வடக்கில் ஆயுதக் குழுக்கள் எதுவுமில்லையென்றும், படையினரும் பொலிஸாருமே அங்கு பாதுகாப்பு வழங்குவதாகவும் அரசாங்கம் தெரிவிக்கிறது.
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி வடக்கில் யாழ்ப்பாண மாநகர சபை மற்றும் வவுனியா நகரசபை ஆகிய உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அங்கு தேர்தல் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாத அளவிற்கு தங்களுக்கு ஆயுதக் குழுக்களின் அச்சுறுத்தல் நிலவுவதாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி குற்றஞ்சாட்டி வருவது தொடர்பாகவே அரச தரப்பிலிருந்து மேற்கண்ட கருத்து வெளியிடப்பட்டிருக்கிறது.
“அங்கு (வடக்கில்) ஆயுதக் குழுக்கள் எதுவுமில்லை. அங்கு ஆயுதங்கள் அனைத்தும் களையப்பட்டு விட்டன. படையினரும் பொலிஸாருமே பாதுகாப்பு வழங்குகின்றனர்’ என்று ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும், அமைப்பாளருமான சுசில் பிரேம ஜயந்த கூறினார்.
அத்துடன், இது வழமை போல ஐ.தே.க. ஏதாவது ஒன்றைக் கூற வேண்டுமென்பதற்காக முன்வைக்கும் குற்றச்சாட்டு என்றும், இதன் மூலம் ஐ.தே.க. தற்போதே தோல்விக்குத் தயாராகிவிட்டதாகவும் அமைச்சர் பிரேம ஜயந்த இதன்போது மேலும் சுட்டிக்காட்டினார்.
இதேநேரம், வடக்கில் ஆயுதக் குழுக்களின் நடமாட்டம் குறித்து இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்காரவிடம் கேட்டபோது;
“வடக்கில் ஆயுதக் குழுக்கள் யாருமில்லை. அப்படி இருந்தால் அதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டே வருகின்றன’ என்று பதிலளித்தார்.