போரினால் இடம்பெயர்ந்துள்ள மக்களை மீள் குடியேற்றுவதைத் தாமதப்படுத்தி, அதற்குள் சிங்களக் குடியேற்றத் திட்டங்களை ஏற்படுத்த அரசாங்கம் செயற்திட்டமொன்றைத் தயாரித்து வருவதாக அலரி மாளிகைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வடக்குப் பிரதேசங்களில் வீடுகளை நிர்மாணித்து, அரச ஊழியர்களுக்கான வீடமைப்புத் திட்டமெனப் பெயரிட்டு அவற்றை இராணுவத்திலுள்ளவர்களுக்கு வழங்க முனைப்புகள் மேற்கொள்ளப்படுவதாக அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
இதன்படி, யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் வன்னி ஆகிய பிரதேசங்களை மையமாகக் கொண்டு சுமார் 60,000 இராணுவக் குடும்பங்களை குடியமர்த்த திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது.
இந்த வீடமைப்புத் திட்டங்களுடன், அந்தப் பிரதேசங்களில் பாடசாலைகள், மருத்துவமனைகள், விளையாட்டுத் திடல்கள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்துகொடுக்கவுள்ளதாக அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
போரினால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்களை மீளக்குடியமர்த்த எவ்வித முனைப்புக்களையும் காட்டாத அரசாங்கம் சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்ள இவ்வாறு பல்வேறு வழிகளிலும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.