தமிழர்களின் பாரம்பரிய நாட்டார் கலை வடிவங்களில் கூத்துக் கலையும் ஒன்று.
கிராமத்தின் மண்வாசனையும், கிராம மக்களது வாழ்வாதாரங்களையும் அவர்கள் மதம் மீது கொண்ட பற்றுதலையும் வெளிப்படுத்தும் வகையில் அமைவது கூத்துக்கலை. கூத்துக்கள் பல்வேறு செய்திகளை சமூகத்திற்கு கொண்டு செல்கின்றன.
அந்த காலத்தில் வாழ்ந்த நம் முன்னோர்கள் பொழுது போக்குக்காகவும். உழைத்த களைப்பை போக்கி இளைப்பாறவும் ஒரு முற்றத்தில் ஒன்று கூடி ஆடிப்பாடி மகிழ்ந்தார்கள். அதுவே நாளடைவில் பல்வேறு பரிமாணங்களைப் பெற்று கலைகளாகத் தோற்றம் பெற்றது. அன்று அவர்கள் பொது முற்றத்தில் ஆடிப்பாடியதே இன்று கூத்து என்ற பெயரைப் பெற்று வளர்ந்து நிற்கிறது. இயல், இசை, நாடகம் மூன்றும் சேர்ந்த தமிழை முத்தமிழ் என்கிறோம். நாடகம் என நாம் கூறுவதை பழந்தமிழ் கூத்து என்கிறது.
கூத்துக்களில் அகக்கூத்து, புறக்கூத்து என இருவகைகள் உண்டு. புறக்கூத்து என்பதே பொதுமக்கள் முன்னிலையில் ஆடப்படும் கூத்தாகும். அகக்கூத்து ஒரு இல்லத்தில் ஆடப்படுவது. கோவலனை மாதவி எட்டு வகையான வரிக்கூத்துக்களால் மயக்கினாள் என்று சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக உருவாக்கப்பட்டு ஆடப்பட்ட இந்தக் கூத்துக்களிடையே சொல்லப்படும் விசயங்களும், வினோதங்களும் இன்றைய சமூகத்தை ஈர்த்து வருவது ஆச்சர்யத்துக்குரியதாகும். கூத்துக்களில், பொன்னர் சங்கர், அர்ச்சுனன் தபசு, சத்தியவான் சாவித்திரி, குரவைகூத்து என்பன பிரபலமாக விளங்கினாலும் இன்றைய காலக்கட்டத்தில் இடம் தெரியாமல் மறைந்து போய்விட்டது. ஆனால் மலைநாட்டில் மட்டும் இன்றும் ‘காமன் கூத்து’ ஆடப்பட்டு வருகிறது.
சிவன், மதன் போர் தமிழகத்தில் உள்ள திருக்குறுக்கை என்ற ஊரில் நடந்ததாகவும் அங்கே உள்ள வீரட்டேஸ்வரர் ஆலயத்திற்கு அருகில் தோண்டத் தோண்ட கிடைக்கும் சாம்பல் சிவன்- மதனை எரித்ததற்கு சான்றாக இருப்பதாகவும் அந்த ஆலயத்தில் உள்ள வீரட்டேஸ்வரர் சிவலிங்கத்தில் மதன் வீசிய பத்மபானம் ஏற்படுத்திய வடு இருப்பதாகவும் கதை இருக்கிறது.
இதுதவிர கந்தபுராண கிளைக் கதைகளில் வரும் ஒரு பாடலில்
“நுண்ணிய உணர்வின் மிக்கீர்!
நுமக்கிது புதல்வனே! எங்கோன்
கண்ணுதல் உமிழ்ந்த செந்நீர் காமனைப் பொடித்தது அன்றால்
அண்ணலை எய்வன் என்னா அனையன் துணிவிற் கூறித்
துள்ளென ஈண்டு வந்த செயற்கையே சுட்டபோதும்.” என்கிறது.
சிவபெருமானின் வலிமையைப்பற்றி விளக்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள காமதகன கதையின் பாடலின்படி மன்மதனை எரித்தது சிவனின் நெற்றிக்கண் நெருப்பு அல்ல என்றும் அது சிவபெருமானின் மீது அம்பு எய்ய அவன் கொண்ட துணிச்சலே அவனைச் சுட்டது என்கிறது.
இவ்வாறு கந்தபுராணத்தை சார்ந்தும், வேறுப் பல கதைகளும் காமன் கூத்துப் பற்றி சொல்கிறது. வருடந்தோறும் மாசி மாதத்தில் வரும் அமாவாசை முடிந்து மூன்றாம் நாளில் காமன்கூத்து ஆரம்பமாகிவிடும். மலையகத்தில் பல இடங்களில் இந்தக் கூத்து சிறப்பாக நடந்தாலும் பிரமாண்டத்துடன் நடப்பது களுத்துறை மாவட்டத்தில் அமைந்துள்ள றைகமையில்தான்.
மாசி மாதம் வந்து விட்டாலேயே இங்குள்ள இளைஞர்களுக்கு ஒரே கொண்டாட்டம்தான். பறை ஓசை விண்ணைப் பிளக்க ஒரு மாதத்திற்கு ஆட்டம் பாட்டம்தான்.
விழா கடைசி நாளில் லட்சக்கணக்கான ரூபாய்களை இறைத்து மின்விளக்கு, அலங்காரம் என்று கூத்துத் திடல் களை கட்டும். இம்முறை நடந்த காமன் கூத்திற்கு இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட பார்வையாளர்கள் திரண்டு வந்திருந்தார்கள். ஏராளமான வாகனங்கள் திடலின் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்ததால் அந்த திடல் திணறிக்கொண்டிருந்தது. கொத்து பரோட்டா டங்கடடக்கு, ஐஸ்கிறீம் பீப்பீக்க பாதையோரம் ஒரு நாள் உணவுக் கடைகளில் சனம் முண்டியடித்து தின்று தீர்த்துக்கொண்டிருந்தது. விலைகள் கொஞ்சம் அதிகமாக இருந்தாலும் குளிருக்கு குடித்த தேனீர் மட்டும் இதமாகத்தான் இருந்தது.
பரமேஸ்வரன் சர்மாவினால் வேத மந்திரங்கள் ஓத ரதி- மதன் திருமணத்தோடு விழா சூடு பிடிக்க தொடங்கியது. றைகம் காமன் கூத்திற்கு பிந்தன பறை இசைக்க குழுவினர் இசை வழங்கினர். ஆனால் குறவன், குறத்தியோடு ஆடுகளத்திற்குள் பறைகளோடு புகுந்து விக்னேஷ் குழுவினர் செய்த அழிச்சாட்டியத்தால் அரங்கம் பறை ஓசையால் அதிர்ந்தது.
இதுதவிர, தீயோடு விளையாடிய வீரபத்திரன், காளி- பார்வையாளர்களை மிரட்டியது என்று சொல்லலாம். பார்வையாளர்களை பரவசப்படுத்திய விடயத்தில் நீதிபதியின் சிவன் வேடம் முக்கியமானது. அனுபவம் வாய்ந்த கூத்துப்பாடகர்கள் பலர் களத்தில் இறங்கியிருந்தாலும், அனைவரையும் தன் பாட்டால் கட்டிப் போட்டு பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தவர் லிதுஷன்
ஹரி, சின்னப் பையன். வயது 14. ஆண்டு ஒன்பதில் கல்வி கற்கிறாராம். சரணத்திற்கு இடையே அவர் போடும் சங்கதி அப்பப்பா… ஒரு தேர்ந்த முதிர்ந்த கலைஞருக்கு உள்ள எல்லாத் தகுதியும் அந்த தம்பிக்கு இருக்கிறது. ஆனால் அவருக்கு சரியாக வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. பெரும் பாடகர்களின் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கும் லிதுஷன் ஹரி இன்னும் நிறைய பாடல்களை கற்கவேண்டும்.
விழாவை திறம்பட செய்த கஜேந்திரன், அருண லொக்கா, ரவி, ஸ்ரீகாந்த உள்ளிட்ட இளைஞரணி குழுவினர் பாராட்டுக்குரியவர்கள். ஆனாலும், இரண்டாயிரத்திற்கு அதிகமான பார்வையாளர் கூடும் இடத்தில் கழிப்பிட வசதி இல்லாதது பெருங்குறை. குறிப்பாக பெண்கள் இயற்கை கடன்களை முடிக்க மறைவிடங்களை தேடிச்சென்று சிரமமப்படுவதை அவதானிக்க கூடியதாக இருந்தது.
“இது காலாகாலமாக இப்படியான விழாக்களில் இருக்கின்ற பெரும் குறை. இது நிச்சயம் தவிர்க்கப்படவேண்டிய ஒன்று. இதற்கு தற்காலிகமாக டொய்லட் செட்டுகளை வாடகைக்கு எடுத்து வைத்து கட்டண கழிப்பிடங்களை தயார் செய்தால் அதில் வருமானமும் கிடைக்கும். அதோடு கூத்து பார்க்க வரும் மக்களுக்கும் நாம் ஒரு பெரிய சேவையை வழங்கிய புண்ணியமும் கிடைக்கும் என்கிறார்;” கூத்துப் பார்க்க வந்திருந்த பிரதாபன் ஆசிரியர்.
கூத்து மேடைக்கு அருகிலேயே நீர் ஓடையும் ஒடுவதால் தண்ணீர் பிரச்சினையும் இருக்காது. சிறிய தண்ணீர் பம்பை வைத்து பாத்ரூம் வசதியை சிறப்பாக செய்து கொடுத்து விடலாம். அதோடு பெண்கள், குழந்தைகள் அமர்ந்திருக்கும் இடத்திற்கு மட்டும் பெரிய கூரை அமைத்தால் பாதுகாப்பானதாக இருக்கும். ஏனென்றால் கூத்து நடைபெறும் சமயத்தில் அடை மழை வந்து விட்டால் அவர்களின் கதி நினைத்துப் பார்க்கவே பரிதாபமாக இருக்கிறது.
எனவே அடுத்த ஆண்டிலாவது இந்த குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டால் காமன் கூத்து மென்மேலும் சிறப்பாக அமையும்.
நன்றி:
http://tamilvamban.blogspot.co.uk/
களுத்துறை பகுதியில் சுமார் 10 வீத மானோரே தமிழர்கள் இருந்தும் கலை கலாசார விடயஙகளில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்கள், அடுத்த தடவை இவ்விழாவை ஏற்பாடு செய்யும் போது தெரிவிததால் என்னால் இயன்ற பண உதவியயை செய்யலாம்,