08.11.2008.
வன்னியில் உக்கிரமான மோதல்கள் தொடர்ந்துவரும் நிலையில் ,இந்த வருட இறுதிக்குள் மேலதிகமாக 10,000 பேரை இராணுவத்தில் இணைத்துக்கொள்ளத் தீர்மானித்திருப்பதாக பாதுகாப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இவ்வருடம் அடைந்த வெற்றிகளைத் தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு இராணுவத்திற்கு மேலதிகமானவர்கள் இணைத்துக்கொள்ளப்படவிருப்பதாகவும், “ஒக்டோபருக்கும், டிசம்பருக்கும் இடைப்பட்ட காலத்தில் 14,000 இளைஞர்களை இராணுவத்தில் இணைத்துக்கொள்ள நாங்கள் முன்னர் தீர்மானித்திருந்தோம். ஏற்கனவே 3,300 பேர் இணைத்துக்கொள்ளப்பட்டுவிட்டனர்” எனவும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயகார கூறினார்.
10,000 பேர் இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்பட்ட பின்னர், இந்த வருடத்தில் 40,000 பேரை இணைத்துக்கொள்வதென்ற இலங்iகு பூர்த்தியடைந்துவிடும் என அவர் குறிப்பிட்டார்.
இந்த வருடம் ஜனவரி முதல் செப்டம்பர் வரையான காலப்பகுதியில் 26,000 பேர் மூன்று பிரிவுகளாக இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டதாகவும் உதய நாணயகார கூறினார்.
“இராணுவத்தில் புதியவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைக்குப் பாரிய ஒத்துழைப்பு கிடைத்துள்ளது. புதிதாக இணைத்துக்கொள்ளப்படுபவர்கள் உரிய பயிற்சியின் பின்னரே கடமையில் ஈடுபடுத்தப்படுகின்றனர்” என இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
இதேவேளை, வன்னியில் உக்கிரமான மோதல்கள் தொடர்ந்துவரும் நிலையில் இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்களை இணைத்துக் கொள்ளும் முயற்சிகளையும் இராணுவத்தினர் முன்னெடுத்திருந்தனர்.
பல தடவைகள் பொதுமன்னிப்புக் காலங்களை இராணுவம் வழங்கிய போதும் எதிர்பார்த்த பலன் கிடைக்காததால் இராணுவத்திலிருந்து தப்பியோடிய பலர் கைதுசெய்யப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.