போரை ஊக்கிரமாக முன்னெடுத்து வடக்கு கிழக்கின் நகரங்களையும் கிராமங்களையும் உள்ளடக்கிய நிலப்பரப்பைக் கைப்பற்றி வெற்றி முழக்கமிடுவதன் மூலம் போருக்கு மூலகாரணமாக அமைந்த தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வு கண்டுவிட முடியாது. போர் முனைப்பால் பெறப்படும் வெற்றகள் ஆட்சி அதிகாரத்தின் நீடிப்பிற்கும் எதிர்கால நிலைப்பிற்கும் உதவுமே தவிர நாட்டின் சுபீட்சத்திற்கும் வடக்கு கிழக்கின் ஜனநாயகம் சமாதானம் இயல்பு வாழ்க்கை என்பனவற்றுக்கு வழிகாட்டமாட்டாது. எனவே தேசிய இனப்பிரச்சினைக்கு தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய சுயாட்சித் தீர்வுப் பொதியை முன்வைப்பதும் போருக்குள் ஆகப்பட்டுள்ள நாலரை லட்சம் மக்களின் உயிருக்கும் வாழ்வுக்கும் பாதுகாப்பு உத்தரவாதம் வழங்குவதும் அரசாங்கத்தின் உடனடிக் கடமையாகும். இன்று வன்னியில் மக்கள் உணவு உடை இருப்பிடம் மருத்துவம் பெற முடியாத நிலையில் உயிர் வாழ்வுக்கு அஞ்சிய நிலையில் பரிதவித்து நிற்கிறார்கள் அவர்கள் தமிழ் மக்கள் என்பதுடன் இலங்கையின் பிரசைகள் ஆவர். ஆதலால் அவர்கள் எவ்வகையிலும் பழிவாங்கப்படக் கூடாது. அவர்களுக்கு முழுமையான பாதுகாப்பும் அடிப்படைத் தேவைகளும் ஆறுதலும் வழங்குவது அரசின் கடமையாகும் என்பதை எமது புதிய- ஜனநாயக கட்சி வற்புறுத்தி நிற்கிறது.
இவ்வாறு புதிய- ஜனநாயக கட்சியின் மத்திய குழு வடக்கில் இடம் பெற்று வரும் போரும் மக்கள் எதிர் நோக்கும் அபாயங்களும் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும் அவ் அறிக்கையில் இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையானது கடந்த நூற்றாண்டு முழுவதும் பேரினவாத ஒடுக்குமுறை நிலைப்பாட்டின் ஊடாக வளர்க்கப்பட்டு போராக மாற்றப்பட்டது. ஆட்சி அதிகாரத்திற்கு வந்த இரு தரப்புக் கட்சிகள் தமது நிலவுடைமை முதலாளித்துவ வர்க்க நலன்களுக்காகவும் ஏகாதிபத்திய அரவணைப்புக்காகவும் தமிழ் முஸ்லீம் மலையகத் தமிழ்த் தேசிய இனங்களின் ஜனநாயக வாழ்வுரிமைகளையும் இன மொழி பிரதேச அபிலாiஷகளையும் மறுத்து இன ஒடுக்குமுறையினை மேற் கொண்டு வந்தன. கடந்த முப்பது வருட கொடிய போருக்குப் பின்பு கூட இனப்பிரச்சினையின் அரசியல் யதார்த்தத்தை மறுத்து போர் மூலம் தீர்வு காணவே முயற்சிக்கப்படுகிறது. தற்போது அடைந்து வரும் ராணுவ வெற்றிகள் மூலம் இனப்பிரச்சினையின் அடிப்படைகளும் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளும் அற்றுப் போய்விடும் என நம்பப்படுகின்றது. இத்தகைய தவறான அரசியல் மதிப்பீடுகள் தொடருமானால் இந்த நூற்றாண்டு முழுவதும் போருக்கான சூழல் மீண்டும் மீண்டும் நீடிக்கவே செய்யும். அதனால் பேரினவாதிகளும் முதலாளித்துவு அதிகார வர்க்கத்தினரும் அந்நிய சக்திகளும் லாபம் பெற முடியுமே தவிர சிங்கள மக்கள் உள்ளிட்ட அனைத்து தேசிய இனங்களும் எவ்வகையிலும் மீட்சி பெறப்போவதில்லை. நாடும் மக்களும் மேன் மேலும் அழிவுகளையும் துயரங்களையும் சுமந்த செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலை தொடரவே செய்யும்.
எனவே நாட்டையும் மக்களையும் மீட்டெடுத்துச் செல்வதற்குரிய ஒரே வழி ராணுவமயப்படுத்தல் அல்ல. அதற்குப் பதிலாக தேசிய இனப்பிரச்சினைக்கு சுயநிர்ணய உரிமை அடிப்படையில் ஐக்கியப்பட்ட இலங்கைக்குள் வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் பாரம்பரிய பிரதேசத்தில் சுயாட்சியை வழங்கி தமிழ் முஸ்லீம் சிங்கள மக்களை சமத்துவம் ஜனநாயகம் சமாதானத்துடன் வாழ்வதற்கான அரசியல் தீர்வை முன்வைப்பதே இன்றைய அவசரமான முதன்மைப்பணியாகும் இதனை விடுத்து ராணுவ வெற்றிகளையும் ராணுவ வழி காட்டல்களையும் அரசாங்கம் பிரதானப்படுத்தி முன்னெடுப்பதானது சிங்கள மக்கள் உட்பட அனைத்து மக்களினதும் எதிர்காலத்திற்கு அபாயங்களைக் கொண்டு வரவே செய்யும். இன்று நாடும் மக்களும் எதிர் நோக்கும் பாரிய பொருளாதார நெருக்கடிகளுக்கும் அன்றாட வாழ்க்கைத் துயரங்களுக்கும் யுத்தமும் ராணுவ வெற்றிகளுமேசாட்டாகக் காட்டப்படுகிறது. ஆனால் இதனை நீண்ட காலத்திற்கு ஆளும் அதிகார வர்க்கத்தால் முன்னெடுத்து மக்களை ஏமாற்ற முடியாது.
எனவே தான் தேசிய இனப்பிரச்சினைக்கு நியாயமானதும் தமிழ் முஸ்லீம் மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடியதுமான அரசியல் தீர்வுப் பொதியை முன்வைத்து அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய பேச்சுவார்த்தை மூலம் உரிய தீர்வு காணப்பட வேண்டும் என எமது புதிய- ஜனநாயக கட்சி வற்புறுத்தி நிற்கின்றது. ஷ