ஆதிக்க சாதி வெறியை மேடைபோட்டுப் பரப்பி வன்முறையைத் தூண்டும் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் மதுரை மற்றும் கடலூர் மாவட்டங்களில் நுழைவதற்கு தடைவித்திருப்பதை முத்துவேல் கருணாநிதி கண்டித்துள்ளார். ராமதாசைக் கண்டுகொள்ளாத கருணாநிதி தடையை மட்டும் கண்டித்துள்ளார். திராவிடக் கட்சிகள் தேர்தலுக்காக ராமதாசுக்குப் பெரியாரை விற்பனை செய்து வாக்கு வாங்க திட்டம் போடுகின்றன.
இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
மதுரை மாவட்டத்துக்குள் பாமக நிறுவனர் ராமதாஸ் நுழையக்கூடாது என்று அந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதனைத் தொடர்ந்து கடலூர் மாவட்ட ஆட்சியரும் அவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளார். ராமதாஸ் கொஞ்சம் வரம்பு கடந்து பேசக்கூடியவர் என்பது உண்மை என்றாலும், அதற்காக ஒரு மாவட்டத்துக்குள் அவர் நுழையக்கூடாது என்று உத்தரவு பிறப்பிப்பது கண்டிக்கத்தக்கதாகும்.
அரசின் அனுமதியின்றி தன்னிச்சையாக மாவட்ட ஆட்சியர்கள் அப்படி உத்தரவு பிறப்பித்திருப்பார்களா என்பது சந்தேகம்தான். இதைப் பார்க்கும்போது சுதந்திரம் பெற்ற இந்தியாவில் இருக்கிறோமா, இந்திய அரசியல் சட்டத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் பேணப்படுகின்றனவா என்பது ஐயப்பாடாக உள்ளது.
அதிமுக ஆட்சியில் எதற்கெடுத்தாலும் அவதூறு வழக்கு, குண்டர் சட்டம் என்று பிடிக்காதவர்கள் மீதெல்லாம் வழக்கு தொடுத்து வருகின்றனர். அதுவும் போதாதென்று இப்படியொரு நடவடிக்கை எடுப்பது சரியா என்று ஜனநாயகத்தின் மீது இன்னமும் நம்பிக்கை வைத்திருப்பவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.
ஒருவேளை வரக்கூடிய மக்களவைத் தேர்தலை மனதில் கொண்டு எதிர்க்கட்சிகளை மிரட்டுவதற்காக இப்படியொரு நடவடிக்கையா என்பதும் புரியவில்லை.
எனினும், ஒரு ஜனநாயக நாட்டில் பேச்சு சுதந்திரத்துக்கெதிராக மாவட்ட ஆட்சியர்களே சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு குறிப்பாக சில கட்சிகளின் தலைவர்களை மாவட்டத்துக்குள்ளேயே நுழையக்கூடாது என்று தடை உத்தரவு பிறப்பிப்பது முறையில்லை. இந்த ஜனநாயக விரோதச் செயலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று கருணாநிதி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.