அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்காசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான உதவிச் செயலாளர் ரொபேர்ட் ஓ பிளேக் பெப்ரவரி 11ஆம் திகதி கொழும்பு வருகிறார்.
ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அமர்வுகள் நெருங்கிவரும் நிலையிலும் அந்தக் கூட்டத் தொடரில் இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பாகக் கொண்டுவரப்பட உள்ள தீர்மானத்துக்கான முன்மொழிவை ஆதரிக்க வோஷிங்ரன் தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலும் பிளேக் கொழும்பு வருகிறார்.
அவரது இந்த அவசர பயணத்தின் பின்னணி குறித்து உடனடியாக விவரம் வெளிவரவில்லை. எனினும் கொழும்பு அரசியலில் பெரும் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.
கொழும்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட்ட பல முக்கிய தரப்புகளுடன் பேச்சு நடத்த உள்ள பிளேக், ஆளுங்கட்சியின் உயர்மட்டத் தலைவர்களையும் சந்திக்கவுள்ளார்.
இலங்கையில் இன அழிப்புநடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில் அதனைக் காரணமாக முன்வைத்து இலங்கை அரசிற்கு அழுத்தம் வழங்கி பெற்றுக்கொள்ள வேண்டியவற்றைப் பெற்றுக்கொண்டவர் ஓ பிளேக். குறிப்பாக ஆப்கானின் யுத்த இராணுவத்தைப் பெற்றுக்கொள்ளல், அமரிக்க, ஐரோப்பிய நிறுவனங்களுக்கு முதலீட்டு வசதிகளைப் பெற்றுக்கொள்ளல் போன்ற பேரங்கள் வெளியே வந்தமை குறிப்பிடத்தக்கது. பிளேக்கின் பயணம் புதிய பேரம் ஒன்ற்றிற்கானதாக அமையும் என தென்னாசிய அரசியல் வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகின்றது.