பெட்ரோலியப் பொருட்களின் விலையேற்றத்தால் 11.05 விழுக்காடாக அதிகரித்த ரூபாயின் பணவீக்கம், அடுத்த ஒரு வாரத்தில் மேலும் 0.37 விழுக்காடு அதிகரித்துள்ளது.சர்வதேச சந்தையில் கச்சா விலை உயர்வினால் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட பெட்ரோல், டீசல் விலைகளை ஜூன் 4ஆம் தேதி மத்திய அரசு உயர்த்தியது. இதன் விளைவாக ஜூன் 7ஆம் தேதியுடன் முடிவுற்ற வாரத்தில் பணவீக்கம் 11.05 விழுக்காடாக அதிகரித்தது.
இது மேலும் உயர்ந்து ஜூன் 14ஆம் தேதியுடன் முடிவுற்ற வாரத்தில் 11.42 விழுக்காடாக அதிகரித்துள்ளது என்று மத்திய அரசின் புள்ளி விவரத்துறை அறிவித்துள்ளது.
உணவு உள்ளிட்ட அத்யாவசியப் பொருட்கள், தொழிலக உற்பத்திப் பொருட்கள் ஆகியவற்றின் மொத்த விலை குறியீட்டின் அடிப்படையில் கணக்கிடப்படும் பணவீக்கம், கடந்த ஆண்டு இதே வாரத்தில் 4.13 விழுக்காடாக இருந்தது.
ஜூன் 14ஆம் தேதியுடன் முடிவுற்ற வாரத்தில், அனைத்துப் பொருட்களுக்கான மொத்த விலைக் குறியீடு 0.4 விழுக்காடு உயர்ந்து 236.1 புள்ளியாக அதிகரித்துள்ளது.
தேனீர் (3 விழுக்காடு), கடல் மீன்கள், பால், சோளம் (ஒரு விழுக்காடு) ஆகிய அத்யாவசியப் பொருட்களின் விலை உயர்வினால் அவற்றின் மொத்த விலைக் குறியீடு 0.2 விழுக்காடு உயர்ந்து 232.1 புள்ளிகளாக அதிகரித்துள்ளது. ஆனால் பழங்கள், காய்கறிகளின் விலைகள் ஒரு விழுக்காடு அளவிற்கு குறைந்துள்ளது.
ஆளி விதை (3 விழுக்காடு), நிலக்கடலை, கச்சா பருத்தி (2 விழுக்காடு) விலை குறைவினால் உணவு அல்லாத மற்றப் பொருட்களின் விலைக் குறியீடு 0.5 விழுக்காடு குறைந்து 238 புள்ளிகளாக (கடந்த வாரம் 239.2) குறைந்துள்ளது.
கனிமங்களின் மொத்த விலைக் குறியீடு 3.6 விழுக்காடு அதிகரித்து 652.6 புள்ளிகளாக (முந்தைய வாரம் 630.1) அதிகரித்துள்ளது.
எரிபொருட்கள், மின் சக்தி, இயந்திர எண்ணெய் (19 விழுக்காடு) விலை உயர்வினால் அவைகளின் மொத்த விலைக் குறியீடு 0.1 விழுக்காடு அதிகரித்து 374.7 புள்ளிகளாக உயர்ந்துள்ளது.
தொழிலக உற்பத்திப் பொருட்களின் மொத்த விலைக் குறியீடு 0.6 விழுக்காடு அதிகரித்து 202.8 புள்ளிகளாக (முந்தைய வாரம் 201.6) உயர்ந்துள்ளது.
அரிசித் தவிடு எண்ணெய் (6 விழுக்காடு), சூரிய காந்தி எண்ணெய் (4 விழுக்காடு), எண்ணெய் பிண்ணாக்கு, வனஸ்பதி (2 விழுக்காடு), இறக்குமதி செய்யப்பட்ட உணவு எண்ணெய்கள், உப்பு, கடுகு எண்ணெய் (ஒரு விழுக்காடு) விலையுயர்வினால் அவைகளின் மொத்த விலைக் குறியீடு 0.7 விழுக்காடு உயர்ந்து 208.8 புள்ளிகளாக (முந்தைய வாரம் 207.4) உயர்ந்துள்ளது.
ஜவுளிப் பொருட்களின் மொத்த விலைக் குறியீடு 0.7 விழுக்காடு உயர்ந்துள்ளது. தோல் பொருட்களின் மொ.வி.கு. 1.1 விழுக்காடு உயர்ந்துள்ளது.
இராசயனப் பொருட்களுக்கான மொத்த விலைக் குறியீடு 1.4 விழுக்காடு உயர்ந்துள்ளது.
இதற்கிடையே ஏப்ரல் 19ஆம் தேதியுடன் முடிவுற்ற வாரத்திற்கு அறிவிக்கப்பட்ட ரூபாயின் பணவீக்கம் 7.57 விழுக்காடு, 8.23 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது.
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த, வங்கிகளுக்கு அளிக்கும் குறைந்த கால கடன்களின் மீதான வட்டி விகிதத்தையும், வங்கிகளின் ரொக்க இருப்பு விகிதத்தையும் இரண்டு நாட்களுக்கு முன்பு ரிசர்வ் வங்கி குறைத்தது. இதன் மூலம் பணப் புழக்கம் ரூ.19,000 கோடி அளவிற்கு குறைக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.