12.08.2008.
ஜோர்ஜியாவில் கிளர்ச்சி நடத்திய மாகாணங்களான தெற்கு அசட்டியா மற்றும் அப்காசியா ஆகியவற்றின் எதிர்கால அந்தஸ்து குறித்து சர்வதேச சமரசப் பேச்சுவார்த்தைகள் தேவை என்பது குறித்து ரஷ்ய மற்றும் பிரான்ஸ் அதிபர்களிடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
மாஸ்கோவில் இருவருக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தைகளை அடுத்து செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய பிரான்ஸ் நாட்டின் அதிபர் சர்கோசி அவர்கள், மோதலில் ஈடுபட்ட இருதரப்பும், அண்மைய சண்டைகளுக்கு முன்னர் தாம் இருந்த நிலைகளுக்கு திரும்பவேண்டும் என்று உடன்பாடு காணப்பட்டதாகவும் தெரிவித்தார்.
சர்கோஸி அவர்கள், இந்த திட்டத்தை ஜோர்ஜிய அரசங்கத்தின் அங்கீகாரத்தைப் பெறுவதற்காக திபிலிசிக்கு எடுத்துச் செல்வார்.
ஜோர்ஜியாவின் மீதான இராணுவ நடவடிக்கையை முடித்துக்கொள்ளுமாறு ரஷ்ய அதிபர் மெட்வெடேவ் அவர்கள் உத்தரவிட்ட பின்னர், இந்த பேச்சுவார்த்தை ஆரம்பமானது.
பிரிந்துபோன கிளர்ச்சிக்குரிய மாகாணங்களில் ரஷ்ய அமைதிகாப்புப் படை தொடர்ந்தும் இருக்கும் என்றும் அவர் கூறினார்.
தாக்குதலைத் தொடர்வதாக இருதரப்பும் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டு
—————————————————————————–
தாக்குதலை நிறுத்திவிட்டதாக ரஷ்யா அறிவித்தது முதல் இருதரப்புமே, மறுதரப்பு தாக்குதலைத் தொடர்வதாக குற்றஞ்சாட்டிவருகின்றன.
தெற்கு அசட்டிய எல்லைக்கு அருகே இருக்கின்ற இரு கிராமங்களின் மீது ரஷ்யா குண்டுத் தாக்குதலை நடத்தியதாக ஜோர்ஜியா குற்றஞ்சாட்டியுள்ளது. அதேநேரம் ஜோர்ஜியாவின் இந்தக் குற்றச்சாட்டு, தூண்டிவிடும் நோக்குடையது என்று கூறி ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு அதனை நிராகரித்துள்ளது.
ஜோர்ஜியாவின் மேற்கே பிரிந்து போயுள்ள அப்காசியாவின் பிரிவினைவாதப் படைகள், தமது துருப்புக்கள் கொடோரி பள்ளத்தாக்கில் உள்ள ஜோர்ஜியப் படைகளுக்கு எதிராக முன்னேறிவருவதாகக் கூறியுள்ளன.
இதற்கிடையே ஜோர்ஜியாவுக்கு ஊடாகச் செல்லும் தமது குழாய்களை மூடிவிட்டதாக பிரிட்டனை தளமாகக் கொண்ட BP நிறுவனம் தெரிவித்துள்ளது. பாதுகாப்புக் காரணங்களுக்காகவே அதனை தாம் மூடியுள்ளதாகவும் அது கூறியுள்ளது.