03.04.2009.
ரஷ்யா மற்றும் முன்னாள் சோவியத் நாடுகளில் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராகப் போராடுபவர்கள் அனைவருக்குமே லெனின் சிலைகள் பெரும் உத்வேகம் அளிப்பவையாக இருந்து வருகின்றன.
ரஷ்யா, உக்ரைன், பெலாரஸ் போன்ற நாடுகளில் இது வழக்கமானதாக உள்ளது. ஏகாதிபத்திய எதிர்ப்பு, முதலாளித்துவ எதிர்ப்பு, ஜனநாயகத்துக்கு ஆதரவு, மக்கள் நலக்கொள்கைகள் போன்ற முழக்கங்களை எழுப்பும் கம்யூனிஸ்ட்டுகள் அல்லாத முற்போக்குவாதிகள், ஜனநாயக வாதிகள், அறிவுஜீவிகள் போன்றவர்களும் லெனின் உருவச்சிலைகளுக்கு அருகில் திரண்டு வருகின்றனர். இதனால் மக்கள் விரோத சக்திகள் லெனின் சிலைகளைக் குறிவைக்கத் துவங்கியுள்ளன.
சர்வதேச பொருளாதார நெருக்கடியைக் கண்டித்து ரஷ்யாவில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. ரஷ்யாவை இந்த நெருக்கடி மூழ்கடித்து விடு
வதற்குள் கொள்கைகளின் திசைவழியை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இவர்களின் கோரிக்கைகளுக்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு கிடைத்துள்ளது. இரு தினங்களுக்கு முன்பு ரஷ்யாவில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட அரசு எதிர்ப்புப் பேரணி நடைபெற்றது. இவர்களும் லெனினின் சிலை அருகில் குழுமி ஆவேசத்துடன் முழக்கமிட்டனர். கம்யூனிஸ்டுகள் அல்லாதவர்களும் லெனினை வாழ்த்தி கோஷம் எழுப்பினார்கள்.இதனால் கண்கள் உறுத்திய மக்கள் விரோத சக்திகள் அந்த சிலையைத் தகர்க்க வெடிகுண்டு வைத்துள்ளனர். இக்குண்டுத் தாக்குதலையடுத்து சென்.பீட்டர்ஸ்பேர்க்கிலுள்ள இந்த உருவச்சிலையின் பின்பக்கத்தில் பாரிய துவாரம் ஏற்பட்டுள்ளது. 1917ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நாடுகடந்த நிலையிலிருந்து லெனின் நாடு திரும்பியமையை குறிக்கும் வகையிலேயே இந்த உருவச்சிலை பின்லாந்து புகையிரத நிலையத்துக்கு வெளியே நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
நாடு கடந்த நிலையிலிருந்து திரும்பிய லெனின், மேற்படி புகையிரத நிலையத்தின் அருகே முக்கியத்துவமிக்க உரையொன்றை ஆற்றியமை குறிப்பிடத்தக்கது. அவ் வருடத்தின் இறுதியில் புரட்சியொன்றுக்கு தலைமை தாங்கிய லெனின், அப்போது ஆட்சியிலிருந்த அரசாங்கத்தை விழுத்தினார். இதனையடுத்து 70 ஆண்டுகளுக்கு மேற்பட்ட காலம் ரஷ்யாவில் பொதுவுடைமைவாதிகளின் ஆட்சி நிலவியது