ஜூன் 8 ஆம் தேதியை ஈழத் தமிழர்கள் மீதான் கவன ஈர்ப்பு நாளாக இந்தியா முழுக்க போராட்டக் கவன ஈர்ப்பு நாளாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்திருந்தது . இந்தியா முழுக்க இலங்கை அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
டில்லி ஜந்தர் மந்தரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலர் ஏ.பி. பரதன், நாடாளுமன்ற உறுப்பினர் பி. லிங்கம், துணைப் பொதுச் செயலர் சுதாகர் ரெட்டி, துணைச் செயலர் அமர்ஜித் கெளிர், டெல்லி மாநில செயலர் தினேஷ் வர்ஷ்னேய் உள்பட அ.தி.மு.க.வினரும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியத் தலைவர் டி. ராஜா பேசியதாவது:
இந்தியாவின் மிக நெருங்கிய அண்டை நாடான இலங்கையில் வசிக்கும் தமிழ் மக்களுக்கு ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்டு வருகின்றன. அரசியல், ஜனநாயக உரிமைகள் கிடைக்கப்பெறவும், சிங்களரைப் போல தமிழர்களும் சரி சமமாக எல்லா உரிமைகளும் பெறவும் கடந்த 50 ஆண்டுகளாக நீண்ட போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
அடுத்தடுத்து இலங்கையை ஆண்ட அரசுகள், தமிழர்கள் கோரிய உரிமைகளை வழங்காமல், வஞ்சகம் செய்தன. இது ஆயுதப் போராட்டத்துக்கு வழிவகுத்தது. பின்னர் நடந்த உச்சகட்ட போரில் சர்வதேச சட்டம், நெறிமுறைகளை மதிக்காமல் கொத்துக் குண்டுகளை வீசி 40 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட்டனர். இதற்கான விடியோ ஆதாரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. உலக வரலாற்றில் வேறெங்கும் நடக்காத போர்க்குற்றங்கள் இலங்கையில் நடந்தேறியுள்ளன. கடந்த 2009 ம் ஆண்டே போர் முடிவுக்கு வந்துவிட்டது என்று அறிவிக்கப்பட்டாலும், இன்றுவரை லட்சக்கணக்கான தமிழ் மக்கள் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கைப் பிரச்னைக்கு அரசியல் ரீதியாக தீர்வு காண வேண்டும். இதற்கு இந்தியா உதவிட வேண்டும். ராஜபக்ச உள்ளிட்ட போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.தமிழக சட்டப் பேரவையில் ஜூன் 7ம் தேதி நிறைவேற்றப்பட்ட இலங்கை குறித்தான தீர்மானங்களை மத்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும். இது குறித்து நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் விவாதத்துக்கு வலியுறுத்தப்படும் என்றார்.