இலங்கையில் ஏற்பட்டுவரும் மீளமுடியாத பொருளாதார நெருக்கடியின் எதிர்விளைவாக சிங்கள மக்கள் மத்தியிலிருந்து நாளாந்தம் போராட்டங்களும் எழுச்சிகளும் பாசிச ராஜபக்ச அரசிற்கு எதிராக எழுந்துள்ளன. பொதுபல சேனா போன்ற சிங்கள பௌத்த மதவெறி அமைப்புக்களைத் தூண்டிவிடும் அரசு மக்களின் பிரச்சனை சிறுபான்மைத் தேசிய இனங்களே என்று சிங்கள மக்களை நச்சூட்டி தமது பௌத்த வெறிச் சிந்தனைக்குள் ஒடுக்கு வைத்துக்கொள்ள முற்படுகிறது. தமிழ்ப் பிரதேசங்களில் திட்டமிட்ட நில ஆக்கிரமிப்பின் ஊடாக தமிழ்ப் பேசும் மக்களுக்கு எதிரான முரண்பாட்டை சிங்கள மக்கள் மத்தியில் வளர்த்துவருகிறது. இன்னொரு புறத்தில் பல்தேசிய வியாபார வெறியுடன் மக்களைப் போதைக்குள் வைத்திருக்க முயலும் கசினோ சூதாட்டங்களை நாடுமுழுவதும் பரவலாக்கத் திட்டமிட்டுள்ளது. இதனூடக உல்லாசப் பயணத் துறையை ஊக்குவித்து நுகர்வுக் கலாச்சாரத்தின் சீரழிவுகளை அறிமுகப்படுத்துகிறது.
இத்தனை சீர்குலைவுகள் ஊடாகவும் சிறுபான்மைத் தேசிய இனங்களின் போராட்டங்களை ஒடுக்கும் சிங்கள பௌத்த அரசு மறு புறத்தில் அப்பாவி சிங்கள மக்களையும் சூறையாடிவருகிறது.
இனக்கொலையின் சூத்திரதாரிகளில் பிரதானமானவரான கோத்தாபய ராஜபக்ச வின் வழிக்காட்டலில் இயங்கும் பொதுபல சேனா என்ற அமைப்பு இன்று நாட்டின் பிரதான பிரச்சனை முஸ்லிம்களின் ஹலால் உணவே எனக் கூறுகிறது. கசினோக்கள் குறித்து அவர்களிடம் ஆங்கில ஊடகம் ஒன்று வினவிய போது ஹலால் உணவே இன்று நாட்டின் பிரதான பிரச்சனை என பதிலளித்துள்ளனர்.
அமரிக்கா உட்பட பல நாடுகளில் சுதந்திரமாகச் செயற்படும் பொதுபல சேனாவின் நோக்கம் பல்தேசியச் சுரண்டல் மூலதனத்தையும் ராஜபக்ச அரசையும் பாதுகாப்பதே இதற்காகவே பௌத்த சிங்கள பெருந்தேசிய வாதத்தை அவர்கள் திட்டமிட்டு விதைக்கின்றனர். இந்தியாவில் மோடியின் ஆதரவாளர்களான ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புக்களின் மாதிரியைப் பயன்படுத்திகொள்ளும் ராஜபக்ச பாசிசம் பொதுபல சேனா இராவண பலய போன்ற அமைப்புக்களை அன்னிய சக்திகளின் ஆதரவோடு தோற்றுவித்துள்ளது.