வங்கி சட்டங்களைத் திருத்துவது குறித்த மசோதா மக்களவையில் நிறைவேறியது. இந்த மசோதா, புதிய தனியார் வங்கிகளை நிறுவுவதற்கு வகை செய்கிறது. இந்த மசோதா மீதான விவாதத்தில் பேசிய நிதியமைச்சர் ப.சிதம்பரம், புதிதாக 6 ஆயிரம் வங்கிக் கிளைகள் ஒவ்வொரு ஆண்டும் திறக்கப்படும் என்று தெரிவித்தார்.
இந்திய அரசு இச்சட்டத்தின் மூலம் வங்கித்துறையிலும் அந்நிய நேரடி முதலீட்டை அரசு ஊக்குவிக்கின்றது.
மேற்கு நாடுகளின் வங்கிகளால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவின் வங்கிச் சீர்த்திருத்தம், இந்திய மக்கள் பணத்தை மேலை நாட்டு பல்தேசிய நிறுவனங்களும் வங்கிகளும் தடையின்றிக் கொள்ளையிட வழி செய்யும்.
இந்த சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், வங்கிகளை இணைப்பதற்கு எதிராகவும், வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக, பொதுத் துறை வங்கிகளின் நான்கு முக்கிய சங்கங்கள் அறிவித்துள்ளன. அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம், இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு, அகில இந்திய வங்கி அலுவலர்கள் சங்கம் மற்றும் வங்கி ஊழியர்களின் தேசிய சங்கம் ஆகியவை இந்த ஒரு நாள் வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. இந்த வேலைநிறுத்தத்தில் நாடு முழுவதும் உள்ள வங்கிகளின் ஐந்து லட்சம் ஊழியர்கள் பங்கேற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாளை வங்கிச்சேவைகள் பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது.