வட கொரியா முதலில் கம்யூனிச நாடல்ல. கம்யூனிசம் என்பது பெரும்பான்மை மக்களின் ஜனநாயக உரிமைகளையும், சுதந்திரத்தையும் உறுதி செய்யும் அமைப்பு முறையாகும். வட கொரிய நாட்டில் ஒருவகையான சர்வாதிகார ஆட்சியே நடைபெறுகிறது. அமரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் வட கொரியா கம்யூனிச நாடு என்று மக்களைத் திசைதிருப்பும் பிரச்சாரங்களை மேற்கொள்கின்றன. வடகொரியாவில் நடைபெறும் தவறுகளை கம்யூனிசத்தின் தவறுகள் எனப் பிரச்சாரம் மேற்கொள்கின்றன.
அண்மையில் வட கொரிய அதிபர் தனது மாமானாரை 120 நாய்களுக்கு இரையாக்கிக் கொலைசெய்தார் என்ற தகவல்கள் உலகின் பல ஊடகங்களில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தின.
இச்செய்தி பொய்யானது என சில நாட்களின் பின்னர் வாஷிங்டன் போஸ்ட் போன்ற ஊடகங்களே ஒப்புக்கொள்ள ஆரம்பித்தன.
உண்மையில் நடைபெற்றது என்ன?
ஹொங்கொங்கைத் தளமாகக் கொண்ட Wen Wei Po என்ற ஊடகம் முதலில் இச் செய்தியை வெளியிட்டது. ஹொங்கொங்கில் வெளியாகும் 21 ஊடகங்களில் நம்பகத்தன்மையைப் பொறுத்தவரை 19 வது இடத்தையே வகிக்கின்றது. தகவலை எங்கிருந்து பெற்றோம் என்ற எந்த ஆதாரமும் இன்றி வெற்றுச் செய்தியாக இந்த ஊடகம் செய்தியை வெளியிட்டது.
செய்தி வெளியான பின்னரும் எந்த சீன ஊடகமும் இச் செய்தி குறித்து மூச்சுக்கூட விடவில்லை. அதே வேளை ஐரோப்பிய ஊடகங்கள் இச்செய்தியை முக்கியத்துவப்படுத்தி வெளியிட்டன. இப்போது சில தென்னிந்திய ஊடகங்களிலும் இச் செய்தி தலைகாட்ட ஆரம்பித்திருக்கின்றது.
ஹொங்கொங் ஊடகத்தில் செய்தி வெளியாகி ஒரு மாதத்தின் பின்னரேயே ஏனைய ஊடகங்கள் செய்திகளை எந்த ஆதராமும் இன்றி வெளியிட ஆரம்பித்தன. இன்று வரைக்கும் அதற்கான ஆதாரம் வெளியிடப்படவில்லை.
இவ்வாறான போலிப் பிரச்சரங்கள் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகின்றன. ஐரோப்பா முழுவதும் கம்யூனிசப் பீதியால் அதிகாரவர்க்கம் மீண்டும் அச்சம் கொள்ள ஆரம்பித்துள்ளைமையையே இவ்வாறான திட்டமிட்ட அவதூறுகள் தெரிவிக்கின்றன.