17.08.2008.
இலங்கையில் வடக்கே வன்னிப் பிரதேசத்தில் தொடரும் இராணுவ நடவடிக்கை காரணமாக இடம் பெயர்விற்குள்ளாகியிருக்கும் மக்களின் துயர் துடைக்க, கிழக்கு மாகாண சபை அவசர மனிதாபிமான உதவிகளை வழங்க முன்வரவேண்டும் என மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனிடம் கோரிக்கையொன்று முன் வைக்கப்பட்டுள்ளது.
இக்கோரிக்கையை முன் வைத்து கடிதமொன்றை தமிழ் ஜனநாயக தேசியக்கூட்டமைப்பை சேர்ந்த மாகாண சபை உறுப்பினரான இரா.துரைரத்தினம் அனுப்பி வைத்துள்ளார்.
வன்னிப் பிரதேசத்தில் ஏற்கனவே இடம் பெயர்ந்தவர்களும், நிரந்தர வசிப்பாளர்களும் என ஒரு லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இடம்பெயர்விற்கு உள்ளாகி அல்லல்படுவதாகவும், உணவு, உடை, குழந்தைகளுக்கான பால்மா உட்பட இவர்களுக்கான மனிதாபிமான உதவிகளை அனுப்பி வைப்பது குறித்து அக் கடிதத்தில் தான் முதலமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளதாக அவர் கூறுகிறார்.
அத்தோடு மக்களை வெளியேறவிடாமல் விடுதலைப் புலிகள் தடுத்து மனிதக் கேடயமாக பயன்படுத்துவார்களானால் அது கண்டிக்க வேண்டியது என்றும்,
அதே போல மக்கள் குடியிருப்பு பகுதிகள் மீது அரசாங்கத்தினால்
மேற்கொள்ளப்படும் தாக்குதல்களினால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு அரசாங்கமே பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும் கூறுகின்றார்.