14.11.2008.
இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷ, விடுதலைப்புலிகளை அழிக்கிறேன் என்று கூறிக்கொண்டே அங்கேயுள்ள தமிழர்களையும் அழிக்கத் திட்டமிடுகிறார், அதற்காகவே இந்திய அரசிடம் கெடு கேட்கிறார், இதை மத்திய அரசு புரிந்துகொள்ளவேண்டும், அவரிடம் ஏமாந்துவிடக்கூடாது என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறியிருக்கிறார்.
நேற்று இலங்கை அதிபர் புதுடில்லியில் இந்தியப் பிரதமருடன் பேசிய பிறகு நடந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தக் கருத்துக்கள் குறித்து இன்று தமிழக சட்டமன்றத்தில் விவாதிக்கப்பட்டது.
தமிழகத்திலுள்ள அனைத்துக் கட்சியினரும் ஒருமித்து போர் நிறுத்தம் கோரிக்கொண்டிருக்கையில், அதற்கான வாய்ப்பே இல்லை என்ற ரீதியில் மஹிந்த ராஜபக்ஷ பேசியிருப்பதற்கு கண்டனம் தெரிவித்து பல கட்சித்தலைவர்களும் பேசினர்.
அ இ அ தி முகவின் ஓ.பன்னீர்செல்வமோ, மஹிந்தாவின்கூற்றுக்கள் தமிழகக் கட்சிகளின் ஒருமித்த கருத்துக்கு எதிராக அமைந்துள்ளன, எனவே ஏற்கனவே அனைத்துக்கட்சிக்கூட்டத்தில் முடிவெடுத்தபடி, தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ராஜினாமா செய்யவேண்டும் என்றார்.
இந்த விவாதத்திற்கு பதிலளித்துப்பேசும்போதுதான் முதல்வர் கருணாநிதி ராஜபக்ஷவிடம் மத்திய அரசு ஏமாந்துவிடக்கூடாது என்றார்.