வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக ராமரையும் ராமர்கோவிலையும் நம்பித்தான் களமிரங்க இருக்கிறது. அதற்கு ராமர்கோவிலை கட்டி முடித்து தேர்தலுக்கு சற்று முன்னர் திறந்து வைக்க நினைக்கிறார் பிரதமர் மோடி.நீதிமன்ற தீர்ப்பின் மூலம் ராமர்கோவிலுக்கான நிலத்தை பெற்றுக் கொண்ட நிலையில் ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீர்த் ஷேத்ரா என்ற அறக்கட்டளை நிர்வாகிகளை மத்திய அரசு நியமித்தது.
இந்தக் குழுவினர் ராமர் கோவிலுக்காக உலகம் முழுக்க நிதி சேகரித்து வருகிறார்கள். கடந்த பத்தாண்டுகளாக பல அமைப்புகளும் ராமர் கோவிலுக்காக திரட்டிய நிதிகள் என்ன ஆனாது என்று எந்த ஒரு தகவலும் இல்லை. இநிலையில் ராமர்கோவிலுக்காக அதன் அருகில் உள்ள நிலத்தை 2 கோடி ரூபாய்க்கு வாங்கிய நிலத்தை 18 கோடி ரூபாய்க்கு ராமர்கோவில் அறக்கட்டளை வாங்கிய நிகழ்வு இந்துக்களிடையே பலத்த சர்ச்சைகளை உருவாக்கியிருக்கிறது.
உத்தரபிரதேச மாநிலத்தின் சமாஜ்வாதி கட்சி பிரமுகர்தான் இக்குற்றச்சாட்டை கூறியுள்ளார். “ராமஜென்ம பூமி நிலத்தை ஒட்டியுள்ள ஒரு நிலத்தை பூஜாரி ஹரிஷ் பதக் மற்றும் அவரது மனைவி கடந்த மார்ச் 18-ஆம் தேதி மாலையில் சுல்தான் அன்சாரி, மற்றும் ரவி மோகன் என்ற இருவருக்கும் 2 கோடி ரூபாய்க்கு விற்று விடுகிறார்கள். ஐந்து நிமிடம் கழித்து அதே நிலத்தை சுல்தான் அன்சாரி, மற்றும் ரவி மோகனிடம் இருந்து ராம ஜன்மபூமி அறக்கட்டளைக்காக 18.5 கோடி ரூபாய்க்கு சம்பத் ராய் வாங்கினார். இரண்டு கோடி ரூபாய் நிலம் 18 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டது ஐந்தே நிமிடங்களில் நடந்துள்ளது.” தங்களுக்கு வேண்டிய நபர்கள் மூலம் நிலத்தை குறைந்த விலைக்கு வாங்கி அதிக விலைக்கு ராமர்கோவில் செலவில் வாங்கி கமிஷன் அடித்துள்ளார்கள்” என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது உத்தர பிரதேச மாநிலத்தில் பெரும் சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது.