சென்னை: இலங்கையில் ராணுவத்தினருக்கும், எல்டிடிஇ-யினருக்கும் இடையே நடக்கும் போர் உடனடியாக நிறுத்தப்படவேண்டும் என்றும், அங்கே இனப்பிரச்சனைக்கு கூட்டாட்சி கட்டமைப்புக்கு உட்பட்ட ஒரு பொருத்தமான அரசியல் தீர்வு உடனடியாக எட்டப்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த போரில் இலங்கை அரசையோ அல்லது எல்டிடிஇ-யையோ ஆதரிக்க முடியாது எனக் குறிப்பிட்டுள்ள அவர், ராணுவ வலிமையால் மட்டுமே இலங்கை அரசு எதையும் சாதித்து விட முடியாது என்றும் உடனடியாக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட வேண்டுமென்றும் கூறியுள்ளார். இலங்கையில் அடுத்தடுத்து வந்த ஆட்சி யாளர்கள் தமிழ் மக்களுக்கு எதிரான பாகுபாட்டை பின்பற்றினார்கள் என குற்றம் சாட்டியுள்ள வி.ஆர்.கிருஷ்ணய்யர், அதற்கு பதிலடி என்ற பெயரில் எல்டிடிஇ மேற்கொண்ட அப்பட்ட மான பயங்கரவாதமும், தமிழ் மக்களுக்கு எதிரான பயங்கர சீரழிவை ஏற்படுத்தியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். (பிடிஐ)