வன்னிப் பிரதேசம் மீது நடாத்தப்பட்டு வரும் தரை ஆகாயத் தாக்குதல்களால் சுமார் இரண்டரை லட்சம் வரையான மக்கள் இடம் பெயர்ந்து அகதிகளாகி அல்லற்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு உணவுப் பொருட்களும் மருந்து வகைகளும் அவசியத் தேவைகளாக உள்ளன. குழந்தைகள் பால்மா இன்றித் தவிக்கின்றனர். நோயாளர்கள் உரிய சிகிச்சைகள் கிடைக்காமையால் அவதியுறுகின்றனர். மக்கள் மரங்களின் கீழும் வயல் வெளிகளிலும் காடுகளிடையேயும் அன்றாட வாழ்வைக் கழித்து வருகின்றனர். யுத்தத்தில் வெற்றி பெறுவதற்காக உணவையும் மருந்தையும் ஆயுதங்களாகப் பயன்படுத்துவதை அரசாங்கம் உடன் நிறுத்த வேண்டும். வன்னி மக்களைப் பட்டினி போட்டுப் பழிவாங்கும் செயற்பாட்டை அரசாங்கம் உடன் நிறுத்தி அவர்களுக்குரிய அத்தியாவசிய உணவு மருந்து பால்மா என்பனவற்றை அவசரமாக அங்கு அனுப்பி வைக்க வேண்டும் எனப் புதிய- ஜனநாயக கட்சி வற்புறுத்திக் கேட்டு கொள்கின்றது.
இவ்வாறு புதிய- ஜனநாயக கட்சியின் அரசியல் குழு சார்பாக அதன் பொதுச் செயலாளர் சி.கா. செந்திவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் அரசாங்கத்தை வற்புறுத்திக் கேட்டுள்ளார்.
மேலும் அவ் அறிக்கையில், இன்று கிளிநொச்சியைக் கைப்பற்றுவதிலும் வன்னியை மீட்பதிலும் யுத்தம் முனைப்பாக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியும் அமைச்சர்களும் அதனை நியாயப்படுத்துவதில் முழு மூச்சாக உள்ளனர். ஆனால் இதுவரையான படை நடவடிக்கைகளின் உக்கிரத்தினால் சுமார் இரண்டரை லட்சம் மக்கள் இடம் பெயர்ந்து உணவு உடை இருப்பிடமின்றி குழந்தைகளுக்கு பால்மா கொடுக்க முடியாமலும் நோயாளர்களுக்கு உரிய மருந்துகள் இன்றியும் நிர்க்கதிக்குள்ளாகி நிற்கின்றனர். பௌத்த தர்மம் பேசும் ஜனாதிபதியும் அமைச்சர்களும் இந்த மனித அவலம் பற்றி அக்கறை காட்டாது இருந்து வருகின்றனர். வன்னிக்குள் பரிதவிக்கும் தமிழ் மக்கள் இந் நாட்டுப் பிரசைகள் இல்லையா? அவர்களைப் பட்டினி போட்டுப் பழிவாங்க நிற்பதனை ஜனாநாயகம் என்பதா அல்லது பௌத்த தர்மம் எனக் கொhள்வதா? மகிந்த சிந்தனை என்பது இன்று யுத்த சிந்தனையாகி நிற்பதையே காண முடிகின்றது. எனவே வன்னி மக்கள் படும் அவலம் நீக்கவென ஊருக்குப் பெயருக்காக ஒரு சில லொறிகளில் குறைந்தளவு உணவுப்பொருட்களை அனுப்பாது அம் மக்களுக்குத் தேவைப்படும் போதிய அத்தியாவசிய உணவு மருந்துவகைகளை அனுப்ப அரசாங்கம் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையையே வற்புறுத்துகின்றோம்.
அதேவேளை கிளிநொச்சியைக் கைப்பற்றவும் வன்னியை மீட்கவும் நடாத்தி வரும் யுத்தத்தின் மூலம் யுத்தத்திற்குக் காரணமான தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வு கண்டு விட முடியாது என்பதையும் சுட்டிக்காட்டுகின்றோம். சம்பந்தப்பட்ட தரப்பினர் அனைவரும் கலந்து கொள்ளக் கூடிய விரிவான பேச்சுவார்த்தை மூலம் உடன்பாடு காணப்படும் நியாமான அரசியல் தீர்வே யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர உள்ள வழிமுறையாகும். அத்தகைய அரசியல் தீர்வே தமிழ் மக்களுக்கு மட்டுமன்றி நாட்டிற்கும் அனைத்து மக்களுக்கும் அவசியமாகின்றது. அதன் மூலம் ஐக்கியப்பட்ட இலங்கையில் பல்லினங்களும் சமாதானம் அமைதியுடன் இணைந்து வாழும் புதிய சூழல் தோன்ற முடியும் என எமது கட்சி திடமாக நம்புகின்றது என்றும் அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சி. கா. செந்திவேல்
பொதுச் செயலாளர்.
புதிய- ஜனநாயக கட்சி.
Comments 1