ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை சம்பந்தமான தகவல்களை மூடி மறைப்பதற்குச் செய்யவேண்டிய எல்லா நடவடிக்கைகளையும் இலங்கை அரசாங்கம் செய்திருப்பதாக லசந்தவின் மனைவி சோனாலி சமரசிங்க விக்கிரமதுங்க தெரிவித்திருக்கிறார். லசந்தவைப் படுகொலை செய்தவர்களும் அதற்கான கட்டளையை இட்டவர்களும் சட்டத்திற்கு முன்னால் கொண்டுவரப்படுவதை தடுத்து நிறுத்துவதற்காகவே அரசினால் இந் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
இப்படுகொலையில் முன்னாள் இராணுவப்படைத் தலைவர் சரத் பொன்சேகா சம்பந்தப்பட்டிருப்பதாகவும் அதற்குத் தேவையான அத்தாட்சிகள் தம்மிடம் இருப்பதாகவும் பிரித்தானியா தமக்கு அறிவித்திருப்பதாக பாராளுமன்ற அமைச்சர் ரஜீவ விஜேசிங்க இப் படுகொலை நிகழ்த்தப்பட்ட காலத்தில் தெரிவித்திருந்தார்.
லசந்தவின் மரணம் துப்பாக்கிக் குண்டுத் தாக்குதலால் ஏற்பட்டுள்ளதென குறிப்பிடப்பட்ட போதிலும், படுகொலை நடைபெற்ற இடத்திலிருந்து துப்பாக்கி ரவைகளையோ, லசந்தவின் உடலில் எடுக்கப்பட்ட எக்ஸ்ரே படங்களில் எந்தவொரு துப்பாக்கி ரவையையோ அதற்கான அறிகுறிகளையோ காணமுடியவில்லை என லசந்தவின் மனைவி சோனாலி சமரசிங்க விக்கிரமதுங்க மேலும் தெரிவித்திருக்கிறார்.
படுகொலை நடைபெற்ற இடத்தில் கொலைகாரர்களால் பாவிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஐந்து கைத் தொலைபேசிகள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டப்பட்டதாக அறிவிக்கப்பட்ட போதிலும் அது சம்பந்தமாக நேர்மையான விசாரணையொன்று நடத்தப்படவில்லை என பிபிசி சேவைக்கு அவர் மேலும் தெரிவித்திருக்கிறார்.
படுகொலை நடைபெற்று இரண்டு வருடங்களுக்கு மேலாகியுள்ள போதிலும் இச் சந்தர்ப்பத்திலாவது அரசு தலையிட்டு நேர்மையானதும் வெளிப்படையானதுமான விசாரணையொன்றை நடத்தி லசந்தவின் படுகொலைக்குக் காரணமான கொலைகாரர்களை சட்டத்துக்கு முன் நிறுத்தினால் தான் அதனை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
எதையும் பதிவு செய்த இதயம் இப்போது இல்லை எம்மிடம்.இதயமே இல்லாமல் இலங்கையில் நிகழ்ந்தவை நமது இதயத்தை மரத்துப் போகச் செய்து விட்டன.உழுது விட்ட நிலத்தில் நாம் வீசிய விதை நெல் எல்லாம் காணாமல் போய் விட்டன.கடவுளே கடவுளே.இப்போது எம்மிடம் கனவுகளூம் இல்லை.தமிழ்மாறன்.