வன்னியில் நடைபெற்ற இறுதிக்கட்ட மோதல்களின்போது, பொதுமக்கள் கொல்லப்பட்டமைக்கு இந்தியாவுக்கு தொடர்பிருப்பதாக இந்திய அமைதிப்படையின் முன்னாள் தளபதி மேஜர் ஜெனரல் அசோக் மேத்தா தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் இந்த நடவடிக்கை கவலையையும், குழப்பத்தையும் ஏற்படுத்துவதாக ‘த டைம்ஸ்’ பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இலங்கை இராணுவத்தினர் முன்னெடுத்த இராணுவ நடவடிக்கைக்கு இந்தியா ஆதரவளிப்பதென இந்தியா முடிவெடுத்ததுடன், பின்னர் முழுமையான ஆதரவை வழங்கியுள்ளதெனவும் அவர் கூறினார். எனினும், மோதல்ப் பகுதிகளில் என்ன நடைபெறுகின்றது என்பதை இந்தியா அவதானிக்க அலட்சியம் செய்துவிட்டதாகவும் அசோக் மேத்தா குறிப்பிட்டார்.
இலங்கையில் அதிகளவு செல்வாக்கை கொண்டிருக்கும் சீனா மற்றும் பாகிஸ்தானை முறியடிக்க நினைத்து, காங்கிரஸ் கட்சி தலைமையிலான இந்திய அரசாங்கம் கடந்த சில வருடங்களாக இலங்கைக்கு அதிகளவான ஆயுதங்களை வழங்கியிருந்ததாகவும் அசோக் மேத்தா தனது செவ்வியில் கூறினார். இதனூடாக 1991ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி கொலைக்காக விடுதலைப் புலிகளைப் பழிவாங்க காங்கிரஸ் கட்சி நினைத்ததென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நினைத்திருந்தால் இந்தியா தடுத்திருக்கலாம்
இதேவேளை, கற்பனை செய்யமுடியாத மனிதாபிமான பேரழிவு குறித்து செஞ்சிலுவைச் சர்வதேசக்குழு எச்சரித்திருந்தபோதிலும், இந்தியா அதனைத் தடுக்கமுடியாமல் போனதற்கு இந்த இரு காரணங்களையும் வைத்து நியாயபடுத்தமுடியாதென மனித உரிமைக் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
இந்தியா உரிய நடவடிக்கையை எடுத்திருந்தால் பல உயிர்களைக் காப்பாற்றியிருக்கலாம். யுத்தத்தின் முடிவை இது பாதித்திருக்காதெனவும் அந்த அமைப்பு குறிப்பிட்டது.
விடுதலைப் புலிகளை தோற்கடிப்பதற்காக எவ்வளவு பொதுமக்களைக் கொல்லவேண்டுமோ அவ்வளவு பொதுமக்களை கொல்லலாம் என்ற இலங்கை அரசாங்கத்தின் கருத்தை இந்தியா எவ்வித ஆட்சேபனையும் இன்றி ஏற்றுக்கொண்டுள்ளது என்பதை நம்பவேண்டியுள்ளது என மற்றுமொரு மனித உரிமை அமைப்பான சர்வதேச மன்னிப்புச்சபையின் ஆசிய பசுபிக் இயக்குநர் சாம் ஸரீபி தெரிவித்தார்.
6 கோடி தமிழர்கள் வாழ்கின்ற தேசம் என்கின்றபோதிலும், இந்தியா இலங்கைக்கு இராணுவ உபகரணங்கள், பயிற்சிகள் மற்றும் புலனாய்வுத் தகவல்கள் ஆகியவற்றை வழங்கியயுள்ளதென இராஜதந்திர வடங்டாரங்கள் த ரைம்ஸ் பத்திரிக்கைக்குத் தெரிவித்துள்ளன.
மேலும் சர்ச்சைக்குரிய விதத்தில் இந்தியா இலங்கைக்கு தளர்வற்ற இராஜதந்திர ஆதரவை வழங்கியதுடன் பொதுமக்கள் தப்புவதை உறுதி செய்வதற்காக யுத்தநிறுத்தமொன்று ஏற்பாடு செய்யத் தவறிவிட்டது என்றும் அவை சுட்டிக்காட்டியுள்ளன.
இந்தியா தனது முழுமையான இராஜதந்திர பலத்தையும் பயன்படுத்தாத அதேவேளை, யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கான முழுமையான ஆதரவையும் அனுமதியையும் வழங்கியதெனவும் இராஜதந்திரிகள், மனித உரிமை ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
மோதல் காரணமாகப் பெருமளவு அகதிகள் தமிழ்நாட்டுக்கு வருவது குறித்து மாத்திரம் இந்தியா கவலையடைந்திருந்தது எனத் தெரிவித்துள்ள இராஜதந்திர வட்டாரங்கள், பான்கீமூனின் பிரதிநிதி விஜே நம்பியாரின் பணி குறித்தும் கேள்வியெழுப்பியுள்ளன.
சாட்சியமில்லா மனிதப் படுகொலைகளுக்கு>அசோக் மேத்தா அவர்களின் இப்பதிவை ஓர் சாட்சியாக கொள்ளலாம்! புலிகளைத் தோற்கடிக்க எவ்வளவு மக்களை வேண்டுமானாலும் கொல்லலாம் என்ற இந்திய ஆலோசனை>தமிழ்மக்களின் வரலாற்றில் மாறா வடுவாக பர்ணமித்துக் கொண்டிருக்கும்!