கணேசன் – ஐயர் எழுதிய ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் என்ற நூல் அறிமுக மற்றும் வெளியீட்டு நிகழ்வு லண்டன் நோர்பிட்டன் பகுதிகளில் நேற்று – 10.03.2012- நடைபெற்றது. ஈழப் போராட்டடம் குறித்த விமர்சனமாகவும் அதன் ஆரம்ப கர்த்தாக்களில் ஒருவரான கணேசனின் -ஐயர்- சுயவிமர்சனமாகவும் வெளியான இந்த நூல் பலரது, குறிப்பாகப் புதியவர்களது கவனத்தை ஈர்த்திருந்தமை நூல் வெளியீட்டிற்குச் சமூகம் தந்த ஆர்வலர்கள் ஊடாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. புதிய தேடலுக்கான அத்தியாயத்தை ஆரம்பித்திருக்கும் நூலும் அதனைத் தொடர்ந்த கருத்தாடல்களும் மேலும் தொடரப்பட வேண்டிய ஒன்றென அனைவரும் தெரிவித்திருந்தனர். எழுபத்தைந்து பேர்வரை சமூகமளித்திருந்த நிகழ்வில் எட்டு அரசியல் விமர்சகர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
எதிர்ப்பிரச்சாரங்கள் திட்டமிட்ட அவதூறுகள் போன்ற அனைத்திற்கும் மத்தியில் வெளியீட்டு நிகழ்வு வெற்றிபெற உதவிய தீபம் தொலைக்காட்சி, லண்டன் தமிழ் ரேடியோ போன்றவற்றிற்கும், விமர்சகர்களுக்கும், சமூகமளித்தவர்களுக்கும், நிகழ்விலும் நூலிலும் ஆர்வம் கொண்ட ஏனையோருக்கும் குறிப்பாக நூலில் திருத்தங்களை மேற்கொள்ளவும் மறுசீரமைக்கவும் உதவிய துரை சண்முகம் அவர்களுக்கும், பதிப்பித்த கீழைக்காற்றுப் பதிப்பகத்திற்கும் இனியொருவின் நன்றிகள்.
கனடாவில் ஏற்கனவே நடைபெற்றுள்ள வெளியீட்டு நிகழ்வின் பின்னதாக லண்டனில் நடைபெற்றுள்ளது. பிரான்சில் நூல்வெளியீடும் விமர்சனமும் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. ஏனைய நாடுகள் குறித்த விபரங்கள் விரைவில் வெளியிடப்படும்.
தவிர, நூல் குறித்த கலந்துரையாடல் நிகழ்வு ஒன்று விரைவில் ஹரோ பகுதியில் ஏற்பாடுசெய்யப்படும்.