இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது மற்றும் வடக்கு, கிழக்கு அபிவிருத்தி என்பவற்றைக் கருத்திற் கொண்டு அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஆர்வமாக உள்ளதாக ஜனாதிபதியைச் சந்தித்துரையாடிய மட்டு. மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதான அமைப்பாளர் அருண் தம்பிமுத்து தெரிவித்துள்ளார்.
தனது காலத்தினுள் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் சம்பந்தன் அவர்கள் மிகுந்த ஆர்வமாக உள்ளார் எனவும் பிரதேச அபிவிருத்திக்கும், மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்கும் அரசுடன் ஒத்துழைப்பது அவசியமானதே என்பதை அவர் நன்கு புரிந்து வைத்துள்ளார் எனவும் குறிப்பிட்ட அருண் தம்பி முத்து, எனினும் தமிழ் மக்களில் ஒரு சிறு பிரிவினர் தனக்குத் துரோகி என மக்கள் பட்டம் சூட்டிவிடுவார்கள் எனும் பயத்தினாலேயே அவர் இவ்விடயத்தில் பின்னிற்பதாகவும் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார்.
சம்பந்தன் அவர்களின் எண்ணப் போக்கை வரவேற்ற ஜனாதிபதி, இணக்க அரசியலை மேற்கொண்டால் அதனூடாக வடக்கு, கிழக்கைக் கட்டியெழுப்பி, தமிழ் மக்களது வாழ்வாதாரத்தை உயர்த்த அவர்கள் சேவை செய்யலாம் எனவும் தெரிவித்ததாகவும் அருண் தம்பிமுத்து தெரிவித்தார்.
இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கும் இடையில் அவசர சந்திப்பொன்று நடத்தப்பட உள்ளது.
சிங்கள மக்களுக்கும் தமிழ்ப் பேசும் மக்களுக்கும் இரண்டு வகையில் நல்லிணக்கம் ஏற்படலாம். ஒன்று சிங்கள தமிழ் அதிகார வர்க்கங்களிடையேயான நல்லிணக்கம். இரண்டாவது ஒடுக்கப்படும் தமிழ்ப் பேசும் தேசிய இனங்களுக்கும் சிங்கள ஒடுக்கப்படும் மக்களுக்கும் இடையேயானது. முதலாவது வகையான நல்லிணக்கம் பாசிச அரசைப் பலப்படுத்தும். இரண்டாவது வகையானது பலவீனப்படுத்தும். சுய நிர்ணய உரிமைக்கான போராட்டத்தின் வெற்றிக்கான ஆரம்பமாகவும் அமையும். அருண் தம்பிமுத்து என்பவர் கூறும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நல்லிணக்கம் அதிகார வர்க்கங்களுக்கு இடையேயானது. இனக்கொலை அரசுடனான அனைத்து இணக்க அரசியலையும் நிராகரித்து திட்டமிட்ட இனச் சுத்திகரிப்பிற்கு எதிராக சிங்கள ஒடுக்கப்படும் மக்களையும் ஆதரவாகத் திரட்டுவதன் ஊடாகவே சுய நிர்ணய உரிமைக்கான போராட்டம் வெற்றிபெற முடியும்.