வன்னிப் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் தொடர்பாக செயற்படுவதற்கு கல்வியமைச்சின் செயலாளர் நியமித்த குழுவில் பெரும்பான்மையினத்தவர்கள் பெருமளவில் நியமிக்கப்பட்டுள்ளதுடன் தமிழர்கள் எவருமே நியமிக்கப்படாதது குறித்து தமிழ்க் கல்விமான்கள் சம்பந்தப்பட்டவர்களின் கவனத்துக்குக் கொண்டுவந்துள்ளனர்.
இக்குழுவில் ஏழு பெரும்பான்மையின அதிகாரிகளும் மூன்று முஸ்லிம் அதிகாரிகளும் உள்ளனர். முஸ்லிம் அதிகாரிகள் வடமாகாணத்தைச் சேராதவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இக்குழுவினர் நலன்புரி நிலையங்களுக்கு ஆரம்பத்தில் நேரடியாகச் சென்றிருந்தனர். ஆனால் மொழிப் பிரச்சினையால் உரிய முறைப்படி இவர்களால் செயற்பட முடியவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
எனவே இக்குழுவில் வடமாகாணத்தைச் சேர்ந்த கல்வி அதிகாரிகளை நியமித்தாலே வன்னி மாணவர்களின் பிரச்சினைகள், தேவைகளைக் கண்டறிந்து விரைவாகச் செயற்பட முடியும் என வன்னி மக்களின் புனர்வாழ்வு மீள்குடியேற்ற, மீள் நிர்மாணத்துக்கான அமைப்பு கல்வியமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
வன்னிப் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளுக்காக இந்த அமைப்பு தற்போது செயற்பட்டுவருகிறது.