த தலங்கள் போன்ற நகரங்களில் நடக்கும் கதை ஆயினும், இதனது பாத்திரங்களில் பகுதிமனிதர்கள் மேற்கத்தியர்-பிரெஞ்சு தேசத்து மற்றும் இங்கிலாந்துப் பெண்கள். இந்து மதத்திலும் இந்திய சாஸ்த்ரீய இசையிலும் ஆன்மீகத் தேட்டத்தை நாடி இந்தியா வந்தவர்கள். பிறபகுதிப் பாத்திரங்கள் பார்ப்பனக் கலாச்சாரம், சாதியம், இந்துத்துவம், வன்முறை அரசியல் போன்றவற்றின் இடையில் இயங்க நேர்ந்தவர்கள். மேற்கத்திய இலக்கியத்திலும் பொருளியல் கண்ணோட்டத்திலும்; மீட்சியைத் தேடுகிறவர்களாக இந்தியர்கள் இருக்கிறார்கள். வேறு வேறு கலாச்சாரங்களில் தமது மீட்சியைத் தேடி இறுதியில் தத்தமது கலாச்சாரங்களுக்குள் சென்று சேரும் மனோரதியர்கள் பற்றிய கதை இது. இந்திய அணுக்கும் மேலைத்தேயப் பெண்ணுக்கும் இடையிலான உடலுறவு சம்பவங்களைக் கொண்டது பங்கஜ் மிஸ்ராவின் நாவல்.
நாவல் கலாச்சாரத்தின் பகுதியாக உலகத் திரைப்பட வெளியிலும் நடந்திருக்கும் சில மாற்றங்களையும் நாம் அவதானிக்க வேண்டி இருக்கிறது. இந்திய மும்பை மைய படங்களில் மட்டுமல்ல, பிராந்திய மொழிப் படங்களிலும் மேற்குல அமெரிக்கப் பாத்திரங்கள் தற்போது இடம்பெறுகிறார்கள். இந்தியப் படங்களும் முழுக்க முழுக்க அமெரிக்காவிவும் மேற்கிலும் எடுக்கப்படும் படங்களும் அதிகரித்து வருகிறது. இந்தியாவை முன்வைத்து மேற்கத்தியர்களும் படமெடுத்து வருகிறார்கள். அமெரிக்க இந்தியரான மீரா நாயரின் ‘மான்சூன் வெட்டிங்’, கேரள இயக்குனரான சந்தோஷ் சிவனின் ‘பிபோர் த ரெயின்’, ஹாலிவுட் இயக்குனரான டோனி போயிலின் ‘ஸ்லம் டாக் மில்லியனேர்’ போன்ற நேரடியிலான ஆங்கிலப் படங்களை இப்படியான படைப்பு முயற்சிகளாகக் கொள்ளலாம். இதே அளவில் இலங்கைப் பிரச்சினையை முன்வைத்து கேரள இயக்குனரான ராஜேஷ் தொடுபுழாவின் இயக்கத்தில் இங்கிலாந்தில் வாழும் இலங்கை-இந்தியர்கள் ‘இன் த நேம் ஆப் புத்தா எனப் படமெடுத்தார்கள். கனடியர்கள் இலங்கைப் பிரச்சினையை வைத்து ‘வெல்கம் டு கனடா‘, ‘நோ மோர் டியர்ஸ் சிஸ்டர்’ எனப் படமெடுத்தார்கள். நார்வேஜியர்கள் ‘மை டாட்டர், டெரரிஸ்ட்’ எனப் படமெடுத்தார்கள்.
கனடாவில் வாழும் இலங்கையரான நாவலாசிரியர் மைக்கேல் ஒன்டாஜி அடிப்படையில் அரசியலில் இருந்து விஷயங்களைத் தொடங்குவது இல்லை. நடைமுறை அரசியல் சம்பந்தமான அவருடைய வெறுப்பை அவர் பல சந்தர்ப்பங்களில் சொல்லியிருக்கிறார். அவர் நம்முடைய காலத்தில் மனிதனுக்கு நேர்கிற சில அடிப்படையான மானுட அவலங்களில் இருந்துதான் பிரச்சினையைத் தொடங்குகிறார். உலகப் போர்கள் உள்நாட்டுப் போர்களினால் மடடுமல்ல இப்போது பொருளியல் காரணங்களால் கூட இடப் பெயர்வு நடந்து கொண்டிருக்கிறது. இந்த இடப்பெயர்வினால் மூன்று நான்கு தலைமுறைக்கு முன்பே மேற்குக்கு வந்தவனுக்கு தன்னுடைய சொந்தத் தாய் நாட்டுக்கான கடமை அல்லது பொறுப்பு என்பதுதான் என்ன? அவனுடைய மதிப்பீடுகள் தனது சொந்த தேசம் சார்ந்த தேசபக்த மதிப்பிடுகளா? அல்லது தனது புதிய வாழ்நிலை அனுபவங்கள் சார்ந்து தனது சொந்த தேசத்துக்கு துரோகம் செய்கிற மதிப்பீடுகளா? இப்படி நிறைய மனிதர்கள் நம் காலத்தில உருவாகிவிட்டார்கள். ஒன்டாஜியும் அவர்களில் ஒருத்தர்தான். நம் காலத்திலிருக்கிற இந்த அறவியல் பிரச்சினையை ஜே.வி.பி பிரச்சினையின் கால கட்டத்தை எடுத்துக் கொண்டு ‘அனில்ஸ் கோஸ்ட்’ நாவலில் சித்திரிக்க அவர் முயல்கிறார்
அரசியல் அடிப்படையில் ஆன்மீக அளவில் புத்த மதத்துக்கு அனுசரனையான பார்வை அமெரிக்காவிலும் மேற்கிலும் இருக்கிறது. இந்த வகையில் பிராட் பிட் நடித்து ‘செவன் டேஸ் இன் திபெத்’ படம் வருகிறது. ‘குன்டன்’ படம் வருகிறது. பிராட்பிட், ஹரிசன் போர்ட், ரிச்சர்ட் கீர், மார்ட்டின் ஸ்கோர்சிஸே போன்ற பெரிய ஹாலிவுட் பட்டாளம் புத்தமதம் பின்னாடி இருக்கிற இன்றைய சூழலில், இந்தப் பௌத்தம் சம்பந்தமான சித்தரிப்பு புத்தக வியாபாரத்துக்கு இங்கு பயன்படக் கூடிய விஷயம் என்பதில் யாதொரு சந்தேகமுமில்லை.
எந்த மதமும் போலவே புத்த மதமும் பாசிசத்துக்குத் துனை போகும் என்கிற விஷயத்தைச் சொல்லத்தான் இன்று கலைஞர்கள் தேவை. வாசகர்கள் என்று எடுத்துக் கொண்டாலும் புத்தமதம் பற்றி பெருமிதமாகப் பேசுவது என்பது தற்போது ஐரோப்பியர்களினுடைய மனத்தளத்திற்குப் போவதற்கு உடனடியான நுழைவுச் சீட்டு ஆகவும் அது இருக்கிறது. ஓன்டாஜியின் நாவலிலும் இலங்கை மற்றும் அமெரிக்க கதாபாத்திரங்கள் வருகிறார்கள்.
இலங்கை பற்றிய சிவானந்தனின் நாவல் முற்றிலும் இலங்கைத் தமிழர் வாழ்வு பற்றிய, இலங்கையில் வாழும் தமிழர்கள் மற்றும் சிங்களவர்களை மட்டுமே பாத்திரமாகக் கொண்ட நாவல். ஈழத் தமிழர் போராட்டத்தையும் அதனது எழுச்சியையும் மீட்சியையும் கதைக்களமாகக் கொண்ட நாவல். சோசலிச அரசியல், இனவாதம், ஜூலைக் கலவரம், வடகிழக்குத் தமிழர் ஆயுதப் போராட்டம், எமது சமூகங்களில் அரசியலிலும் வாழ்விலும் பெண்கள் ஏற்கும் மகத்தான பாத்திரம், அவர்கள் எதிர்கொள்ளும் வன்முறை என்பதாக நகரும் நாவல் இது.
இலங்கை குறித்த இந்த இரண்டு நாவல்களும் மேற்கில்தான் பதிப்பிக்கப்பட்டிருக்கிறது. எனினும் இந்த நாவல்களினது அணுகுமுறையும் அரசியலும் படைப்பாளிகள் தேர்வும் முற்றிலும் மாறுபடுகிறது. ஓன்டாஜி மேற்கத்திய அடிப்படையிலான மனித உரிமையை வலியுறத்த, சிவானந்தன் சோசலிசத்தையம் இனவிடுதலையையம் இணைத்த விடுதலை அரசியலை முன்வைக்கிறார்.
நான்கு நாவல்களினதும் கதை சொல்லும் முறையையொட்டி, இந்தக் கதைளின் பூர்வீக நாடுகளிலான இந்தியாவிலும் இலங்கையிலும் விவாதங்கள் நடைபெறுகின்றன. இலங்கை வாழ்வையும் இந்திய வாழ்வையும், அதனது நெருக்கடிகளையும் பிரச்சினைகளையும் இந்த நாவல்கள் சித்தரிக்கின்றனவா? இந்த குறிப்பிட்ட நாவல்கள் இயங்குகிற, சுதந்திரம் பெற்றதன் பின் இந்நாடுகளில் இன்று வரையிலுமுள்ள காலகட்டத்தின் மக்களது வாழ்வையும் கொந்தளிப்பான பிரச்சினைகளையும் இந்த நாவல்கள் பேசுகின்றனவா? அருந்ததியின் நாவலுக்கும் சிவானந்தனின் நாவலுக்கும் சில பொதுத் தன்மைகள் இருக்கின்றன. பங்கஜ் மிஸ்ராவின் நாவலுக்கும் ஒன்டாஜியின் நாவலுக்கும் சில பொதுத் தன்மைகள் இருக்கின்றன. சிவானந்தனின் நாவல் இலங்கை இந்திய சமூகம் பற்றிய, அதனது மக்கள் மற்றும் பிரச்சினைகள் பற்றிய எந்த வாசகரையும் நோக்கம் கொண்டு, பதிப்புலகின் தொழில்முறைக் காரணங்களை நோக்கி, மேற்கத்திய வாசகளை முன்வைத்து சந்தைப் படுத்தலுக்காக எழுதப்பட்டது இல்லை. அருந்ததியின் நாவல் மேற்கத்திய பதிப்பகத்தினைச் சென்று சேர்ந்தது யதேச்சையாக நிகழ்கிறது. மேற்கத்திய வாசகனை நாவலின் உள்ளே ஈரப்பதற்கான முஸ்தீபுகள் ஏதும் அவரது நாவலில் இல்லை. சிவானந்தனின் நாவலும் இவ்வாறுதான் இயங்குகிறது. எமது நாடுகளின் வாழ்வையும், எமது மக்களின் பிரச்சினைகளும் குறித்த ஒரு புரிதலை ’பிற’ வாசகனுக்கு வழங்குவதனையே இந்த நாவல்கள் முதன்மைப் பண்பாகக் கொண்டிருக்கின்றன.
பங்கஜ் மிஸ்ராவினதும் ஒன்டாஜியினதும் நாவல்கள் எமது பிரச்சினைகளையும் எமது மக்களின் வாழ்வையும் மேற்கத்திய சிந்தனையின் வழி, அவர்களது பார்வையின் வழி, திறந்து வைப்பதாக உள்ளன. மேற்கத்திய வாசகன் நேரடியிலாக கதைக்களத்தினுள் நுழைவதற்கான ஒரு வழிமுறையாகவும் இந்தவிதமான கதை சொல்லல் இருக்கிறது.
நாவல்களாயினும் திரைப்படமாயினும் கடந்த இருபது ஆண்டுகளில் நேர்ந்திருக்கிற ஒரு மாற்றத்தைக் கணக்கிலெடுத்துக் கொண்டுதான் இவற்றை அணுகவேண்டும். தகவல் தொழில்நுட்ப கணணி யுகம் தோற்றுவித்த மாற்றத்தடன் இணைந்த உலகவயமாதல்தான் அந்த மாற்றம். இந்த மாற்றத்தினால் மனிதர்களின் இடப்பெயர்வும், நாடுகளுக்கிடையிலான, பண்பாடுகளுக்கு இடையிலான ஊடாட்டமும் அதிகரித்திருக்கிறது. இந்த நிகழ்வுப் போக்கில் தொழில்முறையிலான சந்தைத் தன்மைகளும், சீரிய தன்மைகளும் சமாந்தரமாகவேதான் செயல்படும். இந்த உலகமய ஊடாட்டங்களின், இடப்பெயர்வின், பண்பாட்டுக் கலப்பின் விளைவான இலக்கியங்களையும், திரைப்படங்களையும், எது சந்தைக் கலாச்சாரக் கூறுகளைக் கொண்டது, எது சீரிய பண்பாட்டு அரசியல் கூறுகளைக் கொண்டது எனும் அடிப்படையிலேயே அணுகப்பட வேண்டும். தமிழவனதும் இ.பா.வினதும் போலந்தும்-தமிழகமும் குறித்த நாவல்களும் கூட இந்த அடிப்படையிலேயே அணுகப்பட வேண்டும்.
இரு விதமான அணுகுமுறைகளில் எமது அணுகுமுறையாக, எமது சமூகங்கள் மற்றும் எமது மக்களின் ‘ஆதாரமான’ வாழக்கை மற்றும் சித்தரிக்கப்படும் மாந்தரின் ‘பிரதிநிதித்துவம்’ என்பதான் அடிப்படையையே நாம் தேர்ந்து கொள்ள வேண்டியிருக்கும். நேரடியாக ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இந்திய இலக்கியத்தோடு இந்தியப் பிராந்திய மொழிகளில் எழுதப்பட்ட இலக்கியங்களைக் கீழாக மதிப்பிட்ட ஸல்மான் ருஸ்டியின் கூற்று உலக அளவில் ஏற்படுத்திய சரச்சைகள் இன்றும் பொருத்தமுள்ளதுதான்.
இந்தியா குறித்தும் இலங்கை குறித்தும் கடந்த ஐம்பதாண்டு கால வாழ்வும், அரசியலும் பற்றி எழுதப்பட்ட நாவல்கள் குறித்தும், இத்தகைய சரச்சைகள் தவிர்க்க முடியாதன. இலங்கையின் இனப் பிரச்சினையில் அது அத்தீவு மக்களது வாழ்க்கையில் ஏற்படுத்திய பாதிப்புக்களில், அது பற்றிப் பேசும் ஒண்டாஜியினதும் சிவானந்தனதும் நாவல்களில், பிரச்சினையின் ஆதாரத் தன்மையினையும் பிரதிநிதித்துவத்தினையும் தேர்வதிலிருந்து எந்த வாசகனும் பின்வாங்கி விட முடியாது.
இந்திய-தமிழக வாழ்வு என எடுத்துக் கொண்டாலும் இந்துத்துவம் – சாதியம் – பார்ப்பனிய எதிர்ப்பியக்கம் – கம்யூனிஸம் – பெண்ணொடுக்கமுறை – தமிழ் சமஸ்கிருதப் பண்பாடு – குற்றச் செயலாக அரசியல் போன்றவற்றைக் குறித்த ஆதாரத்தன்மையையும், கதை மாந்தரின் பிரதிநித்துவத்தையும் விலக்கிவிட்டு இந்நாவல்களைப் பார்க்க முடியாது. பங்கஜ் மிஸ்ராவின் நாவலும் சாதியம் பேசுகிறது. அருந்ததியின் நாவலும் பேசுகிறது. இந்துத்துவம் பற்றி மிஸ்ராவின் நாவலும் பேசுகிறது. அருந்ததியின் நாவலும் பேசுகிறது. ஆதாரத்தன்மை மற்றும் பிரதிநிதித்துவம் என்கிற கேள்விகைளை இந்நாவல்களின் மதிப்பீட்டிலும் நாம் தவிர்க்கமுடியாது.
IV
இங்கிலாந்தின் புக்கர் பரிசு பெற்ற தென்னாசிய நாவலான அரவிந்த் அடிகாவின் நாவல் குறித்த இ.பாவின் பார்வையையும் தமிழவனதும் பார்வையையும் புரிந்து கொள்வது நமக்கு இவர்களது நாவல்களைப் புரிந்து கொள்வதிலும் உதவியாக இருக்கும் என நினைக்கிறேன்.
இந்திரா பார்த்தசரதி ‘வெள்ளைப் புலி’ நாவல் பற்றி இவ்வாறு செல்கிறார் :
இந்தியாவைப் பற்றி விமர்சனம் செய்கின்றவர்கள் இரு வகையினர். இந்தியாவை மிக நேசிப்பதினால் இந்நாட்டில் நடக்கும் அக்கிரமங்களைப் பொறுக்கமுடியாமல் தார்மீகக் கோபம் கொண்டு இங்குக் காணும் யதார்த்தத்தை இலக்கிய வடிவில் படம் பிடித்துக் காட்டுகின்றவர்கள் ஒரு வகை. இன்னொரு வகை இந்தியாவின் மீதுள்ள வெறுப்பினால் அங்கதம் என்ற பேரில் வசை பாடுகின்றவர்கள். மிஸ் மேயோ பெவெல்ரி நிக்கொலஸ் போன்றவர்கள் இந்தியாவைப் பற்றி எழுதிய நூல்கள் இரண்டாவது வகை. அடிப்படைக் காரணம் நிறத்திமிர்.
மிஸ் பீகார் மாநிலத்தில் ஒரு குக்கிராமத்தைச் சார்ந்த கதாநாயகன் (நல்ல வேளை அவனுக்குப் பெயர் இருக்கிறது) பல்ராம் ஹல்வாயி (அவன் இனிப்புப் பண்டங்கள் செய்கிற தாழ்ந்த சாதி) இந்தியாவில் நிகழும் அநீதிச் சூழ்நிலையைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு தன் முதலாளியைக் கொன்று அவன் இளமையில் கனவு கண்ட வாழ்க்கையின் ஆடம்பரச் சலுகைகளையெல்லாம் அநுபவிக்கிறான் என்பதுதான் கதையின் கரு. இந்தியாவுக்கு வருகை தர இருந்த சீனப் பிரதமருக்கு அவன் தன் வாழ்க்கைச் சரித்திரத்தைக் கடிதமாக எழுதுவது போல் கதை அமைந்திருக்கிறது. ஒரு குக்கிராமத்தில் ஒரு சைக்கிள் ரிக்ஷா ஓட்டுபவருக்குப் பிறந்த பல்ராம் சிறுவயதிலிருந்தே அடிகாவைப் போல் சிந்திப்பதுதான் ஆச்சர்யம்.
அடிகா தன்னை இந்தியன் என்பதனின்றும் அந்நியப் படுத்திக் கொள்வது போல் பல்ராமும் தன்னைத் தன்சமூகத்தினின்றும் அந்நியப்படுத்திக் கொண்டு நிர்ப்பந்ததினால் தான் செய்ய வேண்டியிருக்கிற கடமைகள் அனைத்தையும் பாவனையாகக் கொள்வதற்கான சிந்தனை முதிர்ச்சி சிறுவயதிலிருந்தே அவனுக்கு இருப்பதாகக் காட்டியிருப்பதுதான் இன்னும் பெரிய ஆச்சர்யமாகவிருக்கிறது. இது நடைமுறையில் நடக்கக்கூடியதா போன்ற பாத்திரப் படைப்பு இலக்கிய அக்கறைகள் ஆசிரியருக்கு இருப்பதாகவே தெரியவில்லை. ஓர் இந்திய கிராமத்தை ஆசிரியர் பார்த்திருப்பாரா என்பதே சந்தேகந்தான்(2).
தமிழவனது பார்வை இந்திரா பார்த்தசாரதிக்கு நேர் மாறான பர்வை. அமைப்பியல்வாதியின் இலக்கியப் பார்வை இது. தமிழவன் தமிழ் நவலாசிரியர்கள் குறித்த நக்கலுடன் அடிகாவின் நாவல் பற்றி பின்வருமறு செல்கிறார் :
நான் பேசிக் கொண்டிருப்பது இந்தியா பற்றிய எழுபதுகளின் இருவகைச் சித்திரிப்புகள். கம்யூனிஸ்டுகளிடம் காணப்பட்டது ஒன்று கவித்துவ மனநிலை கொண்டவர்களிடம் காணப்பட்டது இன்னொன்று. இதே நிலைதான் இன்றைய அறிவாளி இளைஞர்களுக்கும். அந்த இந்திய இளைஞர்கள் இந்தியாவில் இருக்கலாம். அல்லது வெளிநாடுகளில் இருக்கலாம். அப்படி வெளிநாட்டில் வாழ்ந்து நாவல் எழுதிப்புகழ் பெற்றவராய் அர்விந்த் அடிகா என்ற சமீபத்திய புக்கர் பரிசுபெற்றவரைப் பார்க்கிறேன்.
நவீன நாவல் எழுத்துமுறை பற்றி நிறைய எழுதப்படுகிறது. தமிழில் எண்பதுகளிலிருந்து உலகத்தரமான எல்லா எழுத்தாளர்களின் எழுத்துமுறைகளும் பரிச்சயப்பட்டுள்ளன. எனினும் அகிலன் பாணியில் இலக்கியக் குணமற்ற அழுகை பரிதாபம் இவற்றை ஒவ்வொன்றாகவும் டோஸ் சேர்த்தும் எழுதித்தள்ளும் ‘பரிதாப’ எழுத்தாளர்களின் நடையே பெரிய இலக்கியமாகப் பவனி வருகின்றன. அகிலன் சீனைவிட்டு மறைந்தாலும் அழுகையும் பிரலாபமும் ஒரே எழுத்துப்பாணியாக தமிழைச் சீரழித்து வருகின்றன.
இன்னொரு பரிதாபகரமான பாணி ரெப்ரஸென்டேடிவ் எழுத்து. முஸ்லீம் பற்றிய எழுத்து கிறிஸ்தவர் பற்றிய எழுத்து பனை ஏறி பற்றியது மீனவர் பற்றியது அம்பட்டன் பற்றியது குதிரைவண்டிக்காரன் பற்றியது இத்யாதி. இந்த ஆண்டு பாரதப்புதல்வர்களுக்கு நேரம் சரியில்லை. அர்விந்த் அடிகாவின் நாவல்தான் இப்படி என்றால் ‘கோடீஸ்வர குடிசை நாய்’ ( Slumdog Millionare) திரைப்படம்கூட அதன் paradigonatic கதை சொல்முறை மூலம் இந்தியாவைக் கிண்டலடிக்கிறது.
நாவல்களின் தோற்றத்துக்கும் தேசத்தின் தோற்றத்துக்கும் தொடர்புண்டு என்கிறார் பெனடிக்ட் ஆன்டர்சன். மார்க்சியச் சிந்தனையாளர் குடும்பத்தைச் சேர்ந்தவர் இவர். அர்விந்தின் நாவல் அப்படிப் பார்க்கையில் பகடி நக்கல் நகைச்சுவை போன்ற லேசுத்தன்மையுள்ள உள்ளடக்க இழை மூலம் கதையைப் பின்னும் முறையில் இன்னொரு தேசத்தைக் கட்டுகிறது. அதாவது தனது குறியியல் வலையில் கட்டமுனைகிறது. இந்தியா தனது பல்வேறு வட்டாரத்தேசங்களின் அழுத்தத்தில் அண்ணா சொன்னதுபோல் பலவீனமுறாமல் நாவலை புதிய அனைத்திந்தியாவுக்கும் கட்டுவது இப்படித்தான்(3).
இ.பாவின் பார்வை தலித்தியர் மற்றும் அவரது பிரதிநிதித்துவம் மற்றும் அக்கதைமாந்தர் குறித்த ஆதாரமான சித்தரிப்பு போன்றவற்றை முக்கியத்துவப்படுத்தும் பார்வை. தமிழவனின் பார்வை பிரதிநிதித்தவம், ஆதாரத்தன்மை போன்றவற்றைக் கிண்டலடிக்கும் பார்வை.
மட்டுமன்று ‘இன்னொரு பரிதாபகரமான பாணி ரெப்ரஸென்டேடிவ் எழுத்து. முஸ்லீம் பற்றிய எழுத்து கிறிஸ்தவர் பற்றிய எழுத்து பனை ஏறி பற்றியது மீனவர் பற்றியது அம்பட்டன் பற்றியது குதிரைவண்டிக்காரன் பற்றியது இத்யாதி. இந்த ஆண்டு பாரதப்புதல்வர்களுக்கு நேரம் சரியில்லை. அர்விந்த் அடிகாவின் நாவல்தான் இப்படி என்றால் ‘கோடீஸ்வர குடிசை நாய்‘ திரைப்படம்கூட அதன் paradigonatic கதை சொல்முறைமூலம் இந்தியாவைக் கிண்டலடிக்கிறது‘ என்று தமிழவனின் சொற்களில் தெரிவது அப்பட்டமான மேட்டிமைப் பார்வை. அடித்தட்டு மக்களின் வாழ்வை ‘நக்கலும் கொண்டாட்டமும் வெட்டி ஒட்டுதலுமாக’ முன் வைக்கும் பின்நவீனத்துவப் பார்வை. இந்தப் பார்வையில் அறம், கோபம், ஒடுக்கப்படும் மனிதரின் ஆதாரமான வாழ்வு, இலக்கியத்தில் அவர்களது பிரசன்னம் என்பதற்கு ஏதும் அர்த்தம் இல்லை. அழுகையும் துயரமும் தவிர்ந்த நக்கலும், துயரைக் கொண்டாட்டமாக மாற்றும் வகைதான் தமிழவன் முன்வைக்கும் இலக்கிய வகையினம். அவர் ‘ஸ்லம் டாக் மில்லியனரையும்’ அரவிந்த அடிகாவின் நாவலுடன் முன்வைத்துப் பேசவதால் இதனையும் சொல்ல வேண்டியிருக்கிறது.
இந்திய வாழ்வையும் வறுமையையும் பட்டினியையும் அழகையையும் அதனுள்ளும் ஜீவித்திருக்கும் மகிழ்வையும் சத்யஜித் ரே ‘பதேர் பாஞ்சாலி’யில் முன்வைத்தார். டோனி பாயிலின் ‘ஸ்லம் டாக் மில்லியனரும்’ அதே வறுமையையும் அழுக்கையும் பட்டினியையும்தான் மும்பை நகரத்தின் பின்னணியில் வைத்திருக்கிறது. நக்கலும் நளினமும் கொண்டாட்டமும், ஹாலிவுட் பிரம்மாண்டமும் கலந்து முன்வைத்திருக்கிறது. ஓரே பிரச்சினை குறித்த இந்த இரண்டு படங்களையும் வித்தியாசப்படுத்துவது இந்த இயக்குனர்கள் சித்திரிக்கும் மனிதர்களினது வாழ்வின் ஆதாரத்தன்மையும் அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் மனித மாண்பும்தான். சீரிய திரைப்படத்தைத் தேர்பவன் சத்யஜித் ரேவைத்தான் தேர்வான் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை. ஸ்லம்டாக் மில்லியனர் உலகவயமாதலினதும் சந்தைப்பொருள் நுகர்கலாச்சாரத்தினதும், துயர்களைச் ஜிகினா கொண்டாட்டமாகவும் மாற்றியதன் விளைவு. ரேயினது படைப்பு இவையனைத்தினையும் உதறிய மானுடத்தையும் அதன் ஆன்மாவையும் முன்வைக்கும் மனத்தினது தேர்வு.
V
கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஸ்டாலினியம் தொடர்பான விமர்சன மார்க்சிய மரபை கோட்பாட்டு அளவில் முயற்சித்த நாடுகள் நான்கு. செக்கோஸ்லாவாக்கியா, ஹங்கேரி, யுகோஸ்லாவியா, போலந்து என்பன அந்த நான்கு நாடுகள்.
முதலாவது காரணம், ஜெர்மனியுடனான சோவியத் யூனியனின் நேரடியிலான போரை ஒப்பிட, இட்லருடனான பாசிச எதிர்ப்புப் போரில் சோவியத் யூனியன் கைப்பற்றிய பகுதிகளில், அந்தந்த தேசத்தின் வரலாற்று அனுபவங்களிலிருநது இயல்பாக எழாத, சுமத்தப்பட்ட பாசறைக் கம்யூனிசமாக, அந்தந்த நாடுகளில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சிகளின் கைகளில் ஸ்டாலினியத்தினால் அதிகாரம் ஒப்படைக்கப்பட்டதாக, சோவியத் யூனியனின் துணைக் கோள்களாக இந்த நாடுகளில் சோசலிச அமைப்பு ஸ்தாபிக்கப்பட்டது.
இரண்டாவதாக, ஸ்டாலினது அடியொற்றிய இறுகிய லெனினியக் கட்சி அமைப்பின் விளைவான அதிகார வர்க்கத்திற்கு எதிரான, ‘மனித முகத்துடன் சோசலிசம்’ எனும் நிலைபாட்டை, இந்த நாடுகளின் வரலாற்றையும் அதிகாரவர்க்கம் தவிர்த்த சோசலிச ஜனநாயகத்தையும் வலியுறுத்திய மார்க்சிய கோட்பாட்டாளர்கள் மேற்கொண்டனர்.
1956 ஆகஸ்ட் 23 முதல் 10 அக்டோபர் வரையிலும் நீடித்த ஹங்கேரிய மாணவர்களின் எழுச்சி வெகுமக்களின் எழுச்சியாக நீடித்தது. 2500 ஹங்கேரியர்களும் 700 சேவியத் துருப்புக்களும் மரணமுற்றனர். அரசின் ரகசிய பாதுகாப்பு காவல்துறையைக் கைவிடுவதென்றும் சோவியத் துருப்புக்களை ஹங்கேரியிலிருந்து மீளப்பெறுவது எனவும் முதலில் ஒப்புக் கொண்ட அரசு, பிற்பாடு போராட்டக்காரர்கள் மீது கடுமையான ஒடுக்குமுறையை ஏவியது. 1956 நவம்பர் 4 ஆம் திகதி சோவியத் டாங்கிகள் ஹங்கேரியினுள் நுழைந்தன. ஹங்கேரியில் சோவியத் யூனியன் டாங்கிகள் நுழைந்ததானது ஐரோப்பிய மார்க்சியர்களை சோவியத் யூனியனில் இருந்து தூரப்படுத்தியது.
இங்கிலாந்தின் புகழ்பெற்ற மார்க்சிய சஞ்சிகையான புதிய இடதுசாரி விமர்சனம் அல்லது ‘நியூ லெப்ட் ரிவியூ’ ஆய்விதழின் தோற்றத்துக்கான காரணங்களில் ஒன்றாக இந்நிகழ்வை அவ்விதழ் அதனது ஐம்பதாவது (1960-2010 : இரண்டாவது வரிசை : இதழ் 61) ஆண்டு நிறைவையொட்டி ஆவணப்படுத்துகிறது. ழான் பவுல் ஸார்த்தர் உள்ளிட்ட சோவியத் யூனியன் ஆதரவு கொண்ட பெரும்பாலுமான பிரெஞ்சு அறிவுஜீவிகள் சோவியத் படைகளின் ஹங்கேரி ஆக்கிரமிப்பைக் கண்டித்தனர்.
இதே ஆண்டு யுகோஸ்லாவிய மார்க்சியரும் ஸ்டாலினை நேரடியாகச் சந்தித்தவரும் பிற்பாடு நிலவிய சோஷலிசத்தின் கடும் எதிரியாக ஆனவரும் யுகோஸ்லாவிய கம்யூனிஸ்ட்டுமான மிலோவான் டிஜிலாஸ் தனது புதிய வர்க்கம் – ‘நியூ கிளாஸ்’ – எனும் நூலை எழுதினார். யுகோஸ்லாவிய கம்யூனிஸ்ட் கட்சியானது எதேச்சாதிகாரம் கொண்ட அதிகார வர்க்கமாக ஆகியிருப்பதாகவும், நாட்டினது உறபத்தியின் பலன்களை தமக்கான சலுகைகளை இந்த வர்க்கம் அனுபவிப்பதாகவும், தமது கட்சி அதிகாரத்தை உற்பத்தி சாதனங்கள் மீது வைத்திருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார். பிற்பாடு அவர் யுகோஸ்லாவியாவிலிருந்து வெளியேறி அமெரிக்கா சென்றார். டீட்டோவினது மரணத்தின் பின் மீளவும் அவர் யுகோஸ்லாவியா திரும்பினார்.
ஹங்கேரி யுகோஸ்லாவியாவைத் தொடர்ந்து, செக்கோஸ்லாவாக்கியாவில் 1968 பிராக் வசந்தம் அல்லது ‘பிராக் ஸ்பிரிங்’ என அழைக்கப்பெறும், செக்கோஸ்லாவாக்கிய கம்யூனிஸ்ட்டான ஸ்லோவாக் அலக்ஸான்டர் டுப்செக் முன்வைத்த பொருளாதார மற்றும் அரசியல் சீர்திருத்த முன்மொழிவுகள் ஊடகம் அரசியல் கலாச்சாரம் போன்றவற்றில் சீர்திருத்தங்களையும் ஒப்பீட்டு ரீதியிலான சுயாதீனத்தன்மையையும் அறிமுகப்படுத்தியது. செக்கோஸ்லாவாக்கியாவை செக் எனவும் ஸ்லோவாக்கியா எனுவும் இரண்டு குடியரசகளாக ஆக்கியது. சோவியத் யூனியனுக்கும் அது சார்பான செக்கோஸ்லாவாக்கிய கம்யூனிஸ்டுகளுக்கும் இது உடன்பாடு இல்லாத காரணத்தினால் சோவியத் படைகள் 21 ஆகஸ்ட் 1968 ஆம் ஆண்டு சோவியத் படைகள் செக்கோஸ்லாவாக்கியாவை ஆக்கிரமித்தன.
போலந்துக்கும் சோவியத் யூனியனுக்குமான நேரடியிலான அரசியல் முரண் 1939 ஆம் ஆண்டிலிருந்து துவங்குகிறது. இட்லர்-ஸ்டாலின் உடன்பாடு அல்லது ‘மாலட்டோவ் ரிப்பின் டிராப்’ இடையிலான உடன்பாட்டின் படி, தாமிருவரும் பரஸ்பரம் ஒருவரையொருவர் ஆக்கிரமிப்பதில்லை எனும் அடிப்படையில், 1939 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் போலந்தின் பகுதிகளை இட்லரது படைகளும் ஸ்டாலினது படைகளும் ஆக்கிரமித்தன. இட்லர்-ஸ்டாலின் உடன்பாட்டை ‘ஸ்டாலினின் மிகப்பெரும் வரலாற்றுத் தவறு’ என பிடல் காஸ்ட்ரோ குறிப்பிடுகிறார். பிற கிழக்கு ஐரோப்பிய நாடுகளைப் போலவே கம்யூனிச அரசு ஒன்றினை சோவியத் யூனியன் போலந்தில் அமைத்தது.
1952 ஆம் ஆண்டு போலந்து மக்கள் குடியரசு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. 1980 ஆம் ஆண்டில் கத்தோலிக்க மதத்தின் நேரடியிலான ஆதரவுடன் லெச் வாலேசாவின் தலைமையில் ‘சொலிடாரிட்டி தொழிலாளர் இயக்கம் தோன்றியது’. 1981 ஆம் ஆண்டு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது. 1989 தேர்தல்களையடுத்து சொலிடாரிட்டி வெற்றிபெற்றதனையடுத்து, 1990 ஆம் ஆண்டு லெச் வலேசா ஜனாதிபதியாகப் பதவியேற்றார். அதே ஆண்டு போலந்தில் சந்தைப் பொருளாதாரம் அறிமுகப்படுத்தப்பட்டது. 1999 ஆம் ஆண்டு போலந்து நாடு ஹங்கேரி செக் குடியரசு போன்றவற்றுடன் நேட்டோ ராணுவக் சுட்டமைப்பில் சேர்ந்தன. 2004 ஆம் ஆண்டு போலந்து ஐரோப்பியக் கூட்டமைப்பிலும் அங்கத்துவம் பெற்றது. பிற்பாடாக போலந்தில் ரஸ்யாவுக்கு எதிராக அமெரிக்க ஏவுகணைகளும் அமைக்கப்பட்டன.
1956 ஆம் ஆண்டு ஹங்கேரியிலும் யுகோஸ்லாவியாவிலும் 1968 ஆம் ஆண்டு செக்கோஸ்லாவாக்கியாவிலும் ஏற்பட்ட நிலவிய சோசலிசத்திற்கு எதிரான தொழிலாளர்-மாணவர் எழுச்சிகள், 1968 ஆம் ஆண்டு பிரான்ஸில் எழுந்த பாரிஸ் தொழிலாளர்-மாணவர் எழுச்சியுடன் ஒரு பொதுத் தன்மையைக் கொண்டிருந்தது. அமெரிக்க மேற்கத்திய சமூகங்களை விமர்சித்தவர்களாகவும், சமவேளையில் நிலவிய சோசலிசத்தை விமர்சித்தவர்களாகவும் இவர்கள் இருந்தார்கள். வாசிங்டனும் வேண்டாம், மாஸ்க்கோவும் வேண்டாம் என்பவர்களாக இவர்கள் இருந்தார்கள். சோசலிச சமூகத்தில் மனித உரிமை, ஜனநாயகம், பேச்சுரிமை, கலைஞர்களின் சுதந்திரம் போன்றவற்றை இவர்கள் முன்வைத்தார்கள். மனித முகத்துடன் சோசலிசம், சோசலிச ஜனநாயகம் போன்றவற்றை பேசியவர்களாகவே இவர்கள் இருந்தார்கள். பிரெஞ்சுக் கோட்பாட்டாளர்கள், பிராங்பர்ட் கோட்பாட்டரளர்கள் இந்த நெருக்கடியிலிருந்தே எழுந்தார்கள். ஐரோப்பாவில் எழுந்த விமர்சன மார்க்சியம் என்பது ஸ்டாலினியம் குறித்த விமர்சனத்திலிருந்தே எழுந்தது என நாம் சொல்வது மிகையாகாது.
அதிகார வர்க்கமாகக் கம்யூனிஸ்ட் கட்சி, சிந்தனை செயல் போன்றவற்றைக் கண்காணிக்கும் ரகசியப் போலீசாரைக் கொண்டதான எதேச்சாதிகார அல்லது டோட்டாலிடேரியன் சமூகம் போன்றவற்றை ஜனநாயகப்படுத்தும் அவாவிலிருந்தே டுப்செக், டிஜிலாஸ் போன்றோரின் கோரிக்கைகள் தோற்றம் பெற்றன. ஹங்கேரி, யுகோஸ்லாவிய, செக்கோஸ்லாவாக்கியாவில் இத்தகைய கோரிக்கைகளை முன்வைத்தவர்கள் அந்தந்த நாடுகளின் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு உள்ளேயிருந்து வந்தவர்கள்தான்(4).
போலந்திலிருந்தும் இவ்வாறாக உருவான கோட்பாட்டாளர்தான் லெஸ்சக் கோலகாவ்ஸ்க்கி. 1947-1966 காலகட்டங்களில் போலந்து கம்யூனிஸ்ட் கட்சியான தொழிலாளர் கட்சியில் உறுப்பினர் அட்டை கொண்டவராக இருந்த வரலாற்றாசிரியர் மற்றும் தத்துவாசிரியர் இவர். சோவியத் யூனியன் விஜயத்தையடுத்து இவரது பார்வையில் பாரிய மாற்றங்கள் தோன்றத் துவங்கின. கோலகாவ்ஸ்க்கி 1956 ஆம் ஆண்டு சோவியத் மார்க்சியத்தின் வரலாற்று நிர்ணயவாதத்துடன் முரண்பாட்டைத் தெரிவித்துக் கட்டுரைகள் எழுதினார். 1976-78 காலகட்டங்களில் நான்கு பாகங்களிலான மார்க்சியத்தின் பிரதான போக்குகள் – ‘மெயின் கரண்டஸ் இன் மார்க்சிசம்’ – எனும் நூலை எழுதினார். ஸ்டாலினியம் ஜனநாயகப்படுத்த முடியாதது எனத் திட்டவட்டமாகச் சொன்ன அவர், ஸ்டாலினியத்தின் வேர்கள் மார்க்சிடமே இருக்கிறது எனவும் தெரிவித்தார்.
2009 ஆம் ஆண்டு மரணமுற்ற அவர் தனது பிற்காலங்களில் முழுமையாகவே கத்தோலிக்க மதத்தில் விமோசனம் தேடியவராக ஆனார். 1981 ஆம் ஆண்டு தோற்றம் பெற்ற சொலிடாரிட்டி தொழிலாளர் இயக்கத்தின் தத்துவ போதகராகவும் அந்த இயக்கத்தின் நேரடி ஆதரவாளராகவும் இவர் இருந்தார். ஓரு எதேச்சாதிகார அமைப்பில் வெகுஜனமட்டத்தில் கட்டப்படுகிற சிறு சிறு குழுக்கள் எதிர்ப்பியக்கமாக பரிமாணம் பெறும் என அவர் கருதினார்.
1940 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5 ஆம் திகதி பெரியாவினால் கையெழுத்திப்பட்ட படுகொலை ஆவணத்தையடுத்து, சோவியத் படைகள் ‘கதின் வனம்’ இடத்தில் 22,000 போலந்துப் படைவிரர்களையும் அறிவுஜீகளையும் காவல்துறையினரையும் கொன்றன என்பதனை இன்றைய ரஸ்யா அதிகாரபூர்வமாக ஏற்றுக் கொண்டிருக்கிறது. போலந்து நாட்டின் திரைப்படக் கலைஞனான ஆந்த்ரே வாட்ஜா இந்தப் படுகொலை நிகழ்வின் அடிப்படையில் ‘கதின்’ எனும் திரைப்படம் (Kathyn : 2007) ஒன்றினையும் உருவாக்கினார். போலந்து வெகுமக்களின் நினைவில் பதிந்திருக்கிற ஸ்டாலினியத்தின் மீதான அறச்சீற்றத்திற்குக் காரணமான சம்பவங்களில் இதுவும் ஒன்றாக இருக்கிறது.
போலந்து நாட்டைப் பற்றிப் பேசுகிறபோது, 1980 ஆம் ஆண்டு இருந்த ஜாருசெல்ஸ்க்கியின் சமூக அமைப்பு அல்லது போலந்து கம்யூனிஸ்ட் கட்சி எதேச்சாதிகாரமாக இருக்கவில்லை எனவும், அது மிகவும் பலவீனம் கொண்டதாகவும், சொலிடாரிட்டி அமைப்புடன் ஒரு சமரசத்துக்குத் தயாரான அமைப்பாகவும், தேர்தலை முன்மொழியக் கூடிய அமைப்பாகவும், சொலிடாரிட்டி அமைப்புடன் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ளக் கூடிய அமைப்பாகவுமே அது இருந்தது எனவும் எழுதுகிறார் ‘நியூ லெப்ட ரிவியூ’ விமர்சகர் ஆந்த்ரேசெஸ் வாலுக்கி(5).
1989 ஆம் ஆண்டு துவங்கிய கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் மாற்றம் முதன் முதலாகப் போலந்தில்தான் துவங்கியது. அதன் பின்னர் எந்தவிதமான வன்முறையும் பாரிய இரத்தச் சிந்துதலும் இல்லாமல்தான் கிழக்கு ஐரோப்பாவில் நிலவிய சோசலிச நாடுகள் தமது அதிகாரத்தை விட்டுத் தந்தன. இவ்வகையில் போலந்தில் நிகழ்ந்த மாற்றம் என்பதும், சொலிடாரிட்டி நிகழ்த்திய நடவடிக்கை என்பதும் எதேச்சாதிகார அமைப்புக்கு அல்லது டோட்டாலிடேரியன் அமைப்புக்கு எதிரானது எனச் சொல்ல முடியாது எனவும் அவர் தெரிவிக்கிறார். அகநிலைமையில் போலந்து அரசு பலவீனமாக இருந்த அதே பொழுதில், கத்தோலிக்க மதம் அறவியல் அடிப்படையிலும் அரசியல் அடிப்படையிலும் தொழிலாளிகளை ஒன்றுதிரட்டும் கருவியாகவும் இருந்தது. வாத்திகான் மதபீடமும் ரீகனும் இதனை மிகச்சரியாகப் புறநிலை அழுத்தமாக பிரயோகித்தார்கள். விளைவாக போலந்தில் நிலவிய சோசலிசம் வீழந்தது.
VI
தமிழவனது நாவலின் பிரதான பாத்திரம் ஒரு கம்ப்யூட்டர் தொழில் செய்கிறவன். அவனது சிந்தனையமைப்பு உருவாகின காலகட்டம் என நாம் அதிகம் மிஞ்சிப் போனால் ஒரு பதினைந்து ஆண்டுகள் எனச் சொல்லலாம். அவனது பிறப்பினோடு ஒப்பிட அவன் எழுபதுகளின் சூழுலோடு வளர்ந்தவன் எனவும் நாம் அனுமானித்துக் கொள்ளலாம். இ.பாவின் பிரதான பாத்திரம் அறுபதுகளின் எழுபதுகளின் தலைமுறையைச் சேர்ந்த இடதுசாரி மரபாளனின் ஒருவனது சித்திரம். உலக சமாதான மாநாட்டின் பிரதிநிதியாக வந்து போலந்தில் தங்கிவிட்ட அவரதும், அவரது போலீஷ் மனைவிக்குப் பிறந்த மகளதும் இடையிலான முரண்களோடு பரிச்சியமாகும் ஒரு இந்தியப் பேராசிரியரின் விவரணையாகவே இ.பாவின் கதைக்களம் விரிகிறது.
போலந்தில் தமிழவனுக்கும் இ.பாவுக்கும் பரிச்சயமான, சொந்த வாழ்வு சார்ந்த அனுவப வாழ்வென்பது தமிழ்ப் பேராசிரியர்கள் வாழ்வுதான். இவர்களது கல்வி சார்ந்த வாழ்வு பல்கலைக் கழகத்துடன் பிணைக்கப்பட்டிருப்பது போல, இவர்களது வெளியுலக அன்றாட வாழ்வு வார்ஸா இந்திய தூதரகத்துடன்தான் பிணைக்கப்பட்டிருக்கிறது. பேராசிரியர்களின் இருப்பிடம் அவர்களுக்கான சம்பளம் போன்றவற்றைக் கூட இந்தியத் தூதரகமே பொறுப்பேற்கிறது. இவ்வகையில் இவ்விரு படைப்பாளிகளுக்கும் பரிச்சயமான போலந்து வாழ்வென்பது, பல்கலைக் கழகம், அதிலிருந்து கிளைக்கும் போலந்து உறவுகள், தூதரகவட்டாரம், அதன்வழியிலான இந்தியக் குடும்பங்கள் என்பதாகவே அமைகிறது.
இவர்கள் இருவரும் போலந்தில் வாழ்ந்த காலத்தில் கொந்தளிப்பான சோசலிச நெருக்கடி, எதேச்சாதிகாரம், சொலிடாரிட்டி இயக்கம், தலைமறைவு இயக்கம், நிலவிய சோசலிசத்தின் ஆதரவாளர்களுக்கும் அதனது எதிர்ப்பாரளர்களுக்கும் இடையிலான விவாதங்கள் பிரச்சினைகள் போன்றவற்றை இவர்கள் போலந்தின் வேர்மட்டத்தில் வாழும் தொழிலாளர்களிடனும் கட்சி ஊழியர்களுடனும், எதிர்ப்பியக்கம் சாரந்தவர்களுடனும் ஊடாடுவதன் மூலமே அடைதல் முடியும். எனில் இந்த அனுபவங்கள் கொண்ட பாத்திரப் படைப்புக்களும் நாவலில் இடம்பெற்றிருப்பார்கள். தமிழவன் இ.பா. என இருவரது நாவல்களிலுமே இவ்வகையில் அவர்கள் தங்கியிருந்த காலங்களின் அரசியல் முரண்களோ சமூகக் கொந்தளிப்புக்களோ அது சார்ந்த விவாதங்கள் என்பதோ ஆதார தளத்திலும் இயங்கவில்லை, போலந்தின் எண்பதுகளின் சமூகமக்களின் பிரதிநிதித்துவம் என்கிற அளவிலும் இயங்கவில்லை.
தமிழவனது நாவலின் பிரதான பாத்திரம் தமிழகத்திலிருந்து போலந்து சென்ற கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்ட ஒருவனின் வாழ்க்கை. இந்த கம்ப்யூட்டர் தொழில் செய்கிறவன் குறைந்தபட்சம் எத்தகைய பணிகளை தான் போலந்தில் வாழும் காலத்தில் மேற்கொள்கிறான் என்பதற்கான குறைந்தபட்ட ஆதாரம் கூட தமிழவனின் நாவலில் இல்லை. அல்லது கம்ப்யூட்டர் தொழில் செய்கிறவனின் குணஇயல்பு என்பதற்கான குறைந்தபட்ச சான்றுகூட அவனது நடத்தையில் இல்லை.
அவன் சதா தான் தங்கியிருக்கிற போலந்து நாட்டு அறையின் வாஸ் பேசின்கள், குளியலறைத் தொட்டிகள், உள் அமைப்புகள் பற்றி விலாவரியாகப் பேசுகிறான். ஷாப்பிங் மல்கள் பற்றிப் பேசுகிறான். தத்துவம் பற்றியும் இலக்கியம் மற்றும் கவிதை பற்றியும் பேசுகிறான். வார்ஷாவில் வாழும் சாதாரணமான பிராமணர் ஒருவர் அந்த நாட்டு மக்களால் கடவுளாக்கப்படுவதைப் பேசுகிறான். நீPட்ஷே பற்றி சாத்தான் பற்றிப் பேசுகிறான். புதிய போலந்தினது நுகர்பொருள் கலாச்சாரம் கிழக்கத்திய மதம் சார்ந்த சாய்வு போன்றவற்றைப் பேசுகிறான். அவன் சந்திக்கிற போலந்துப் பெண்களில் ஒருவரான பத்திரிக்கை எழுத்தாளர் இந்தக் கணணி விற்பன்னரின் வெகு ‘சாதாரண’ வாழ்வை ‘மகாபிரமிப்புடன்’ எழுதுகிறாள். பிறிதொரு பெண் ஆன்டி-கிரிஸ்ட் பற்றியே அதிகமும் பேசுகிறாள்.
போலந்து அரசியல் எனும் அளவில் இந்த நாவலில் வெளிப்படுவதுதான் என்ன? பாசிச காலகட்ட யூதக் கொலைகள் சொல்லப்படுகிறது. இந்தத் தலைமுறையின் உளவியலில் அதனது கருநிழல் படிந்திருப்பதைச் சொல்கிறது. மார்க்ஸ் குறித்துப் பேசுகிறதைக் கூட விரும்பாத ஒரு தலைமுறை குறித்துச் சொல்கிறது. போகிற போக்கில் ஈராக் போருக்கு எதிரான பல்கலைக் கழக மாணவர்கள் போராட்டம் குறித்துக் குறிப்பிட்டுவிட்டுப் போகிறது. பாசிசம் மற்றும் யூதக் கொலைகள், வார்ஸா நகரத் தெருக்கள் குறித்த நுட்பமான விவரணைகள் தவிர போலந்து வாழ்வைப் பற்றி தமிழவனின் நாவல் எதனையும் பேசுவதில்லை.
கணணி விற்பனனுக்கு போலந்தில் நேர்வதாகச் சொல்லப்படுகிற அனுபவங்கள், இந்திய மனிதனாக அவன் குறித்த போலந்து மக்களின் பார்வை, இந்துக் கடவுளர்களில் ஆழ்ந்து போகும் வெள்ளை மனம் குறிப்பாக போலந்துக்கு மட்டும் உரியது இல்லை. எந்த ஒரு ஐரோப்பிய நாட்டிலும் – கிழக்கு மேற்கு என வித்தியாசமில்லாமல் – இதனைப் பார்க்கலாம். இவ்வகையில் குறிப்பான போலந்து வாழ்வோ, அன்றைய அரசியல் நெருக்கடிகளோ தமிழவனின் நாவலில் இல்லை.
இதே காலகட்டத்தில் தமிழக மட்டத்தில் என்ன நடந்திருக்கிறது? தலித் பிரச்சினை, இந்து முஸ்லீம் பிரச்சினை, ஈழத்தமிழர் பிரச்சினை, திமுக-காங்கிரஸ் கூட்டு, வன்முறை அரசியலின் பரவலாக்கம் போன்ற தமிழ் வாழ்வை அலைக்கழித்திருக்கிறது. தமிழவனின் நாவலில் வரும் தமிழகச் சித்திரத்திலோ பாத்திரப் படைப்புகளிலோ இந்தத் தமிழ் வாழ்வும் இல்லை. மேற்கத்தியர்களுக்கு சுவாரசியமாகக் கதை சொல்லும் ஒரு கதைமாதிரிதான் தமிழவன் நாவலில் இருக்கிறது. மனைவி தன்னை எரித்து தற்கொலை செய்து கொண்டது, அதற்குப் பின்னணியாக பொறுக்கி வர்க்க மனோபாவமுள்ள அரசியல்வாதி இருப்பது, அவனோடு சல்லாபிக்கிற பிரக்ஞையுள்ள நவீனகாலப் பெண்மணி, அதனிடையில் வரும் ஒரு ‘குத்துச் சண்டை’ என – அரவிந்த அடிகாவையும் ஸ்லம் டாக் மில்லியனரையும் தமிழவன் சிலாகிப்பது ஞாபகம் வந்து போகிறது – கலந்துகட்டிய ஒரு தமிழ்க் கதையைத் தமிழவன் இந்நாவலில் சொல்லியிருக்கிறார். தமிழவனின் நாவலில் வாழ்ந்துபட்ட குறிப்பான போலந்து வாழ்வின் ஆதாரத்தின் சுவடுகளையோ அல்லது வாசித்து அறிந்த போலந்து வாழ்வின் ஆதாரங்களையோ நாம் பார்க்கவே முடியவில்லை.
இ.பாவின் நாவல் அவரது வெற்றி பெற்ற மரபான அதிகாரவர்க்கச் சித்தரிப்பு – ‘தந்திர பூமி, சுதந்திர பூமி, ஹெலிகாப்டர்கள் கீழே இறங்குகின்றன’ என அவரது முன்னைய நாவல்களில் பாவிக்கப்பட்ட நக்கலான குத்துகிற சொற்களிலான உரையாடல் – என்பதனையே அவரது ‘ஏசுவின் தோழர்களும்’ தனது சொல்முறையாக எடுத்துக் கொள்கிறது. வார்ஸாவின் இந்திய தூதரக அதிகாரிகள், அவர்களோடு அரசியல் உறவு கொண்ட போலந்து அதிகார வர்க்கத்தினர், இந்த இரண்டு அதிகார வர்க்கத்தினருடனும் உறவு கொள்ள நேர்கிற இந்தியப் பேராசிரியர் மற்றும் மேட்டுக்குடி இந்திய வம்சாவழிக் குடும்பத்தவர் என்பதனைச் சுற்றியே இந்த நாவலின் கதைக்களம் இருக்கிறது. இந்தக் கதையில் இந்த கதைமாந்தர் வட்டத்தினுள் வரும் ஓவியரொருவரின் நடத்தைகளும், போலந்து ஆட்சிக்கு எதிரான ஒரு பெண்ணின் நடவடிக்கைகளும் ஓரநிலையில் சொல்லப்படுகிறது.
இ.பாவின் நாவலின் கதைக்களம் குறித்து, மார்க்சிய எதிர்ப்பில் நின்று வெங்கட் சாமிநாதன் சில அவதானங்களை முன்வைக்கிறார். அவரது தீவிர மார்க்சிய எதிர்ப்புக் கேள்விகள் தவிர நாவல் குறித்த அவரது அவதானத்தில் நாம் உடன்பட முடியும். வெங்கட் சாமிநாதன் சொல்கிறார் :
அவர் போலந்துக்குச் செல்வதற்குச் சற்று முன் வரை போலந்தில் லெச் வாலெஸாவின் தலைமையில் நடந்து கொண்டிருந்த தொழிலாளர் போராட்டத்திற்கு சாதகமான அபிப்பிராயங்களை அவர் கொண்டிருக்கவில்லை…போலந்து நாடே கொந்தளிப்பில் இருக்கும் இந்த சமயத்தில் வார்ஸா போகிறார். அங்கு சில வருஷங்கள் தங்குவார். அங்கு நிகழ்ந்து கொண்டிருக்கும் வரலாற்று முக்கியத்துவம் கொண்ட நிகழ்வுகளை நேரில் இருந்து சுய அனுபவமாக பார்த்து அறிவார.;அந்த பரபரப்பும் கொந்தளிப்புமான நிகழ்வுகளின் சாட்சி பூர்வமான பாதிப்புகளை அவர் கட்டாயம் பதிவு செய்யப் போகும் எழுத்துக்கள் தமிழ் இலக்கியத்துக்குக் கிடைக்கும்.. இதெல்லாம் போக அங்கு போலந்தில் தொடர்ந்து நிகழ்ந்து வரும் வரலாற்றை கோபர்னிக்கஸ் செய்த புரட்சிக்கு ஒப்பான ஒன்றை மார்க்ஸீய வாய்ப்பாட்டின் படி நிகழ்ந்திருக்க வேண்டிய சரித்திரத்தின் கதியையே தலைகீழாகப் புரட்டிப்போட்டு விட்ட வரலாற்றை ஹெகலையே தலைகீழாக நிற்க வைத்துவிட்டதாகச் சொன்ன மார்க்ஸையே தலைகீழாக நிற்க வைத்துக்கொண்டிருக்கும் வரலாற்று கதியை நேரில் காணும் அரிய வாய்ப்பு அவருக்குக் கிடைக்க விருக்கிறதே. எல்லாம் வேடிக்கையாகத் தான் இருக்கிறது. நினைத்துப் பார்க்க. தொழிலாளி வர்க்கத்தின் சர்வாதிகாரத்தை முன்னெடுத்துச் செல்லும் கம்யூனிஸ்ட் கட்சியையே எதிர்த்து நிற்கும் தொழிலாளி வர்க்கம். நூற்றாண்டு நூற்றாண்டுகளாக மக்கள் தம் புரட்சி உணர்வுகளை மறந்து போதையில் ஆழ்த்தி வந்த அபினி அல்லவா இந்த கத்தோலிக்க சர்ச்சுகள்? அப்படித்தானே மார்க்ஸ் நமக்குப் போதித்தார்! தொழிலாளி வர்க்கத்தின் நல்ல காலம் தோழர் ஸ்டாலின் தன்னால் முடிந்த சுமார் ஐம்பது ஆண்டு காலம் இந்த சர்ச்சின் அபினி மயக்கத்திலிருந்து மக்களைக் காப்பாற்றி வந்தார். இப்போது நாசம்ப்போன அந்த கத்தோலிக்க சர்ச் அல்லவா இப்போது தொழிலாளி வர்க்கத்தோடு தோளோடு தோள் உரசி அதன் புரட்சிஉணர்வுகளைத் தூண்டி நிற்கிறது! பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரமாக விளங்கும் கம்யூனிஸ்ட் அரசை எதிர்த்துப் போர்க்கொடி தூக்கியுள்ள பாட்டாளி வர்க்கத்துக்கு துணையாக அல்லவா இப்போது அந்த சர்ச் திரும்பிவிட்டது! மார்க்ஸ் விதித்த சோஷலிஸ் வாய்ப்பாடுகள் அனைத்துக்கும் அல்லவா ஒவ்வொன்றாக சவால் விடப்பட்டுள்ளன!…
God That Failed எழுதிய எழுத்தாளர்களும் கலைஞர்களும் சிந்தனையாளர்களும் ஒரு காலத்தில் மார்க்ஸிஸத்தை நம்பி பின் அனுபவித்த மனவேதனைகளும் மனசாட்சி உறுத்தல்களும் நம்பிக்கைகள் கைவிட்ட ஏமாற்றமும் நாம் சர்ச்சித்துக் கொண்டிருக்கும் மார்க்ஸிஸ்டின் கிட்டக் கூட நெருங்கவில்லை.. ..அப்படியே இருக்கட்டும். போலந்தில் வார்ஸா தெருக்களில் க்டான்ஸ்க் கப்பல் கட்டும் துறையில் காணும் உண்மை நிலவரம் புறவயமாகக் காணும் யதார்த்தம் மேற்கும் கிழக்கும் தம் நோக்கத்திற்குப் பயன்படுத்துவதாகச் சொல்லப்படும் அந்த யதார்த்தம் தான் என்ன என்று இந்திரா பார்த்தசாரதி சொல்கிறார்?….மார்க்ஸீய சித்தந்த விளக்கங்கள் இருக்கட்டும். புறவயமாகக் காணும் உண்மை நிலவரத்தை அறிய வார்சா தெருக்களில் கால்கள் அல்லவா பதியவேண்டும். அலைய வேண்டும். க்டான்ஸ்க் கப்பல் கட்டும் துறைக்குப் போக முடிகிறதோ இல்லையோ. தெருவில் இறங்கி ஒரு சாதாரண மனிதனை ஏதும் ஒரு தொழிலாளியை அல்லது தெருவில் காணும் எவனையாவது சந்திக்க வேண்டும். இதையெல்லாம் தன் வகுப்பறையில் அடைந்து கிடக்கும் ஒரு பல்கலைக் கழக பேராசிரியரிடம் அதிகம் எதிர்பார்க்க இயலாது என்று சொல்லலாம்.. நாவலைப் படித்த நமக்கு இந்திரா பார்த்த சாரதி பல்கலைக் கழகக் கட்டிடத்தின் வெளிக்கதவுகள் வரை கூடச் சென்றதாகத் தடையும் இல்லை. அவரது நேரம் எல்லாம் வார்ஸாவில் உள்ள இந்திய தூதருடனும் இந்திய தூதரைக் காண வருவோருடனும் தூதரக அலுவலர்களுடனுமே பேசுவதில் செலவழிந்துள்ளதாகத் தெரிகிறது. நாவல் முழுதும் சந்திப்புகளும் பேச்சுக்களும் கோர்க்கப்பட்ட சங்கிலியாகவும் அந்த சந்திப்புகள் அத்தனையும் தூதரகத்தில் அல்லது மதுபான விருந்துகளில் நிகழ்வனவாக இருக்கின்றன..முதலில் வார்ஸவா பல்கலைக்கழகத்தையே கூட இந்த நாவலில் கண்டுபிடிப்பது அரிதான ஒன்றாகியுள்ளது. இவ்வளவுக்கும் கிட்டத் தட்ட ஐந்தாண்டுகள் நம் ஆசிரியர் அங்கு தங்கியிருந்த போதிலும்(6).
இ.பா.வின் நாவலில் போலந்து நாடு பற்றி வெளிப்படும் சித்திரம் இதுதான். வெங்கட் சாமிநாதன் குறிப்பிடும் நடைமுறை அரசியல் எனும் அளவில் இ.பாவில் தவறுவது சொலிடாரிட்டி – கத்தோலிக்க தேவாலயம் – தொழலாளர் எழுச்சி என்பன குறித்த ஆதாரமான சித்தரிப்புகள் என நாம் ஒப்புக் கொள்ளும் போது, இ.பாவிடம் வெளிப்படும் மிகநுட்பமான போலந்து-இந்திய அதிகாரவர்க்கம், ஜனநாயகம், அதிகாரவர்க்க போலித்தனம் போன்றவை குறித்த ஒப்பீடுகளையும் ஒப்புமைகளையும், சமவேளையில் வெங்கட் சாமிநாதன் போன்று போலந்து நாடு மார்க்சைத் தலைகீழாக நிறுத்தியது என்பதனை மறுதளித்து, நிலவிய சோசலிச அமைப்புக்கு எதிராக சொலிடாரிட்டி சார்பாளர்கள் எவ்வாறு பொய்களையும் அதீதங்களையும் கட்டியமைத்தார்கள் என்பதனையும், போலந்து அரசு எவ்வாறாக ஒரே சமயத்தில் மார்க்சியத்தையம் கத்தோலிக்கத்தையும் நடைமுறையில் அனுசரித்துப் போனது என்பதையும், நெருக்கடி நிலை காலத்தில் கூட ‘பந்தா’ இல்லாமல் ஜாருசெல்ஸ்க்கி எளிமையாகப் பயணம் மேற்கோள்கிறார் என்பதனையும் இ.பா. சித்தரிக்கிறார்.
சோவியத் யூனியனிலும் கிழக்கு ஐரோப்பாவிலும் கடந்த அரைநூற்றாண்டு நடந்து வந்திருக்கிற மாற்றங்களையும், மார்க்சியர்களுக்கிடையில் நடந்து வந்திருக்கிற மாற்றங்களையும் அறிந்தவர்கள் வெ.சாவின் ‘தலைகீழ் மார்க்ஸ்’ சொற்பிரயோகங்கள் மிகையானவை என்பதையும், இ.பாவின் ஆர்ப்பாட்டமில்லாத அமைதி அர்த்தமுள்ளது என்பதையும் உணர்ந்திருப்பார்கள்.
ஸ்டாலின் விமர்சிக்கப்பட்ட அளவு வெறுக்கப்பட்ட அளவு லெனின் இந்நாடுகளில் வெறுக்கப்படவும் இல்லை, தூக்கியெறிப்படவும் இல்லை. இவர்கள் இருவரோடும் ஒப்பிட மார்க்சினது பகுப்பாய்வு முறையும், அந்நியமாதல் பற்றிய அவரது கோட்பாடும், ஒரு கனவுச் சமூகம் எனும் அளவில் சோசலிசமும் இன்னும் பலம்வாய்ந்த ஆதர்ஷமாகவே இருக்கிறது. மார்க்சின் நூல்களும் அவரது பொருளாதார ஆய்வுகளும் இன்றும் அமெரிக்காவின் ஐரோப்பாவின் பொருளியல் நெருக்கடிகளின் போதும் மார்க்ஸ் சொன்னது இன்றும் சரிதான் என பேசுவதற்குக் காரணமாகவே இருக்கிறது.
ஸ்டாலின் குறித்த விமர்சனத்தை கம்யூனிஸ்ட் கட்சிக்குள் இருந்தவர்களே முன்வைத்தார்கள். சீர்திருத்தங்களையும் அவர்களே மேற்கொண்டார்கள். இன்றும் உலகெங்கிலும் சமூகநீதிக்காகவும், ஒடுக்குமுறைக்கெதிராகவும் அவர்களே போராடுகிறார்கள். புதிய நெருக்கடிகளுக்கு ஏற்ப தம்மைத் தகவமைத்துக் கொள்வதில் அவர்களே ஈடுபட்டு வருகிறார்கள். இது குறித்து நிறைய கோட்பாட்டு முயற்சிகள் நடந்து வருகின்றன. ஸ்டாலினியம் பற்றிய விமர்சனம் கொண்ட ஐரோப்பிய மார்க்சியர்கள் நிலவிய சோசலிசம் வீழ்ந்த போது அதனை ஒரு புதிய திறப்பு எனவே கண்டார்கள். இந்த மரபு பிராக் மாணவர் எழுச்சி முதல் இன்றைய முதலாளித்துவ எதிர்ப்பு இயக்கம் வரை இருக்கிறது. இதனது தொடர்ச்சியாகவே பிராங்கபர்ட் சிந்தனைப் பள்ளியைச் சேர்ந்த ஹேபர்மாஸ் ‘புரட்சிகர ஜனநாயகம்’ (Radical Democracy) என்பதைப் பேசுகிறார்(7).
ஐரோப்பிய நாடுகளில் இன்றும் கோடிக் கணக்கானவர்கள் வேலையின்றி இருக்கிறார்கள். நிலவிய சோசலிசக் காலகட்டத்தில் அந்நாடுகளில் அனைவருக்கும் வேலையுத்தரவாதமும் சமூக உத்தரவாதமும் இருந்தது. இதனையே போலந்துக்குப் பொருத்துகிறார் இ.பா. போலந்தில் நுகர் பொருள் பற்றாக் குறையிருந்தது, அரசு சொலிடாரிட்டியை பலவீனப்படுத்த திட்டமிட்டு இதனைச் செய்தது. அங்கு வறுமையோ பட்டிணியோ இல்லை. வேலையின்மைப் பிரச்சினையும் இல்லை. ஆதிகார வர்க்கம் எனும் அளவில் போலந்து அதிகார வர்க்கம், கருத்தியல் நீக்கப்பெற்ற இந்திய அதிகார வர்க்கம் போன்றதுதான் என்பதை ஒப்பிடாக முன்வைக்கிறார் இ.பா. நடைமுறைச் சித்தரிப்பில் தவரவிடுவதை அரசியல் கருத்தியல் தளத்தில் இ.பா.நிரவிவிடுகிறார்.
போலந்திலிருந்து நகர்ந்து தமிழக யதார்த்தமாக இ.பா.சொல்வது கும்பகோணத்தின் பிராமணக் குடும்ப யதார்த்தம்தான். போலந்து அதிகார வர்க்கம் இந்திய அதிகார வர்க்கம், அதனுள் இருந்து எழும் கருணை நிறைந்த தூதரக மனிதர்கள் எனச் சித்தரிக்கும் இ.பா, இயல்பாகவே போலந்து தொழிலாளி வர்க்கம், அவர்களது எழுச்சி போன்றவற்றைச் சித்தரிக்காதது போலவே, கடந்த இருபது ஆண்டுகளின் விளிம்பு நிலை அரசியலையோ அதனது மாந்தர்களையோ இ.பா சித்தரிக்கவில்லை. அறுபதுகளின் இடதுசாரி அரசியலில் ஈடுபட்ட பிராமணக் குடும்ப உறுப்பினர் ஒருவரது குடும்பப் பொறுப்புகள் நிராகரிப்பும், புரட்சிக் கனவில் சரணடைந்த தப்பித்தலும் சொல்லப்படுகிறது. ஓரு புறம் மிகப்பெரும் நம்பிக்கைகளின் வீழ்ச்சி. அதனால் எழும் நிரந்தரக் குற்றமனம். மறுபுறம் அன்பையும் பாசத்தையும் கடவுள் நம்பிக்கை போல் காவித் திரியும் வறிய முதிய தமிழக வைஷ்ணவ பிராமணப் பெண். மதிப்பீடுகளின் வீழ்ச்சி குறித்து அதிகார வர்க்கத்தின் பின்னணியில் போலந்து நிலைமையில் பேசும் இ.பா, தமிழக நிலைமையில் குடும்பத்தை முன்வைத்து மதிப்பீடுகளின் வீழ்ச்சியைப் பேசுகிறார். இந்த இரண்டு வீழ்ச்சிகளின் பின்னும் இலட்சியவாதமும் அதற்குப் பின்னான கருத்தியல் கடப்பாடும் இருந்திருக்கிறது. அது மனிதர்களை மீளமுடியாது கேவலத்தினுள் துக்கத்தினுள் ஆத்மீக மரணத்தில் வீழ்த்தியிருக்கிறது என்கிறார் இந்திரா பார்த்தசாரதி.
VII
தமிழவனதும் இ.பாவினதும் நாவலில் உள்ள ஒப்புமைகள் எனில் மிகச் சிலவற்றையே நாம் குறிப்பிட முடியும். இரண்டு நாவல்களிலும் ஓவியர்கள் வருகிறார்கள். அவர்களது ஓவியங்களின் பின்னணியில் அவர்களது படைப்பு மற்றும் உளவியல் நடத்தைக்கான விசேஷமான காரணங்கள் இருக்கிறது. தமிழவனின் நாவலில் வரும் ஓவியங்களின் பின்னணியில் இருண்மையும் பாசிசமும் ராணுவத்தினரின் பிரசன்னமும் இருக்கிறது. அவரது பிறப்பின் பின்னணியாக வரும் கதை தமிழவனின் அற்புதமான மொழிநடை கொண்ட ஒரு தனித்த சிறுகதை போன்று நெஞ்சை கனக்கச் செய்துவிடுகிறது. போலந்தை ஆக்கிரமித்த ஜெர்மானியப் படை அதிகாரிக்கு ஜெர்மன் மொழிபெயர்ப்பாளராகப் போன ஒரு பெண்ணின் பயங்கரமான அனுபவம் அக்கதை. அரசியல் சூழலில் வீசப்பட்ட ஒரு எளிய போலந்துப் பெண், சித்திரவதைகளினதும் கொலைகளினதும் சாட்சியாக ஆகிறாள். சொந்த மக்களின் துரோகியாகவும் அவள் ஆகிறாள். பிற்பாடு நாசிகளிடமிருந்தும் அவள் தப்பிக்கிறாள். அவளது மகனே தமிழவனது நாவலின் ஓவியன்.
இ.பாவினது ஓவியன் கனவையும் நனவையம், இருத்தலையம் இன்மையையும் தன்னைச் சுற்றிலும் சிருஷ்டித்துக் கொண்டு அதனையே நிஜமென நம்பி வாழ்பவன். பிறரையும் அதனை நம்ப வைத்து வாழ்பவன். இந்தக் கதையை தனது மந்திரவயமான மொழியினால் எழுதியிருக்கிறார் இந்திரா பாரத்தசாரதி.
பெரிதும் அரசியல் அற்ற தமிழவனின் நாவலில் நக்ஸல் அரசியல் பற்றிய குறிப்பீடுகளும், மலைவாழ் மக்கள் குறித்த போராட்டங்களும் சித்தரிப்புப் பெறுகின்றன. தனது போராளிக் காதலனுக்காக காவல்துறையதிகாரியான தனது சொந்த தந்தையையும் வர்க்க எதிரியையம் பழிவாங்கும் மருத்துவக் கல்லூரி மாணவியும் சித்தரிக்கப்படுகிறார். எல்லை கடக்கும் போது மரணமுறும் இலங்கை அகதி சித்தரிக்கப்படுகிறார். இவையெல்லாம் தமிழவனின் நாவலில் வந்து போகும் பாத்திரங்களின் குறுகிய கதைகள். இ.பாவின் நாவலை ஒப்பிடுகிறபோது தமிழவனின் நாவலில் பிரதான பாத்திரமாக வரும் ஆண் அவனுடன் நெருக்கமாகப் பேசப்படும் ஐந்து பெண்களில் நான்கு பெண்களுடன் உடலுறவு அனுபவங்கள் பெறுகிறான். இதில் மனைவியுடன் மாஜிக் ரியாலிச பாணி சடங்கில் உறவு கொள்கிறான். பிறிதொரு பெண்ணுடன் கனவில் ஸ்கலிதம் வருகிறது. போலந்துப் பெண்ணுடனும் கனவில் உடலுறவு கொள்கிறான். நாவலில் அவன் சந்திக்கும் எல்லாப் பெண்களதும் முலைகளும் பிருஷ்டமும் தப்பாது வர்ணனைக்கு உள்ளாகிறது. மேற்கு கிழக்கென எல்லாப் பெண்களினதும் உடலில் புகுந்து புறப்பட்டிருக்கும் இந்நாவல் நிச்சயமாகவே தமிழவன் கருதுகிற அரவிந்த் அடிகாவின் ‘உலக’ நாவல் பண்புகள் கொண்டது என நாம் தயங்காமல் சொல்ல வேண்டும்.
ஐரோப்பாவில் எனது வாசிப்பின் அளவில் அதியற்புதமான அரசியல் நாவல்கள் வெளியாகி வருகிறது. ரோஸா லக்ஸம் பர்க் (Rosa : A Noval : Johnathan Rabb), வால்ட்டர் பெஞ்ஜமின் (The Angel of History : Bruno Arpaia) பிரைடா கலோ பற்றிய நாவல்கள் (Freida : A Novel : Barbara Mujica) வெளியாகியிருக்கிறது. இந்த நாவல்களில் மூன்று அடிப்படைகளில் கதை இயங்குகிறது. முதலாவதாக கதைமாந்தர் வாழும் நிலப்பரப்பு குறித்த அதியுயர்ந்த சித்தரிப்புகள் இந்நாவல்களில் இருக்கின்றன. கதைமாந்தர் வாழ்ந்த அரசியல் சூழல் குறித்த துல்லியமான வரலாற்றுச் சித்தரிப்புகளை இவர்கள் சாதித்திருக்கிறார்கள். கதையில் சித்தரிக்கப்படும் ஆளுமைகள் குறித்த ஆய்வுபூர்வமான சித்தரிப்புகள் இவைகளில் இருக்கின்றன. இவையனைத்துக்கும் மேலாகக் கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் இணைக்கும் விமர்சனபூர்வமான அறவுணர்வு இந்நாவல்களில் இருக்கிறது(8).
போலந்தில் வாழ்ந்த தமிழவனுக்கும் இ.பா.வுக்கும் அற்புதமான வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. போலந்தை முன்வைத்து, கிழக்கு ஐரோப்பா, நிலவிய ஒரு கனவின் வீழ்ச்சி, இந்திய தமிழக வாழ்வினோடு அதனது ஊடாட்டம், என அற்புதமான நாவல்களை இவர்கள் கொடுத்திருக்க முடியும். ஓரு நாவலின் ஆதாரத்தன்மை என்பது படைப்பாளியின் வாழ்ந்துபட்ட அனுபவத்தின் ஆதாரத்தன்மை மட்டும் அல்ல. ஆய்ந்து தேர்ந்து கொள்ளும் படிப்பு சார்ந்த ஆதாரத்தன்மையையும் நாம் இங்கு சேர்த்தே குறிப்பிடுகிறோம். தமிழக மார்க்சியமும், இடதுசாரி அரசியலும், விளிம்புநிலை அரசியலும் இவ்வாறு போலந்து நிலைமைகளோடு வைத்து ஒப்பிட்டுக் காட்டப்பட்டிருக்க முடியும். இந்திய நிலைமைகளோடு இவற்றை வைத்துப் பேசியிருக்க முடியும். தமிழவன் இ.பா. என இந்த இருவருமே ஒரு போதேனும் இந்த மார்க்சியக் கனவில் ஆழந்தவர்கள்தான். அந்த வாய்ப்பை அவர்கள் தவறவிட்டிருக்கிறார்கள்.
தமிழவன் இந்து பிராமணனது வாழ்க்கையை, அவனைக் கடவுளாகக் கொண்டாடும் போலந்து மனச்சார்பை நாவலெங்கும் அலையவிட்டிருக்கிறார். தமிழவனது நாவலின் பிரதான ஆணும் கூட இறுதியில் அந்தக் கடவுளின் பார்வையில்தான் அலைக்கழிக்கப்படுகிறான். தமிழவனின் நாவல் கடந்த இருபது ஆண்டுகளின் போலந்து வாழ்வையும் சொல்லவில்லை. வரலாறு மற்றும் கருத்தியல் சார்ந்த அனுபவங்களையும் பேசவில்லை. தமிழக வாழ்வையும் அவரது நாவல் சொல்லவில்லை. இ.பா. அதிகாரத்திற்கு எதிராகப் போராடிய அடித்தட்டு போலந்து மக்களைத் தனது சித்தரிப்புக்குள் எடுத்துக் கொள்ளவில்லை. தமிழகத்தின் அடித்தட்டு மக்களையும் அதனால் இயல்பாகவே அவரால் எடுத்துக் கொள்ள முடியவில்லை. இ.பாவின் பாத்திரங்கள் எவரும் வார்ஸாவில் தெருக்களில் நடப்பதைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்களாக இல்லை. இ.பாவினது நாவல் குறைந்தபட்சம் அதிகார வர்க்க அரசியல் குறித்த சித்திரிப்புத் தேர்வு, குறைந்தபட்சம் எதேச்சாதிகாரம் போலந்து-இந்தியா என இரு சமூகங்களிலும் இருக்கிறது என்கிற ஒப்பீட்டுக்கேனும் எம்மைத் தூண்டுகிறது. ஆய்வும், அனுபவமும், வரலாற்றுத் தோய்வும் கொண்ட நாவல் தமிழில் என்று வரும் என்ற ஏக்கமே தமிழவனது ‘வார்ஸாவில் ஒரு கடவுள்’ நாவலையும், இ.பாவின் ‘ஏசுவின் தோழர்கள்’ நாவலையும் படித்து முடித்த வேளையில் என்னிடம் எஞ்சியிருந்தது.
—————————
பின்குறிப்புகள் :
1.அருந்ததி ராயின் நாவல் பற்றிய எனது விரிவான விமர்சனம் காலக்குறி : மார்ச் 1999 இதழிலும், ஒன்டாஜியினதும் சிவானந்தனதும் நாவல்கள் பற்றிய எனது விரிவான விமர்சனங்கள் அம்ருதா பதிப்பகத்தின் 2007 ஆம் ஆண்டு வெளியீடான ’ஈழ அரசியல் நாவல்’ நூலிலும் வெளியாகியிருக்கின்றன.
2.அரவிந்த அடிகா காட்டும் இந்தியா எது? : இந்திரா பார்த்தசாரதி : உயிரோசை : 2008.
3.நம்மூரின் கலாப்ரியாவும் அர்விந்த் அடிகாவும் : தமிழவன் : உயிரோசை : 2008.
4.East European Marxism : Dictionary of Marxist Philosophy by Andrew Arato : Editor : Tom Bottomore : Blackwell : 1996.
5.From Stalinism to Post-Communist Pluralism :The Case of Poland : Andrezej Valucki : New Left Review: 181/1991.
6.மார்க்ஸை தலை கீழாக நிற்க வைத்த போலந்தில் – ஒரு விலாங்கு மீன் : வெங்கட் சாமிநாதன் :Tamil Hindu.com : 06.01.2010.
7.Overcoming the Past : Jurgan Habermas and Adam Michnik : New Left Review : 203/1994.
8.ரோஸா லக்ஸம்பர்க் மற்றும் வால்ட்டர் பெஞ்ஜமின் பற்றிய நாவல்கள் குறித்த எனது விரிவான விமர்சனக் கட்டுரைகள் உயிர்மை பதிப்பகத்தின் 2008 ஆம் ஆண்டு வெளியீடான ‘ஜிப்ஸியின் துயர நடனம்’ நூலில் வெளியாகியுள்ளன.
————————————————————————————————————
நன்றி : கோவை ஞானி தொகுத்த ‘தமிழ்மலர் 2010’ : ஜூன் 2010
சரியான சமயத்தில் அறுமையான நூல் விமர்சனம்!./தெற்காசிய இலக்கியம் மேற்கில் கொடி கட்டிப் பறப்பதற்கான இரண்டு இலக்கியக் காரணங்கள் உண்டு. ஒன்று நமது நாடுகளில் பிரச்சினைகள் என்பது குவிந்து கிடக்கிறது. மேற்கில் ஒரு படைப்பு வெற்றிடமும் ஆன்மீக வெற்றிடமும் உருவாகியிருக்கிறது/– இந்த வரிகள் அறுமையிலும்,அறுமை!.
இவர்கள் இருவரும் “தமிழாசிரியர்களாக இருப்பதால்” முக்கியத்துவம் பெறுகிறது.இவர்கள் மீது “பிராமணர்கள்” என்ற கண்ணோட்டம்,”தமிழ்நாட்டின்” “ஸ்டீரியோ டைப்” எண்ணங்களுக்குள் புகுத்திவிடும் என்பதால்,இந்தியாவின் மாபெறும் “அதிகாரவர்கத்தின் அங்கமாக” கொள்வதில்,பலவிதமான சாதக,பாதகங்களை யதார்த்த ரீதியில் அணுக முடியும்.
“இந்தியாவின் பனிப்போர் காலத்து அணிசேரா கொள்கையின்” கிழக்கு ஐரோப்பாவின் இந்திய தூதரக அலகுகளே,இவைகள்!.
யுகசலோவியாவின் மார்ஷ்ல் டிட்டோ இப்பகுதியில் இதன் தாளாலராக இருந்தாலும்,ஸ்டாலினிய கொள்கைகளிலிருந்து(சோவியத் செல்வாக்கிலிருந்து) விலகி நின்ற ஒரு குட்டி ஸ்டாலினியமே நேருவினடையதும் ஆகும்!.ஆனால்,ஸ்டாலினியத்திற்கு நேர் எதிரான,”ட்ராட்ஸ்கியஸ்த்தை” இவர்களோ,லெஸ் வலேசாவின் (போலந்து) சாலிடாரிட்டி இயக்கமோ,கொண்டிருக்கவில்லை!.
அணிசேரா நாடுகள் பல “பக்க சார்பாகவே” செயல்பட்டன.
ஒரு அதிசயமாக,போலந்தை பூர்வீகமாக கொண்டவர்களின் தொகை,அமெரிக்காவில்,இருபது இலட்சத்திற்கும் அதிகமாகும்.ரொனால்ட் ரீகனின் கொள்கை சோவியத் உடைவின் போது,இந்த கத்தோலிக்கர்களின் மூலமாகவே செயல்பட்டது.தொழிலாளர்கள்,மார்க்ஸியத்தை புரட்டிப் போட்டனர் என்பது தற்போதைய போலந்தின் பொருளாதார முன்னேற்றதை அணுமானிப்பவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்!.
கோவை செந்தமிழ் மாநாட்டில் பின்லாந்து தமிழறிஞர்,”அஸ்கோ பர்போலா”,சிந்துவெளி நாகரீகம்,இந்தோ ஐரோப்பிய நாகரீகம் அல்ல என்று நிறுவ முற்ப்படுபவரே தவிர,அது தமிழர் நாகரீகம் எப்பதில் அவர் நோக்கம் இல்லை.இதற்கு “பின்னோ- யுக்கிரிக் மொழிக் குடும்ப ஆராய்ச்சி” வரலாற்றின் மூலத்தில் விடைகாணலாம்.இது இந்தோஐரோப்பிய மொழி ஆராய்ச்சிக்கு முந்தையது.இதை “ஹங்கேரியில்” நடத்தியவர்கள் பெரும்பலும்,”ஜெர்மானியர்களே”!.இதை வாயைப் பிளந்து ரசிப்பதை விட,இதற்குப் பின்னால் பலவித அரசியல் நகர்வுகளை தற்கால,மதிப்பீடுகளுடன் உற்றுநோக்குவது பலன் தரும்……..
… இத்தகைய தமிழாராய்ச்சி,இந்தோ-ஐரோப்பிய– பின்னோ-யுக்ரிக்(ஸ்லாவேனிய?),முரண்பாடுகள்?, முதலில் “இத்தாலியினலேயே” முன்னெடுக்கப்பட்டது,ஐரோப்பிய,சிறுபான்மை,மொழி-இனங்களினால்,முன்னேற்றம் பாதிக்கப்படும் என்ற “ஹிட்லரின் நாசிக் கொள்கை” இதனுடன் இணைந்தது.
செந்தமிழ் மாநட்டில்,பெரிதாக பேசப்பட்டது,”தமிழின் மீது,வெளிநாட்டு அறிஞர்களுக்கு இருக்கும் அக்கறை,தமிழர்களுக்கு இல்லை என்பது”.வெளிநாட்டு தமிழ்? அறிஞர்கள்,தங்களுடைய “பூர்வீக” ஆராய்ச்சியின் தொடர்ச்சியாகவே மாநாட்டில் அறிக்கைகள் சமர்ப்பித்தனர்!.அவர்களை தவறாக பின்வருமாறு வழிநடத்துவது தமிழர்களுக்கு நல்லதல்ல.”தற்போதைய ஆசிய பொருளாதரம் என்பது”…முன்னாள் மேற்கத்திய அடிவருடிகளின் “குருவை மிஞ்சிய சிஷ்யர்களின்” “கெக்கரிப்புகளே”!.இந்த சிஷ்யர்களுக்கிடையில் நடக்கும் உள் முரண்பாடுகளே,இலங்கையில் நடந்த “கொடூர முகம்”!.
Colonialism and its forms of knowledge: the British in India
By Bernard S. Cohn.
The original conference was held at the Hotel de Bilderberg, near Arnhem in The Netherlands, from 29 May to 31 May 1954. It was initiated by several people, including Józef Retinger, concerned about the growth of anti-Americanism in Western Europe, who proposed an international conference at which leaders from European countries and the United States would be brought together with the aim of promoting atlanticism – better understanding between the cultures of the United States and Western Europe in order to foster cooperation on political, economic, and defense issues.
Bishop Robert Caldwell (1814–1891) was a Colonial Era Evangelist Missionary who used native languages as a tool to proselytize the Colonised in Southern India. To aid his mission, he nativised Christianity by adopting a teleological approach to re-classify Indian languages inspired by scientific racial theories that was popular amongst the European intellectuals in the 19th century. His works revolve around the missionary work in Tinnevelly (Thirunelveli) district in Tamil Nadu and it laid the theoretical foundation for the political and academic ‘revivalist’ movement that came to dominate Dravidian nationalism in Tamil Nadu and racial polarisation in Sri Lanka.
One of the few Europeans of the nineteenth century who was not dismissive of the Indian form of education based on memorization was Francis W.Ellis. ELLIS was one of the founders of the company’s college at Fort St.George in 1812. Ellis wrote,on “the habit of their education,”which rested on the memorization of,”concentrated not diffuse knowledge”,which was easier to comprehend in verse form.The use of TAMIL in its verse form also would diminish the influence of the “BRAHMINS”,who were regarded with “Jealously” by the shudras in south India!.”பிராமணர்கள்”,சூத்திரர்களால்,பொறாமையாக பார்க்கப்பட்டார்கள் என்று “எல்லீஸ் அவர்கள்” கூறுவது சரியில்லை.இது ஒரு இந்திய “தரவு அல்ல”.பிராமணர்களின் மதச்சடங்கு பற்றிய நூல்கள் பலவித தொழில்கள் செய்து கொண்டிருந்தவர்களுக்கு அவசியமாக இருக்கவில்லை.ஐரோபாவில் இதே காலகட்டதில்,லத்தீனும்,கிரேக்கமும்,மத நிறுவனங்களால் மட்டுமே கற்கப்பட்டு வந்தது.கல்வி நிலையிலும்,அச்சுக்கு நூல்கள் வந்த பிறகே தொழிலாளிகள் கற்க முடிந்தது.சாதிய ஒடுக்கு முறைக்கு எதிராக “இந்திய சமூக விடுதலை கருத்துக்கள்” பரிணாம வளர்ச்சி பெற்றிருந்தால் வரவேற்கலாம்.கலனித்துவ நிறுவனத்தின் ஊன்றுதலுக்கு,துவங்கப்பட்ட “தமிழாராய்ச்சியும்” அதனை ஒட்டிய செயல் திறனற்ற “பிராமண எதிர்ப்பும்” தற்போதை சூழலில் குழப்பத்தையே தோற்றுவித்துள்ளன!- இந்திய அதிகார வர்கத்தின் உள் பரிமாணங்களையும்,நகரும் இயந்திரத் தன்மையையும் சரியாக புரிந்துக் கொள்ள முடியாமல்!!.
உளறூவதற்கென்றே உள்ளவரோ தாங்கள்/ வேதங்கள காட்டி பேதங்கள ஏற்படுத்தின பிராமணனால் திராவிடர்களூக்கு (தெலுங்ககர்) முன்னேற்றமில்லை என் உணர்ந்த் கன்னட பலிஜா மலையாளீகளோடும் இனைந்து கண்ட பிராமண எதிர்ப்பு தமிழை,தமிழனது தமிழ் உணர்வை அழித்தது இன்னும் இன்றூம் சென்னை நகரில் இருக்கும் பிரதான தெருவெல்லாம் தெலுங்கன் பெயர்கலே.ஆக தமிழ்த் தாய்க்கு தீங்கு செய்யும் திராவிட மாயை மரைந்தால் மட்டுமே தமிழன் மீள முடியும்.
இந்திய அதிகார உலகம் என்பது,இந்திய சட்டங்களை படித்து வளர்ந்த ஒரு தலைமுறையினர்!.சார்லஸ் பிலிப் பிரவுன்(1800),கலைஞர் தலையில் வைத்து கூத்தாடும் “பிரான்சிஸ் வைட் எல்லீஸ்((1777 – 1819),சர் வில்லியம் ஜோன்ஸ்(1746 – 1794),வாரன் ஹஸ்டிங்ஸ்(1732 – 1818),ஆகியோர் இந்திய சட்டமூலத்தை உருவாக்க முயன்ற போது,தங்களால் புரிந்துகொள்ள முடியாத இந்திய கலாச்சாரத்திற்கு கொடுத்த அடைமொழிதான் “பினவலண்ட் டெஸ்போட்டிஸம்(பண்பான சர்வாதிகாரம்)”!.அதாவது சீன கலாச்சரத்தை புரிந்துக் கொள்ள முடியாமல் “கன்பியுஷியானிஸம்” என்று அடைமொழி கொடுத்தது போல்!.இதில் காலனித்துவ “ராபர்ட் கிளைவ் அ முதலாம் ஃபேர்ன் கிளைவ்((1725 – 1774),காலத்தில் துவங்கிய “கிழக்கிந்திய கம்பெனியின்”,”பிரிட்டிஷ் இறையாண்மை” 1864 ல் “இந்திய அடையாளத்தை” சட்ட மூலத்தில் ஒழித்துக் கட்டியது.தற்போதைய உலக மயமாக்கலில்,அமெரிக்கா,இந்த மூலத்திலிருந்தே,(பினவலண்ட் டெஸ்போட்டிஸம்,கன்பியூஷியானிஸம்) தரவுகளை முன் வைக்கிறது.அதாவது,”உலகமயமாக்கல் அமெரிக்காவுடன்” கை கோர்த்திருக்கும் இந்திய அதிகாரவர்க்கம்,தனது “மூலமாக” இந்திய? தேசிய உணர்வை கொண்டிருக்கவில்லை!.அமெரிக்க கலாச்சாரத்தின் “தரைத்தட்டலே”,பல பிரச்சனைகளுக்கு காரணமாக உள்ளது.இதனுடைய நோக்கம் பற்றி பலர் பாசிட்டிவாக விவாதித்தாலும்,இது காலனித்துவ தரவுகளை நடைமுறைபடுத்துவதால்,இந்திய தூதுவராலயங்களில் இலங்கைத் தமிழர்கள் என்னதான் கெஞ்சினாலும்,ஒரு “நியாய பூர்வமான அணுகுமுறைகள் போல்” “முள்ளியவாய்க்கால்கள் முகத்தில் அறையப்படுகின்றன”!.காலனித்துவ காலத்தில் இத்தகைய போக்குகளை ஆதரித்தவர்களே,இதற்கு இயல்பாக,”உடல் மொழி ரீதியில்” ஆதரவை வெளிப்படுத்துகிறார்கள்!.
துட்டுக்கு இரண்டு கொட்டைப் பாக்கு —
ஒரு தரம் !
இரண்டு தரம் !!
மூன்று தரம் !!!
வந்துட்டான்ய்யா!….அந்த மசாலாவை துரத்தி விட்டா… இந்த “டிரிபிள் எக்ஸ்”
திரு.யமுனா ராஜேந்திரன் அவர்களே!,இந்த திரைப்படத்தின் விமர்சனம் தொடர்பான கட்டுரையை இந்த இணைய தளத்தில் வெளீயிடுவீர்களா?.SEDUCING MAARYA(1999).
http://www.videolinks4u.net/video/videos/39459/