கடந்த ஆறு மாதங்களாக லிபியாவில் அதிபர் கடாஃபிக்கு எதிராக நடத்தி வந்த போரில், ஏகாதிபத்திய விசுவாச கலகப்படை தலைநகர் திரிபோலியைக் கைப்பற்றியதும், அப்படையினரது இடைக்கட்ட அரசின் வெற்றியையும் கடாஃபி ஆட்சியின் வீழ்ச்சியையும் அமெரிக்காவும் நேடோ கூட்டணி நாடுகளும் அதிகாரபூர்வமாக அங்கீகரித்துள்ளன.
ஜனநாயகம், மனித உரிமை, போரில் சிக்கிய சிவிலியன்களைப் பாதுகாப்பது என்றெல்லாம் கூப்பாடு போடும் அமெரிக்காவின் கபடத்தனத்தை மீண்டுமொருமுறை நிரூபித்துக் காட்டிவிட்டது, லிபியா மீதான ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புப் போர்.
அமெரிக்க வல்லரசின் தலைமையிலான ஏகாதிபத்திய நேடோ கூட்டணி நாடுகள் இராக், ஆப்கான் போலின்றி, லிபியாவிலேயே விசுவாசக் கூலிப் படையை உருவாக்கிக் கொண்டு ஆக்கிரமிப்பு போரைத் தொடுத்தன. ஆளும் வர்க்க எதிர்த்தரப்பைப் பயன்படுத்திக் கொண்டு, அதிபர் கடாஃபிக்கு எதிரான அதிகாரப் போட்டியை மாபெரும் சர்வாதிகார எதிர்ப்பு ஜனநாயகப் போராட்டமாகச் சித்தரித்து, அரபு நாடுகளின் துணையோடும் தமது கைக்கூலி ஐ.நா. மன்றத்தின் தீர்மானத்தைக் கொண்டும் லிபியாவில் ஒரு ஆட்சிக் கவிழ்ப்பை நிகழ்த்தி, அதன் மூலம் எண்ணெய் வளத்தைக் கொள்ளையிடக் கிளம்பியுள்ளன.
அதிபர் கடாஃபியின் ஆட்சியில் லிபியாவின் எண்ணெய் வர்த்தகத்தில் ஏகாதிபத்தியப் பன்னாட்டுக் கம்பெனிகள் ஈடுபட்டிருந்தாலும், ஏகாதிபத்திய நிதிமூலதன ஆதிக்கத்தின் முழுக்கட்டுப்பாட்டின் கீழ் லிபியா வராததும், எண்ணெய் வளங்கள் முழுமையாக ஏகாதிபத்தியக் கொள்ளைக்குத் திறந்து விடப்படாததும்தான் அமெரிக்க மேலாதிக்கத்திற்கான இந்த ஆக்கிரமிப்புப் போரின் அடிப்படை. லிபியா மட்டுமின்றி, அங்கோலா, நைஜீரியாவில் எண்ணெய் மற்றும் கட்டுமானப் பணிகளில் பெருமளவு முதலீடு செய்துள்ள சீனா, இப்பிராந்தியத்தில் செல்வாக்கு செலுத்தி வளர்வது அமெரிக்க மேலாதிக்கத்துக்கு இடையூறாகும் என்பதால், வட ஆப்பிரிக்காவின் எண்ணெய் வளமிக்கப் பகுதிகளிலிருந்து சீனாவை வெளியேற்றுவது இப்போரின் முக்கிய நோக்கமாகியுள்ளது.
மேலும்,சிரியாவில் மிகப்பெரிய விமானந்தாங்கி கப்பற்படைத் தளத்தை நிறுவியுள்ள ரஷ்ய வல்லரசு, சீனாவை ஆதரிப்பதால் மத்தியத்தரைக்கடல் பகுதியைத் தனது மேலாதிக்க இரும்புப் பிடிக்குள் கொண்டுவர, ரஷ்யா மற்றும் சீனாவின் செல்வாக்கை வீழ்த்துவது அமெரிக்காவுக்கு அவசியமாகியுள்ளது. எனவே லிபியாவைத் தொடர்ந்து, தனக்கு முழு விசுவாசமான அடிவருடி ஆட்சியைத் திணிக்க அடுத்ததாக சிரியா மீது அமெரிக்கா குறிவைத்துள்ளது.
அமெரிக்காவுக்கு எதிராக சிறு முணுமுணுப்பைக் காட்டினாலும் ஏழை நாடுகளின் ஆட்சிகளைக் கவிழ்த்து விசுவாச பொம்மையாட்சிகளை நிறுவுவது, மூலவளங்களைச் சூறையாடி மேலாதிக்கத்தை நிறுவுவது என்ற தனது மறுகாலனிய போர்த்தந்திரத் திட்டத்தை அமெரிக்கா வல்லரசு இந்த ஆக்கிரமிப்புப் போரின் மூலம் உறுதிப்படுத்திக் கொண்டுள்ளது.
அமெரிக்காவுக்கு அனுசரணையாக நடந்து கொள்வதன் மூலம் தம்மீது அமெரிக்கா குறிவைக்காது என்று ஏழை நாடுகளின் ஆட்சியாளர்கள் இன்னமும் நம்பிக் கொண்டிருப்பது முட்டாள்தனம்; லிபியா மீதான ஆக்கிரமிப்பு அம்மணமாக நடந்த போதிலும் பெயரளவிலான கண்டனத்துடன் பக்கவாட்டில் விலகிக் கொள்ளும் சீனாவும் ரஷ்யாவும் இப்போது அமெரிக்காவை எதிர்த்து சவால் விடும் நிலையில் இல்லை; உழைக்கும் மக்கள் ஓரணியில் திரண்டு போராடுவதன் மூலமே ஏகாதிபத்தியங்களையும், குறிப்பாக உலக மக்களின் கொடிய எதிரியான அமெரிக்க மேலாதிக்க வல்லரசையும் வீழ்த்த முடியும்; இந்த உண்மைகளை உலகுக்கு உணர்த்திவிட்டு மறுகாலனியப் புதைகுழியில் வீழ்ந்து கொண்டிருக்கிறது, லிபியா.
நன்றி : புதியஜனநாயகம்
அமெரிக்கா ஆக்கிரமிப்பு என்பது ஜனநாயக வழிமுறைகளுக்கு விரோதமாக காணப்பட்டாலும். கடாபி போன்ற சர்வாதிகார ஆட்சியாளர்களை நேரடியாக எதிர்ப்பதற்கு உலகத்தில் வேறு என்ன வழிமுறை இருக்கிறது என்பதையும் கட்டுரை விழம்பியிருக்கவேண்டும்.
நடப்பு உலக பரிமாணங்களில் அமெரிக்கா வல்லரசாக இருப்பதற்கு மத்திய கிழக்கின் எண்ணெய் வளம் முக்கிய பங்கு வகிக்கிறது. பச்சையத்தை நோக்கி நகர்வது என்பது தான் யதார்த்தமும்.
ஜனநாயக வழிமுறை பற்றி கதைக்க அமெரிக்காவிற்கு என்ன யோக்யதை இருக்கிறது.? சர்வாதிகார ஆட்சியாளர்களை
அமெரிக்கா ஒரு போதும் எதிர்த்ததில்லை.அவர்களை எல்லாம் நல்லவர்களாக காட்டியவர்கள் அமெரிக்க உத்தமர்கள்.நீண்ட உதாரணங்கள் தர முடியும்.
பாகிஸ்தான் – சியகுல் கக் , முசரப் .
இராக் – சதாம் ஹுசைன்
பனாமா – மனுவேல் நோரேக
பிலிப்பைன்ஸ் – மார்க்கோஸ்
சிலி – பினோசெட்
ஸ்பெயின் – பிராங்கோ
இஸ்ரேல – சியோநிசவாதிகள்
தென் ஆபிரிக்கா – நிறவெறி ஆட்சியாளர்கள்.
இலங்கை – ஜே.ஆர் .ஜெயவர்த்தனா
நான் பலசாலி நான் எதை எப்போது செய்கிறேனோ அதை யாவரும் ஆமோதிப்பதே உங்களது வேலை,இரண்டாம் உலக யுத்தத்தில் தொடங்கி உலகில் தொன்றிய சாவாதிகாரிகள் யாவரும் ஐக்கிய அரசின் குழந்தைகளாவா் ஏன் பின் லாடனும் கூட,உருவாக்குவதும் பயன்படுத்துவதும் பின்பு தூக்கி எறிவதும் சரித்திரம் அறிந்ததே, ஆனால் உலகின் நியாயம் நீதி என்பதற்கு மேலாக உனக்கு என்ன தேவை என்பதும் அதை எப்படி வழைந்து நெளிந்து சென்று அடைவது என்ற மதிநுட்பம்தான் இன்று முக்கியம் பெறுகிறது.
ஒரு காலத்தில் ஐரோப்பியா்கள் எண்ணினார்கள் தாம் இனிமேல் அமெரிக்காவின் அடிமைகள்தான் என்று- அதாவது 2ம் உலகப்போர் முடிந்தபோதினில்- ஆனால் இன்று அப்படியா நிலமை உள்ளது அதேபோல நாமும் விடுபட்டு வாழ முடியும் அதாவது நாமும் அவா்களை பயன்படுத்திவிட்டு.