ராமசுப்ரமணியன் நியமனத்தை நமது முற்போக்கு பொது மனம் ஏற்க மறுத்து ஏளனத்துடன் அணுகுகிறது. அந்த நியமனத்தின் முக்கியத்துவத்தை உணர முடியாதது துர்பாக்கியம். ராமசுப்ரமணியன் பார்ப்பனர் மற்றும் பழுத்த ஆர்.எஸ்.எஸ் காரர் என்பதில் சந்தேகமில்லை. அவருடைய பார்ப்பனீயத்தன்மை எப்படிப்பட்டது என்பதை உணர வேண்டும். இது தொடர்பாக அண்ணல் அம்பேத்கர் பார்ப்பனர்கள் மற்றும் பார்ப்பனீயம் குறித்து கூறியுள்ளவை முக்கியமானது. பார்ப்பனர்கள் தங்களை அற மதிப்பீடுகளை வரையறுப்பவர்களாகவும், வழிகாட்டிகளாகவும், ஒழுக்கநெறிகளை பின்பற்றுபவர்களாகவும் காட்டிக் கொள்பவர்கள். ஆனால் அதன்படி ஒழுகாதவர்கள் என்று அவர்களின் கீழ்மையான செயல்பாடுகளுக்கு பெரும்பட்டியல் ஒன்றை வழங்குகிறார்.
சாஸ்திரம் ஒன்றாகவும், நடைமுறை வேறு ஒன்றாகவும் இருக்கும் பிரச்சினையில் சாஸ்திரத்தின் படி ஒழுக நினைக்கும் பார்ப்பனர்கள் சிலர் இருக்கக்கூடும். சாஸ்திர ஒழுகல் என்பது பார்ப்பனீயத்தை தூய்மையான முறையில் கடைபிடிப்பது. சொல்லப்போனால் அதை எதிர்கொள்வது தான் கடினம். நடைமுறையில் இருக்கும் கெட்டப் பார்ப்பனீயத்தை விடவும் ஆபத்தானது தான் நல்லப் பார்ப்பனீயம். ஆனால் நல்லப் பார்ப்பனீயம் பார்ப்பனர்களிடம் எப்போதுமே செல்வாக்கு பெற்றதில்லை. அதனால் செல்வாக்குடன் இருக்கும் கெட்டப் பார்ப்பனீயத்தை வீழ்த்த செல்வாக்கு பெற வாய்ப்பே இல்லாத நல்லப் பார்ப்பனீயத்தை பயன்படுத்துவது ஒரு உத்தி.
சங்கராச்சாரியின் ஒழுங்கீனத்தை சாஸ்திர மீறலாக சங்கரராமன் கருதியுள்ளார். சங்கரராமன் விரும்பியது நல்லப் பார்ப்பனீயம். ஆனால் அதை கொண்டு செல்வாக்கான கெட்டப் பார்ப்பனீயத்தை அம்பலப்படுத்த முடிந்தது. குஜராத் கலவரத் திட்டத்தை எதிர்த்ததால் கொல்லப்பட்ட குஜராத்தின் உள்துறை அமைச்சர் ஹரேன் பாண்டியா பார்ப்பனர் தான். போலீஸ் அதிகாரிகள் கூட்டத்தில் மோடி பேசியதை விசாரணை ஆணையத்தில் கூறியதற்காக பழிவாங்கப்பட்டு சிறையில் வாடும் சஞ்சீவ் பட் பார்ப்பனர் தான். குழந்தை ராமன் சிலையை பாபர் மசூதிக்குள் வைப்பதை தனியொரு ஆளாக எதிர்த்து நின்ற ஆச்சார்யா நாராயண் தேவ் ஒரு பார்ப்பனர். ஜெயலலிதா என்ற கெட்டப் பார்ப்பனருக்கெதிராக எதிராக 10 வருடங்கள் நீதிமன்றத்தில் சளைக்காமல் வாதாடிய அரசாங்க வக்கீல் பி.வி. ஆச்சார்யா பார்ப்பனர் தான். பார்ப்பனீயத்தை கைவிட்டவர்கள் அல்ல இவர்கள்; ஆனால் அதை கடைப்பிடித்த/கடைபிடிக்கும் பார்ப்பனர்கள் தான் இவர்கள் என்பது முக்கியமானது. ஆனால் எங்கோ ஓரிடத்தில் பார்ப்பனப் பெரும்பான்மையுடன் அல்லது அதிகாரத்துவப் பார்ப்பனீயத்துடன் முரண்படுகிறார்கள். அந்த புள்ளி மிக முக்கியமானது. அதை பயன்படுத்துகின்ற தேவை உள்ளது.
மேலே சொன்ன வரிசையில் வருபவர் தான் ராமசுப்ரமணியன் அவர்கள். அவர் தன்னை பார்ப்பனர் என்றும் ஆர்.எஸ்.எஸ் என்றும் சொல்வதால் அல்ல; அவற்றை மறைத்திருந்தால் தான் பிரச்சினை. ஆர்.எஸ்.எசின் அஜெண்டா அறநிலையத்துறை கோயில்களை பயன்படுத்துவதல்ல; அபகரிப்பது. அரசாங்கத்தின் கையிலிருந்து கோயில்களை தட்டிப் பறிப்பது. அதை எதிர்கொள்ள சில வியூகங்கள் வேண்டும். எச்ச ராஜா — ஆர்.எஸ்.எஸ் கும்பலின் நோக்கம் தகர்க்கப்பட வேண்டும். அரசின் நிர்வாகத்தில் கோயில்கள் நன்றாக இருப்பதாக மக்கள் எண்ண வேண்டும். மேலும் இந்த குழுவில் ராமசுப்ரமணியன் ஒரு உறுப்பினர் தான். முதல்வர் தான் தலைவர். அதனால் இந்த அணுகுமுறையின் செயல்வடிவத்தை பார்த்தப் பிறகு விமர்சிப்பதே சரியானதாக இருக்கும்.