ஒவ்வொரு கலாச்சாரமும், அது எந்த சூழலில் உருப்பெற்றதோ, எப்படிப்பட்ட சூழலில் கடைப்பிடிக்கப்படுகிறதோ, அந்த சமூகச் சூழலில் வைத்துத்தான் புரிந்துகொள்ளப்பட வேண்டியதாகும். வேற்று ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள், தமது சமூகத்தில் காணப்படும் கலாச்சார பெறுமானங்களை அடிப்படையாகக் கொண்டு, வேறொரு சமூகத்தின் கலாச்சாரத்தை மதிப்பிடுவது, அந்த மதிப்பீட்டின் அடிப்படையில் பல்வேறு சமூகங்களின் கலாச்சாரங்களுக்கிடையில் ஏற்றத்தாழ்வுகளை கற்பிப்பது அபத்தமானது. இந்த விதமான மதிப்பீடுகள் வேறுபட்ட சமூகங்களுக்கிடையில் ‘அதிகாரப் படிநிலைவரிசையை’ (Hierarchial Order) கற்பிப்பதற்கும், அந்த கற்பிதங்களின் அடிப்படையில் குறிப்பிட்ட சமூகத்தை இன்னொரு சமூகம் ஒடுக்குவதற்குமே வழிவகுக்கும்.
பதினேழாம், பதினெட்டாம் நூற்றாண்டுகளில் ஐரோப்பியர்கள் தமது காலத்தில் தாம் அடைந்திருந்த அறிவியல், கலாச்சார, தொழிற்துறை, பொருளாதார வெற்றிகளை வரலாற்றில் மற்றெவரும் கண்டிராத மகத்தான சாதனைகளாக கருதத் தலைப்பட்டனர். இந்த அளவுகோள்களை அடிப்படையாக வைத்து ஏனைய சமூகங்களை மதிப்பீடு செய்தனர். தமது “தரத்தை” இந்த துறைகளில் அடைந்திராத சமூகங்களை “பின்தங்கியவை”, “பிற்போக்கானவை” என்று கருதத் தலைப்பட்டனர். அந்த சமூகங்களை தமது உயர்ந்த கலாச்சாரத்தை கொண்டு செல்வது தமது கடமை எனவும், அதன் பொருட்டு அந்தந்த நாடுகளை வெற்றி கொள்வதும், அதனூடாக அந்த குறிப்பிட்ட நாடுகளைச் சேர்ந்த மக்களை தமது கலாச்சாரத்துடன் இணைத்துக்கொள்வதும் தமது கடமை என்று வாதிட்டனர். இதனை ‘ஐரோப்பியமையவாதம்’ (Eurocentrism) என்று இன்றைய சமூக விஞ்ஞானிகள் குறிப்பிடுவர். உண்மையில் இந்த கண்ணோட்டமானது ஐரோப்பிய நாடுகளது கொலனித்துவ ஆதிக்கத்திற்கே துணைபோனது. இதனால் தற்போது எந்தவோரு சமூக அறிஞரும் ஐரோப்பியமையவாதத்தை கண்டிக்கவே செய்வர். இதற்கு மாறாக ‘கலாச்சார சார்புவாதத்தையே’ (Cultural Relativism) முன்மொழிவர். நவீன மானுடவியலாளர்களைப் (Anthropologists) பொருத்தவரையில் ஆடைகளையே அணியாத அமேசன் காட்டு பூர்வகுடிகளாக இருந்தாலென்ன, மனித நாகரீகத்தின் உச்சியல் திகழ்வதாக பறைசாற்றும் மேற்கு, தொழில்மயமான நாடுகளின் தலைநகரத்தில் வாழும் மக்களாக இருந்தாலென்ன இரண்டு தரப்பினருமே ஒத்தவர்கள்தாம். இந்த இரண்டு தரப்பினரும் தாம் வாழும் சமூக சூழ்நிலையில் இருந்து பிறந்த, தமது அன்றாட வாழ்வை நடத்திச் செல்வதற்கு அவசியமான கலாச்சார பெறுமானங்களைக் கொண்டுள்ளார்கள்.
அமெரிக்க கண்டத்தை “கண்டுபிடித்த” ஐரோப்பியர்கள் அங்கு வாழ்ந்து வந்த பழங்குடியினரை பின்தங்கியவர்களாகவும், கலாச்சாரம் அற்றவர்களாகவுமே கண்டனர். அவர்களை சரியான வழிக்கு வழிகாட்டுவது தமது மதக்கடமை என்றும் கூறத்தலைப்பட்டனர். உதாரணமாக, அமெரிக்காவை ஆக்கிரமித்த ஐரோப்பிய வெள்ளையினத்தவரது அன்றைய கலாச்சாரத்தை அமெரிக்க பூர்வ குடிகளது கலாச்சாரத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த வேறுபாட்டை நாம் தெளிவாக காணமுடியும். இந்த பூர்வ குடியினர் தமது பரம்பரை வழியாக வந்த அறிவின் காரணமாக இயற்கையுடன் இசைந்துவாழ பழகிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் இயற்கையை தெய்வமாகவே பார்த்தார்கள். இயற்கையில் இருந்து எதனை எடுத்தாலுங்கூட, அதனை தமது அத்தியாவசிய தேவைக்காக மாத்திரம் எடுத்துக் கொண்டார்கள். அப்படி எடுத்ததற்கு முறைப்படி உரிய ஈட்டையும் இயன்றவரை வழங்குவதை வழமையாகக் கொண்டிருந்தார்கள். அவர்கள் தேவைக்கு அதிகமாக எதனையும் இயற்கையில் இருந்து எடுத்துக்கொள்வதோ, அல்லது இருப்பவற்றை பதுக்குவதோ கிடையாது. மரம் ஒன்றை வெட்டினால் இயன்றவரையில் இன்னொரு கன்றை நட்டிவிட முயல்வார்கள். ஒரு மிருகத்தை வேட்டையாடினால் அதன் மாசிசத்தை புசித்தபின்பு அதன் எலும்புகளை கண்டபடி நிலத்தில் வீசியெறியாமல், மரத்தில் உயரமாக ஒரு பரணை அமைத்து அதில் பாதுகாப்பாக வைத்திருப்பார்கள். இவர்களுக்கு கலாச்சாரத்தைக் கற்றுக் கொடுக்க சென்றாதாக கூறிக்கொண்டு ஐரோப்பியர்களோ, தங்கத்தை தேடுவதிலேயே குறியாக இருந்தார்கள். இதற்காக இவர்கள் எந்தவொரு நாட்டின்மீதும் படையெடுக்கவோ, இனப்படுகொலைகளை கட்டவிழ்த்துவிடவோ தயங்கியது கிடையாது. இவர்களால் பூர்வகுடிகளது கலாச்சார பெறுமானங்களை புரிந்துகொள்ளவே முடியவில்லை. தங்களது அறியாமையை அவர்கள் பூர்வகுடிகள் மீது சுமத்தினார்கள். அவர்களுக்கு கலாச்சாரமே கிடையாது என்று சாதித்தார்கள். அமரிக்க கண்டத்தின் மக்களையும், இயற்கை வழங்களையும் கொள்ளையடித்ததுடன், அவர்களை இனப்படுகொலையும் (Genocide) செய்தனர். மிஞ்சியிருந்தவர்களை ஆன்மீகரீதியாக தமக்கு அடிமைப்படுத்துவதற்காக கீறீஸ்துவ மதத்தை பரப்பினார்கள்.
இப்படியாக செய்வது “வெள்ளையினத்தவரது சுமை” (‘Burden of Whiteman’) என்று குறிப்பிட்டனர். ஒரு ஆபிரிக்க கவிஞன் குறிப்பிட்டது போல, “அவர்கள் வரும்போது அவர்களது கரங்களில் பைபிளும், எமது கரங்களில் நிலங்களும் இருந்தன. இப்போது எமது கரங்களில் பைபிலும், அவர்களது கரங்களில் நிலங்களும் இருக்கின்றன”, என்ற வாசகங்கள் கொலனித்துவத்தின் சர்வ்வியாபகமான விதியாகவே அமைந்துவிட்டுள்ளது. உண்மையில் இதுவோர் அப்பட்டமான நிறவெறி பிடித்த கொள்கையே அன்றி வேறெதுவுமல்ல என்பது நிரூபணமான வரலாற்று உண்மையாகும். இதன் மிக அண்மைக்கால உதாரணம்தான், உலகத்திற்கே நாகரீகத்தை கற்றுக்கொடுத்த ஈராக்கிய மக்களுக்கு, நாகரீகத்தை கொண்டு செல்வதற்கா ஈராக் மீது படையெடுப்பதாக ஜோர்ஜ் புஸ் கூறிய அபத்தமான கூற்றாகும். இன்றும் கூட வாரத்தில் சில மணிநேரங்களே வேட்டையாடுவதன் மூலமாக தமது தேவையை பூர்த்தி செய்தபின்பு, மீதமாக உள்ள நேரத்தை ஓய்வாக, தமது குடும்பத்தவருடனும், குலத்தவருடனும் பொழுதுபோக்கில் ஈடுபடும் பல பூர்வகுடியினரது வாழ்க்கை முறையானது, தம்மைச் சுற்றி நுகர்பண்டங்களை வாங்கிக் குவித்துவிட்டு, அவற்றை அனுபவிப்பதற்குக்கூட நேரம் இல்லாது வாரம் அறுபது தொடக்கம் எண்பது மணித்தியாளங்கள் உழைக்க நேரும் அபிவிருத்தியடைந்த நாட்டவரைச் சேர்ந்தவர்களைவிட உயர்வானதாவே மானுடவியலாளர்களால் கருதப்படுகிறது.
இவ்வளவும் பேசுவது ஏன் என்ற வாசகர்கள் கேட்பது புரிகிறது. ‘தேசம்நெற்றில்’ கிறீஸ்தவ விரோதமாகவும், இஸ்லாமிய விரோதமாகவும், பலரும் அண்மைக் காலத்தில் கருத்துக்களை சற்றும் தயக்கமின்றி வெளிப்படுத்தி வந்துள்ளதை பலநாட்காளாக அவதானித்து வந்திருந்த போதிலும், நான் இவற்றைப்பற்றி அதிகம் அலட்டிக் கொண்டது கிடையாது. அவரவரது அறியாமையை அவர்கள் தமது கருத்துக்கள் மூலமாக பறைசாற்றிக் கொண்டிருக்கும் போது நாம் அதிகம் அலட்டிக் கொள்ள முடியாதுதானே என்பது எனது கருத்தாக இருந்த்து. ஆனால் ‘தேசம்நெற்’ பத்திகளில் தமிழ் சமுதாயத்தின் மீட்பராகவும், மகத்தான புத்திஜீவியாகவும் சித்தரிக்கப்பட்ட ரட்ணஜீவன் கூல் உடைய எழுத்துக்ளில் வெளிப்பட்ட அவரது அறியாமையை கண்டபின்பு, சில வார்த்தைகள் பேசமல் இருப்பது தவறாக அமைந்துவிடும் என்பதனால் இதனை எழுதுகிறேன்.
அதனைவிட, இவரது யாழ் பல்கலைக்கழக உபவேந்தர் நியமனத்திற்காக தனியாக கையெழுத்து இயக்கம் நடத்தியவர்கள் என்றவகையில் ‘தேசம்நெற்’ இனர், இவரது தவறான கருத்துக்களை முறையாக பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வதுடன், இப்படிப்பட்ட இயக்கத்தை நடத்தியதன் அரசியலையும் மதிப்பீடு செய்பது அவசியம் என்றவகையில் இந்த எழுத்து அவசியமானதாக ஆகிறது.
அண்மையில் ரட்ணஜீவன் கூல் அவர்கள் சைவ சமயம் தொடர்பாக வெளியிட்ட கருத்துக்களைப் படித்தபோது, அப்படியே கொலனித்துவ காலத்தில் மிசனரிமார்கள் செய்த பிரச்சாரத்தை படித்தது போன்றதொரு உணர்வுதான் ஏற்பட்டது. அதனைவிட இவர் பாலியல் தொடர்பாகவும், ‘தற்பால் கவர்ச்சியாளர்களை’ (Gay) சித்தரித்தவிதமும், இவரை சமூகத்தின் படுபிற்போக்குத்தனமாக கருத்துக்களை கொண்டிருப்பவர் என்பதை அம்பலப்படுத்துகிறது. இவர் தமிழ் சமூகத்தின் முன்னணி புத்திஜீவியாக இனம் காணப்படுபவர் என்றவகையிலும், யாழ் பல்கலைக்கழகத்தின் ஒரே மீட்பராகவும் சித்தரிக்கப்படும் நிலையில் இவரது கருத்துக்கள் முறைப்படியான பரிசீலனைக்குள்ளாவது அவசியமானதாக ஆகிறது. இவர் பொறியியல் துறையில் போராசிரியராக இருக்கிறார் என்பதும், அந்த துறையில் பாண்டித்தியம் பெற்றவர் என்பதும் கேள்விக்கு அப்பாற்பட்டதாகும். ஆனால் இவர் அந்த துறையைத் தாண்டி ஏனைய சமூகவியல் துறைகளுக்குள் அடியெடுத்து வைக்கும்போது அந்த துறைகள் தொடர்பான இவரது புலமையை கேள்விக்குள்ளாக்குவது தவிர்க்கப்பட முடியாததாகிறது. இவர் இந்த துறைகளில் வெளியிட்டுவரும் கருத்துக்களைப் பார்க்கையில் இவர் சமூகவியல், மானிடவியல் போன்ற துறைகளில் விஞ்ஞானபூர்வமான கண்ணோட்டத்தை அறவே கொண்டவராக இல்லை என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. ஒரு துறையில் பாண்டித்தியம் பெற்றவர்கள், தாம் கற்றுத்தேறாத இன்னொருதுறையில் பாண்டித்தியம் பெற்றவர்போல பாவணை பண்ணுவதை ‘போலிப்புலமை’ (Pseud Intellectual or Sophistry) என்றுதான் அழைக்கப்பட முடியும். முன்பு இவர் எழுதிய சைவ வேளாளர் பற்றிய விமர்சனங்களை படித்தபோது எனக்கு இவர், மக்கள் தரப்பில் இருந்து சைவ வேள்ளாளரது ஆதிக்க சக்திகளுக்கு எதிராக குரல் கொடுப்பவர் போன்றதொரு தோற்றப்பாடுதான் உருவானது. ஆனால் இவரது அண்மைக்கால எழுத்துக்கள் இவர் அங்கிலிக்கன் வேளாளரது தரப்பில் இருந்து குரல் கொடுப்பவர் என்பதை அடையாளம் காட்டுகிறது.
ஒவ்வொரு சமயமும் தனக்குள் பலவிதமான கருத்துப்போக்குகளைக் கொண்டுள்ளது. அந்தவிதத்தில் எந்தவொரு சமயத்தையும் எடுத்த எடுப்பிலேயே முற்போக்கனது என்றோ அல்லது பிற்போக்கானது என்றோ கூறிவிட முடியாது. அது தான் செயற்படும் சமுதாயத்தில் உள்ள பல்வேறு சமூக சத்திகளில் எந்தெந்த பிரிவுகளுடன் தொடர்புபட்டு செயற்படுகிறதோ, எந்த சக்திகளது நலன்களுடன் தன்னை பிணைத்துக் கொண்டுள்ளதோ என்பதைப் பொறுத்தே அதன் கூறுகளது முற்போக்கு மற்றும் பிற்போக்கு தன்மைகளை இனம்கண்டுககொள்ள முடியும். எந்தவொரு சமயமும் புதிதாக ஒரு சமுதாயத்தினுள் நுழையும்போது, அந்த சமுதாயத்தில் ஏற்கனவெ ஆழமாக வேறூன்றியுள்ள அத்தனை அம்சங்களையும் நிராகரித்துவிட்டு தன்னை நிலைநாட்டிக்கொள்ள முடியாது. பல்வேறு சந்தர்ப்பங்களிலும் அந்தந்த சமுதாயத்தில் ஆழமாக வேறூண்றியுள்ள சில அம்சங்களையும் தவிர்க்க முடியாதவாறு உள்வாங்கிக்கொண்டே தன்னை நிலைநாட்டியாக வேண்டியுள்ளது. அதுபோலவே, குறிப்பிட்ட சமுதாயத்தில் இருக்கும், புதிதாக எழுந்துவரும் பல்வேறு சமூகப் பிரிவுகளும் தமது நலன்களை பிரதிநிதித்துவப்படுத்தும் விதத்தில் அந்த சமயத்தில் ‘மூலபாடங்களை’ (Classics) மீள்வாசிப்பு செய்வதும், தமது தேவைக்கேற்ப குறிப்பிட்ட ஒரு சமயத்தினுள் காணப்படும் குறிப்பிட்ட சில பிரிவுகளை பலப்படுத்துவதும் நடந்தேறுகிறது. இதனால் எந்தவொரு சமயத்தினுள்ளும் பலதரப்பட்ட போக்குகளும், அர்த்தப்படுத்தல்களும் (Interpretations) இருப்பது தவிர்க்க முடியாததாகிறது.
ஆதியான சமூகங்களில் மனிதரது உயிர்வாழ்வு என்பது மிகவும் உத்தரவாதமற்றதாக இருந்தது. இதனால் இனப்பெருக்கமானது அந்த சமூகங்களில் மிகவும் முக்கியமான அம்சமாகவும், புனிதமானதாகவும் கூட கருதப்பட்டு வந்ததுண்டு. இந்தவிதமான வழிபாடுகளை ‘கருவளத்தின் மீதான வழிபாடு’ (Fertility Cult) என்று மானுடவியலாளர்கள் குறிப்பிடுவர். இந்து சமயத்தில் மாத்திரமன்றி ஏனைய பல ஆதியான கலாச்சாரங்களிலுங்கூட இந்த விதமான லிங்க வழிபாடுகள் இருக்கவே செய்கின்றன. இவை பற்றி ஏதுமே அறியாதவர்போல கூல் லிங்க வழிபாடு தொடர்பாக முன்வைக்கும் விமர்சனங்கள் அசிங்கமானவையாக இருக்கின்றன.
புராணங்கள் என்பவை ஐதீகங்கள் என்ற வகையில் கற்பிதமானவையாகும். புராணத்திற்கு இணையாக ஆங்கிலத்தில் Myth என்ற சொல் வழங்கப்படுகிறது. அந்தந்த காலத்தில் வாழ்ந்த மக்கள் தமது வழிபாட்டு முறைகளுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் தத்தமது ஐதீகங்களில் பல கதைகளை இதன் பொருட்டு உருவாக்கியுள்ளார்கள். சாமாண்யர்களுக்கு (Layperson) விளக்கும் விதத்தில் அமைந்துள்ள இந்த கற்பிதங்களில், ஒரு நிகழ்வானது ஒன்றுக்கு மேற்பட்ட, ஒன்றிற்கொண்று முரணான கதைகளாக கூறப்பட்டிருப்பதைக் காணலாம். இவை அந்தந்த சமயத்தைப் பின்பற்றும் சாமாண்யபவர்களுக்கு ஒரு பிரச்சனையாகவே இருப்பதில்லை. இந்த கற்பிதங்களுக்குள் சென்று தர்க்கத்தை (Logic) தேடமுனைவது, அவற்றிலுள்ள பிழைகளை கண்டுபிடிப்பதாக மார்தட்டுவது சம்பந்தப்பட்டவர்களது அறியாமையை மாத்திரமே புலப்படுத்துகிறது.
குறிப்பிட்ட சமயத்தைச் சேர்ந்தவர்கள், தமது சமுதாயத்தின் பிற்போக்கான அம்சங்களை களையவேண்டும் என்ற நோக்கில் இதனை செய்யும் போது, அதுவும் சாமாண்யர்களை சமய மயக்கங்களில் இருந்து விடுபட வைக்கும் நோக்கில் செய்யும் போது அதற்கு ஒரு அர்த்தத்தை காண முடிகிறது. பெரியாரின் முயற்சிகள் இந்த வகைப்பட்டவையாகும். ஆனால் வேற்று மதத்தைச் சேர்ந்த ஒருவர், அடுத்தவர் மதத்தை விமர்சிக்கும்போது, அதுவும் தனது மதத்தை உயர்வாக காட்டும் நோக்கில் செய்யும் போது, வெறும் அபத்தமே மிஞ்சுகிறது. இங்கே கூல் கிறீஸ்த்துவத்தை நியாயப்படுத்தவில்லை என்ற வாதம் எழலாம். ஆனால் கிறீஸ்த்துவம் தொடர்பாக எந்த விமர்சனங்களையும் முன்வைக்காமல், சைவ சமயத்தை மாத்திரம் விமர்சிப்பதை இந்த அர்த்தத்தில்தான் எடுத்துக்கொள முடியும். இவரது கருத்துக்களில் ஐரோப்பியமையவாதம் தான் வெளிப்படுகிறதே ஒழிய, பகுத்தறிவுவாதத்தை அறவே காணமுடியவில்லை.
இந்து சமயத்தில் இயற்கை வழிபாடு தொடக்கம் லிங்க வழிபாடு, முன்னோர்கள் வழிபாடு உட்பட ஆழ்நிலைத் தியானம் வரையிலான அத்தனை வழிபாட்டுமுறைகளும் இருக்கின்றன. பல்வேறு சமூக சக்திகளையும் பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள், குறிப்பான வரலாற்று காரணிகள் மற்றும் அவர்களது அறிவுத்தரம் போன்ற நிலைமைகளின் காரணமாக குறிப்பிட்ட சில வழிமுறைகளை தீவிரமாக எதிர்த்து, இன்னும் சில வழிபாட்டு முறைகளை முதன்மைப்படுத்தியும் செயற்பட்டுள்ளார்கள். கொலனித்துவ காலாத்தில், மிசனரிமார் சைவசமயம் தொடர்பாக முன்வைத்த விமர்சனங்களை முன்கொடுக்கும் விதத்திலும், வைச சமயத்தை “நவீனமயப்படுத்தும்” விதத்திலும் ஆறுமுக நாவலர் சில சீர்திருத்தங்களை முன்மொழிந்த்துடன், அப்போது சைவ சமயத்தில் நடைமுறையில் இருந்துவந்த “பழமையா” சில வழிமுறைகளை எதிர்த்தும் செயற்பட்டார். சிறுதெய்வ வழிபாடு, விலங்குகளை பலியிடுவது, சின்னமேளம் … போன்ற பல நடைமுறைகளை எதிர்த்த்துடன், ஆகம வழிமுறைகளின்படியே ஆலயங்களில் வழிபாடு நடைபெறவேண்டும் என்று வலியுறுத்தினார். ‘புரட்டெஸ்த்தாந்து அறநெறியை’ (Protestant Ethics) ஒத்த ‘அறநெறியொன்றை’ தனது சமுதாயத்தில் உருவாக்க இவர் பாடுபட்டார். அந்த வகையில் ஆறுமுகநாவலர் ஒரு சைவசமய சீர்திருத்தவாதியாவார். இப்படிப்பட்ட நடைமுறைகளை எம். என். சிறீநிவாசன் என்ற மானுடவியலாளர், ‘சமஸ்கிரதமயமாக்கல்’ (Sanskritisisation) என்று குறிப்பிடுவார்.
சமய சீர்திருத்தவாதிகளது முயற்சிகளையும் மீறி சில புராதண பழப்பவழக்கங்கள் இன்றும் கூட எல்லா சமயத்தவரிடையேயுங்கூட தொடரவே செய்கின்றன. இவற்றை எவ்வாறு பார்ப்பது என்பது அந்தந்த சமயத்தைச் சேர்ந்தவர்கள் முடிவு செய்ய வேண்டியவர்களாவர். ஒவ்வொரு சமயத்திலும் உருவாகிவரும் முற்போக்கு சக்திகளும், ஒடுக்கப்பட்ட சமூகப்பிரிவினரும், தமது போராட்டங்களில் ஒரு முற்போக்கான மதப்பிரிவை அங்கிகரிக்கவோ அல்லது அந்த மத்தை முற்றாக நிராகரத்து செயற்படவோ முன்வருவர். இப்படியாக ஒவ்வொரு மதத்தினுள்ளும் பல்வேறு சமூக சக்திகளும், தத்தமது இலக்குகளை வென்றெடுக்கும் விதத்தில், அந்த மத்ததின் பல்வேறு பிரிவுகளில் ஏதாவது ஒன்றை முதன்மைப்படுத்துவது அல்லது அதனை முற்றாக நிராகரிப்பது வரையிலான பல்வேறு நிலைப்பாடுகளை மேற்கொள்ளலாம். இது மதம் என்ற தளத்தில் நடைபெறும் வர்க்க, சாதிய, மற்றும் பல்வேறு சமூகப்பிரிவுகளது போராட்டங்களின் வெளிப்பாடும் ஆகும். இந்த போராட்டங்களில் “வெளியார்கள்” அங்குள்ள முற்போக்கான பிரிவினருக்கு தார்மீகரீதியாக ஆதரவை வழங்கலாம். மாறாக, நாமே அந்த போராட்டத்தை நடத்த முன்வருகைளில் இது இரண்டு மதப்பிரிவினருக்கு இடையிலான சகிப்புணர்வின்மையின் வெளிப்பாடாக அமைந்துவிடும் வாய்ப்புண்டு. அந்த வகையில் இங்கு கூல் மேற்கொள்வது சைவர்களுக்கு எதிரான சகிப்புணர்வின்மையாக புரிந்துகொள்ளப்பட்டது சரியானது என்றே நான் கருதுகிறேன். சைவ சமயத்தவர்களுடன் ஒரு விரிவான சகிப்புணர்வை காட்டாத ஒருவர் யாழ் பல்கலைக் கழகத்திற்கு மாத்திரமல்ல, வேறெந்தவொரு நிறுவனத்திற்குமே பொறுப்பாக இருக்க தகுதியற்றவர் என்பதுதான் எனது அபிப்பிராயமாகும். ஏனெனில் குறிப்பிட்ட நம்பிக்கை முறைகளை நாம் ஏற்றுக் கொள்ளாதது என்பதும், அந்த நம்பிக்கை கொண்டவர்கள் மீது சகிப்புணர்வை கொண்டிராததும் வேறுவேறாகும்.
பாலியல் நடத்தை பற்றி கூல் வெளியிடும் கருத்துக்கள் மிகவும் பத்தாம்பசலித்தனமானவையாக, ‘விக்ரோரிய காலத்தில்’ (Victorian Era) காணப்பட்ட பாலியல் ஒடுக்குமுறைகளுக்கு நிகரானவையாக இருக்கின்றன. சமூகத்தில் ஆங்காங்கே நிகழ்ந்த சில மீறல்களை பெரிதாக எடுத்து பேசும் அளவிற்கு அப்படி என்ன முக்கியத்துவம் இருக்கிறது என்பது புரியவில்லை. இளம் வயதில், பல்கலைக்கழக சூழலில் சிலர் தற்பால் சேர்க்கையில் ஈடுபடுவதும், சில பெண்களுடன் தொடர்புகளை வைத்திருப்பதும் இயல்பாக நடைபெறுபவை தான். இது இரண்டு வயதுக்கு வந்தவர்கள், சொந்த விருப்பத்தின் பெயரில், மனமொத்து செய்யும் ஒரு நிகழ்வு. இதில் ஏதோ உலகம் அழிந்து போல கவலைப்படுவதற்க என்ன இருக்கிறது என்பதை கூல் தான் விளக்க வேண்டும். எப்போது கிராமத்து வாழ்க்கையிலிருந்து இளைஞர்களும், யுவதிகளும் நகரங்களை நோக்கி வரவும், சுயமாக தொழில் செய்து சீவிக்கவும் முன்வருகிறார்களோ, அப்போதே, அதுவரையில் இருந்துவந்த கிராமத்து பழக்கவழக்கங்கள் சிறிது சிறிதாக உடைந்துபோக, ஒரு கட்டத்தில் முற்றிலும் வித்தியாசமா பாலியல் அறநெறிகள் சமுதாயத்தில் உருவாகத் தொடங்குகின்றன. தொழில்மய நாடுகளில் இது எப்போதோ நடந்து முடிந்து விட்டது. புலம்பெயர்ந்தவர்களில் இங்குள்ள இளம் பராயத்தினர் யாருமே ஊரில் நடைமுறையில் இருந்த பழக்க வழக்கங்களை அப்படியே பின்பற்றுபவர்கள் அல்லர். கிராமங்களை விட்டு நகருக்கு வந்துவிட்ட இளைஞர்கள் மத்தியிலும் இது நடந்தேறுகிறது. இது மிகவும் இயல்பானவையாகும். இதற்கு கூல் ஏன் நித்திரையைத் தொலைத்தார் என்பதுதான் புரியவில்லை. இங்கு தவறானது, இவர் குறிப்பிடும் சம்பவங்களில் கிடையாது. மாறாக, ‘விக்ரோரிய விழுமியங்களை’ இன்னமும் காவிக்கொண்டு திரியும் கூலின் மீதே தவறு இருக்கிறது.
நமது முன்னோர்கள் பாலியலை ஒரு விரும்பக்கூடாத, தவறான அம்சமாக காணவில்லை. மாறாக அதனைக் கொண்டாடினார்கள். கடவுளை அடைவதற்கான மார்க்கங்களுள் ஒன்றாகவே அதனைக் கருதினார்கள். தமது கோயிலிலும், மற்றும் தமது கலைப்படைப்புக்களிலும் இந்த கருத்தை வெளிப்படையாகவே காட்டும் விதத்தில் பலவித கலைவடிவங்களிலும் அதனை வெளிப்படுத்தினார்கள். சிலைகள், ஓவியங்கள், பாடல்கள், காமசூத்திரம்… போன்ற பல்வேறு கலைவடிவங்களிலும் அதனை கொண்டாடி மகிந்தார்கள். மேற்கு நாடுகளில் அறுபதுகளில் தோன்றிய ‘பாலியல் புரட்சி’ (Sexual Revolution) என்பது எம்மைப் பொருத்தவரையில் மிகவும் பழைய கதைதான். இப்படிப்பட்ட ஒரு சமூகச் சூழலில் உருவான படைப்புக்களை தமது ‘விக்ரோரியா காலத்து’ விழுமியங்களின் ஊடாக மதிப்பீடு செய்ய முனைவது கூல் உடைய அறியாமையை வெளிப்படுத்துகிறதே அன்றி, அவரது புத்திஜீவித்தனத்தை அல்ல. நளவென்பாவை பர்சிவல் பாதிரியார் ‘ஆபாச இலக்கியமாக’ (Pornography) குறிப்பிட்டதாக இப்போது குறிப்பிடும் கூல், அதே பாடசலையில் ஆசிரியராக இருந்தவரும், பின்னாளில் இலங்கையில் பிரபல பகுத்தறிவுவாதியாக திகழ்ந்தவருமான ஆபிரகாம் கோவூர் பைபிள் தொடர்பாக இதே கருத்தை தெரிவித்ததும், அதனை பாடசாலை மாணவருக்கு கற்பிப்பதை நிறுத்த வேண்டும் என்று குறிப்பிட்டதையும் எப்படி கவனிக்கத் தவறியிருக்க முடியும். இப்படியாக கூல் அவர்கள், சமூக விஞ்ஞானம் சார்ந்த துறைகளில் சாமாண்யரது தரத்தில் நின்றே அணுகுகிறார் என்பதற்கு இவரது கூற்றுக்களே நல்ல சான்றுகளாக அமைகின்றன. இவரது கருத்துக்களானவை, அறிவார்ந்த ஒரு சட்டகத்தில் அமைந்த வெறும் பொதுப்புத்தியே தவிர வேறொன்றும் இல்லை என்பதை காண முடிகிறது.
பெண்கள் கலையாடுவது குறித்தும், புராணத்தில் கூறப்படும் பாலியல் “மீறல்கள்” குறித்தும் இவரது புலம்பல்கள் அர்த்தமற்றவை. புராணங்களை வெறுமனே நேரடியான அர்த்தத்தில் வாசிக்கும் (Direct and Litrary Reading) ஒரு காலாவதியாகிப்போன ஒரு வாசிப்பு முறையின் வெளிப்பாடு இது. இன்று பின்நவீனத்துவம் போன்ற முறைமைகள் பிரதிகளின் பன்முக வாசிப்பை வேண்டி நிற்கின்றன. வரிகளுக்கு இடையிலும், ஏனைய பிரதிகளுடன் தொடர்புபடுத்தியும் வாசிக்கும் முறைமை விரிவாக பரவியிருக்கும் ஒரு காலகட்டத்தில் நேரடியாக வாசிப்பதன் மூலமாக, இன்னோர் மதப்பிரிவினரை கிண்டலடிப்பது இவரது புத்திஜீவித்தனத்தையே கேள்விக்குள்ளாக்க வல்லது. இங்கே நாம் சமூதாய முன்னேற்றத்திற்கு தடையாக உள்ள பிற்போக்கு அம்சங்களைக் களைய வேண்டும் என்ற அவாவை இவரிடம் காணவில்லை. மாறாக, சைவ பழமைவாதிகளது இடத்தில் அங்கிலிக்கன் பழமைவாதத்தை நிலைநிறுத்தும் முயற்சியையே இங்கு காண்கிறோம்.
தான் எழுதிய நூல் ‘பெண்கள் கற்கை நெறியில்’ (Women’s Studies) பயன்படுத்தப்படுவதாக கூறுகிறார். அதே நேரம் தற்பால் கவர்ச்சிக்கு எதிராகவும் போர்க்கொடி தூக்குகிறார். இப்போதெல்லாம், ‘தற்பால்கவர்ச்சி சம்பந்தமான கற்கையானது’ (Queer Studies), பெண்கள் கற்கை நெறியின் ஒரு கூறாகவே அமைந்துவிட்டது. இந்தவிதமான கருத்துக்களை மேற்கு நாடுகள் பக்கம் தலையே வைத்து படுக்காதவர்கள் கூறினால் நாம் அவர்களை அனுதாபத்தோடு நோக்கலாம். ஆனால் மேற்கு நாடுகளில் பலகாலம் வசித்த இவர், அந்த நாடுகளில் தற்பால் கவர்ச்சியனருக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளை நேரடியாக கண்டவர், அது தொடர்பான வாதப்பிரதிவாதங்களை அன்றாடம் செய்திப்பத்திரிகை வாயிலாகவே படிக்கும் வாய்ப்பைப் பெற்றவர், இப்படியாக தற்பால் கவர்ச்சிக்கு எதிரான வெறுப்பை வெளிப்படுத்துவது (Homophobia) என்பது இவரது கடைந்தெடுத்த பிற்போக்குத் தனத்தின் அடையாளவே தவிர வேறொன்றும் கிடையாது.
கிறீஸ்தவ மிசனரிமார்கள் தம்மைப்பற்றி பெருமைப்பட்டுக்கொள்ளும் இன்னொரு விடயம், அவர்கள் பெண் கல்விக்கு கொடுத்த முக்கியத்துவம் பற்றியதாகும். இலங்கையில் பெண்கல்வி என்பது முதன் முதலாக மிசனரி பாடசாலைகள் மூலமாகத்தான் அறிமுகமாகியது என்ற போதிலுங்கூட, இந்த உரிமை பாராட்டலுக்கு இவர்கள் முழுமையான தகுதி உடையவர்கள் அல்லர். ஏனெனில் ஐரோப்பாவிலேயே பெண்கல்வி பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலேயே அறிமுகமானது. அதுவரையில் கிறீஸ்த்தவர்களும் கூட பெண்கல்விக்கு எதிரானவர்களாகவெ இருந்து வந்தார்கள். அதிலும் மோசமானது என்னவென்றால், பதினாறாம், பதினேழாம் நூற்றாண்டுகளில் ஐரோப்பாவில் சுமார் ஒரு இலட்சம் பெண்கள் – சுதந்திரமாக செயற்பட்டவர்கள், நடப்பு ஒழுங்கமைப்பிற்கு சவால் விட்டவர்கள், அந்த காலத்தின் சமூகத்தின் அறிவாக கருதப்பட்ட மகற்போறு, கருத்தடை, பெண் நோயியல், மூலிகை மருத்துவம் போன்றவற்றில் தேர்ச்சி பெற்றிருந்தவர்கள் – சூனியக்காரிகள் என்ற பெயரில் கைது செய்யப்பட்டு, சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு, “விசாரிக்கப்பட்ட” பின்னர் தீக்கிரையாக்கப்பட்டார்கள் (Witch Hunting). இந்த விதமான நடவடிக்கைகளில் கிறீஸ்த்தவ மதபீடங்களும், அரசுகளும் இணைந்து செயற்பட்டன. இப்படியாக இரத்தக் கறைபடிந்த கரங்களுடன்தான் இந்த மிசனரிமார்கள் எமது நாடுகளை நோக்கி வந்து சேர்ந்தார்கள். இவர்களை கடந்த கால தவறுகள் எல்லாவற்றிற்குமாக பலிபோடுவதில் முறையில்லைதான். ஆனால், இவர்கள் தாம்தான் பெண்குலத்தில் விமோசகர்களாக எமது சமுதாயத்திற்கு வந்து சேர்ந்ததாக மார்தட்டும் போது, இந்த இருண்டு பக்கத்தை திரும்பிப் பார்ப்பது தவிர்க்க முடியாத்தாகிறது அல்லவா?
ஒட்டு மொத்தத்தில் பலரும் காட்ட விரும்புவது போல கூல் ஒன்றும் எமது சமுதாயத்தின் விடிவெள்ளி அல்ல. மாறாக நமது சமுதாயத்தின் ஆளும் குழுமங்களுள் ஒன்றான யாழ், அங்கிலிக்கன், வேளாள ஆணாதிக்க பிரிவை – மற்றயது யாழ் சைவ வேளாள, ஆணாதிக்க பிரிவாகும் – சேர்ந்தவர் என்பது தெளிவாகிறது. இவரை விமர்சனங்கள் இன்றி தூக்கிக் கொண்டாடும் போது, நாம் ஒரு ஆதிக்கப் பிரிவிற்குப் பதிலாக இன்னொரு ஆதிக்க பிரிவை ஆதரிப்பதாகவே அர்த்தப்படும். இது எந்தவகையிலும் நமது சமுதாயத்தின் விடிவிற்கு வழிவகுக்காது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
எனது அபிப்பிராயத்தில் இந்த தவறானது, கல்வி தொடர்பாக நாம் கொடுக்கும் அதீத அழுத்தத்துடன் தொடங்குவதாகவே எனக்குப்படுகிறது. கல்விதான் இன்று எமது சமூகத்தின் விடிவிற்கான ஒரேவழி என்றவகையில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த கருத்தை நாம் ஒரு தடவை கேள்விக்கு உள்ளாக்குவது அவசியமானது என்று கருதுகிறேன். கல்வியின் முக்கியத்துவத்திற்கு கொடுக்கும் அழுத்தமானது எந்த அடிப்படையில் எழுகிறது என்பதை நாம் ஒரு தடவை பரிசீலிப்போம். கல்வியானது எமது சமுதாயத்திற்கு ‘அறிவொளியூட்டும்’ (Enlightenment), அது எமது சமூக மேம்பாட்டிற்கு வழிவகுக்கும் என்று யாராவது கருதினால் அது அப்பட்டமான தவறு என்பதை முதலிலேயே குறித்துக் கொள்வது முக்கியமானது. கொலனித்துவ ஆட்சியாளர்கள் உருவாக்கிய கல்வியானது வெறுமனே அவர்களது நிர்வாகத்திற்கு சேவகம் செய்பவர்களை, அவர்களுக்கு விசுவாசமாக செயற்படுபவர்களை உருவாக்கும் நோக்கத்தில் அமைந்தது. இன்றுவரை இந்த கல்விமுறையானது, அடிப்படையான மாற்றங்கள் அதிகம் இன்றி அப்படியே தொடரப்படுகிறது. இப்போது இந்த கல்வியின் நோக்கமானது எழுதுவினைஞர்களுகளை உருவாக்குவது என்பதிலிருந்து சற்று முன்னேறி, தொழிற்துறை நிபுணர்களை (Technocrafts) உருவாக்குவதை நோக்கி நகர்ந்துள்ளது. இந்த கல்விமுறையானது எமது சமூகத்தை அறிவொளியூட்ட பயன்பட்டதாக யாராவது ஒருவர் வாதிக்கமுடியுமா? எத்தனை சமூக விஞ்ஞானிகளை இந்த கல்விமுறை தோற்றுவித்துள்ளது. எமது சமூகம் முகம் கொடுக்கும் கடுமையாக நெருக்கடிகளை தீர்வு காணவல்ல எத்தனை புத்திஜீவிகளை, அவர்களது அசலான படைப்புக்களை இந்த கல்விமுறை தோற்றுவித்துள்ளது. இதற்கான பதில் எதிர்மறையானதுதான் என்பது வாசகர்கள் அனைவருக்கும் நன்கு தெரிந்த உண்மையாகும். அப்படியானால் கல்வி பற்றிய இந்த அதீத அழுத்தத்தின் சமூக காரணிகள் என்ன என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாத்தாகிறது.
கடந்த காலத்தில் தமிழ் சமுதாயத்தில் தொழிற்துறை வளர்ச்சிக்கான வாய்ப்புக்கள் முற்றாக மறுக்கப்பட்டிருந்த நிலையில் ஒருவரது சமுக அசைவியக்கமானது அவரது கல்வியின் மூலமாக மட்டுமே சாத்தியமானதாக இருந்தது. உயர்கல்வி பெறுவதன் மூலமாக தமிழர் ஒருவர் நிபுணத்துவ துறையில் உயர் பதவியை அடைவதன் மூலமாக தனது சமுதாய அந்தஸ்த்தை உயர்த்திக் கொள்வது சாத்தியமானது. இப்படியாக சமூகரீதியாக தம்மை மேம்படுத்திக் கொண்டவர்கள் எமது சமுதாயத்தின் ஆளுங்குழுமத்தினுள் (Ruling Bloc) தம்மையும் இணைத்துக் கொள்வதில் வெற்றி பெற்றார்களே ஒழிய, இதற்கு மேலான வேறு குறிப்பிடத்தக்க எந்தவிதமான சமூக நன்மைகளையும் இந்த கல்வியானது ஏற்படுத்தவில்லை என்பது கவனிக்கத்தக்கது. தமிழ் சமூகத்தைப் பொறுத்தவரையில் இந்த கல்வியானது ஒருவித முதலீடு மட்டுமே. இப்போதும் கூட வறுமைக் கோட்டுடன் போராடிக் கொண்டிருக்கும் சராசரி நடுத்தர வர்க்க குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கல்வியே அவரது சமூக அசைவியக்கத்தின் அடிநாதமாக விளங்குகிறது. ஆதலால் எமது சமுதாயமானது கல்வியின் மேன்மையை மிகையாக வலியுறுத்துகிறது. இதுவே எமது பொதுப்புத்தியின் பிரதான கருத்தாகவும் அமைந்துவிட்டுள்ளது. ஆனால் அதனை அப்படியே ஏற்றுக்கொண்டு, அப்படியே கிளிப்பிள்ளை போல திரும்பத்திரும்ப ஒப்புவிப்பதானது எப்படிப்பட்ட சமுதாய மேம்பாட்டிற்கு வழிவகுக்கும் என்பதை நாம் கேள்விக்குள்ளாக்க வேண்டாமா?
இப்போதும் கூட பாடசாலைக் கல்வியே எட்டாத கனியாக இருக்கும் அடிநிலை மக்களது நலன்களுக்கும் இந்த கல்விக்கும் என்ன சம்பந்தம். தனிப்பட்ட நபரது சொந்த முன்னேற்றமே முதன்மையாக இருக்கும் இந்த கல்விமுறையை சமுதாய முக்கியமாக காட்டுவதன் பின்னாலுள்ள வர்க்க, சாதிய, பிரதேச நலன்கள் எவை என்ற கேள்வியை நாம் எழுப்பியாக வேண்டாமா? சமுதாயத்தின் முழு வாழ்க்கை முறையும் சிதைவடைந்து போயுள்ள நிலையில், கல்வியில் “நேர்மையானவர்களை” வைத்து அதிகம் சாதித்துவிடலாம் என்று குறிப்பிடுவது எப்படிப்பட்ட சித்தாந்தத்தை, அரசியலை வெளிப்படுத்துகிறது என்ற எம்மை நாமே ஆழமாக கேட்டுக்கொள்ள வேண்டாமா? இவற்றிற்கு சரியான விடையைக்காண நாம் தவறும் பட்சத்தில் இந்த முழு முயற்சியுமே தவறான அரசியலில் இருந்து தொடங்குவதாகவெ அர்த்தப்படும். அது எவ்வாறு நடந்தேறுகிறது என்பதை இப்போது பார்ப்போம்.
முதவாது அரசியல் தவறானது கல்விக்கு கொடுத்த அதீத முக்கியத்துவத்துடன் தொடங்குகிறது. இரண்டாவது தவறானது “நல்ல, நேர்மையான, நிர்வாக திறமைமிக்கவரை” யாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிப்பதன் மூலமாக சில முக்கியமான மாற்றங்களை கொண்டுவந்துவிடலாம் என்ற நம்பிக்கையில் இருக்கிறது. மூன்றாவது தவறானது மகிந்த ராஜபக்சவும், டக்லஸ் தேவானந்தாவும் ஒரு சரியான சக்தி யாழ் பல்கலைக் கழகத்திற்கு தலைமை கொடுப்தை, அதன் மூலமாக தமிழ் மக்களுக்கு சரியான கல்வி வழங்கப்படுவதை விரும்புவார்கள் என்ற நம்பிக்கையில் இருக்கிறது. அடுத்த தவறானது, இப்படிப்பட்ட பழம் விழுங்கி கொட்டைபோட்டவர்களுக்கு மத்தியில் எம்மில் சிலர் காய்களை திறமையாக நகர்த்துவதன் மூலாமாக, அவர்களையும் விஞ்சி நாம் எமது சமுதாயத்திற்கு நன்மை பயப்பவையாக கருதும் சிலவற்றை சாதித்துவிடலாம் என்ற எமது அசட்டுத்தனத்தில் அடங்கியிருக்கிறது.
சரி, இப்போது இந்த முயற்சியில் நாம் கொடுத்த விலை என்ன? என்ற கேள்விக்கு விடைகாண முயல்வோம். இனப்படுகொலை நடைபெற்று ஒரு வருடம் கூட ஆகாத நிலையில் நாம் மகிந்த அரசை பகைக்காமல்தான் இதனை சாதிக்க முடியம் என்ற எடுகோளுடன் காரியமாற்றத் தொடங்குகிறோம். அடுத்தாக டக்லசை மகிழ்விக்கும் நோக்கில் சில வஞ்சகப் புகழ்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அவர் ஆரம்பத்திலிருந்தே புலிகள் போலத்தான் தனது நிர்வாகத்தை நடந்திக் கொண்டிருப்பவர். புலிகளுக்கு சற்றும் குறையாத போர்க்குற்றங்களைப் புரிந்திருப்பவர். அவரை நல்லவர்: தமிழ் மக்களுக்கு சேவை செய்பவர் என்று பாராட்டுகிறோம். அடுத்ததாக மகிந்தாவை கூல் தம்பதியினர் சந்தித்து ஆசி வாங்கிக்கொண்டுதான் களத்தில் குதிக்கிறார்கள். டக்லசுடனான சந்திப்பு தொடர்கிறது. இந்த இடைக்காலத்தில் டக்லஸ் பற்றிய புகழ்பாடல், மகிந்தாவுக்கு எதிராக ஒக்ஸ்போர்ட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கண்டனம்: இப்படியாக ஒரு அரசியல் விபச்சாரமே கூலினால் செய்து முடிக்கப்பட்டுள்ளது. இப்போதுதான் இவர் டக்லசினது அடாவடித்தனங்களை கண்டு கொண்டது போல பாசாங்கு செய்யும் போது இவரிடம் இருப்பதாக கூறப்பட்ட “நேர்மை” என்பதும் கேள்விக்குரியாகிவிட்டது. கூல் இப்படியாக அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு தன்மானம் இன்றி பணிந்து போவது இதுதான் முதல் தடவை என்பதும் இல்லை. முன்பு 2006 இல் இதே பதவிக்காக புலிகளுடனும், டக்லசுடனும் இதேவிதமாக பேரம் பேசியவர் இவர்.
இப்போது ஒரு கேள்வி எழுகிறது. ஒருவேளை இவர் இந்த பதவியைப் பெறுவதில் வெற்றி பெற்றிருந்தாலுங்கூட, இப்படி அதிகாரத்தில் இருப்பவர்களால் பிச்சையாக போடப்பட்ட பதவியின் மூலமாக இவரால் நேர்மையாக பணியாற்றியிருக்க முடியுமா? அதிகாரத்தில் உள்ளவர்கள் வழங்கும் சிபாரிசுகளை மீறி இவரால் முக்கிய நியமனங்களை செய்திருக்க முடியுமா? முடியாது என்றால் அதுதானே ஊழலின் தொடக்க புள்ளியாக அமைகிறது. மேலும் இவர் தனது பதவியை தக்கவைப்பதற்காக அடுத்த ஐந்து வருடங்களில் எந்தளவிற்க இவர் இறங்கிப் போயிருக்க நேர்ந்திருக்கும் என்பதை எம்மால் கற்பனை செய்துபார்க்க முடியாதா? அடுத்ததாக சமூக அளவில் பலவிதமான பிற்போக்கு கருத்துக்களைக் கொண்ட இவரால் தமிழ் சமூகத்தை, அது இன்று முகம் கொடுக்கும் அடக்குமுறைகளை எதிர்கொள்ளும் விதத்தில் யாழ் பல்கலைக்கழக சமூகத்தை எவ்வளவு தூரம் இவரால் வழிநடத்தியிருக்க முடிந்திருக்கும் என்பது அடுத்த மிகவும் முக்கியமான கேள்வியாகும். இதில் மிகவும் சோகமான விடயம் என்னவென்றால், கூல் உட்பட பல தமிழ் புத்திஜீவிகளது கனவானது யாழ் பல்கலைக்கழசத்தை தாண்டிச் செல்ல முடியாமல் தவிப்பதுதான். கடந்த காலத்தில் ஐரோப்பாவில் மிக முக்கியமான தத்துவஞானிகளாக கருதப்பட்ட பலரும் தமது அறிவுத்துறை சுதந்திரத்தை பேணுவதற்காகவே பல்கலைக்கழக நியமணங்களை ஏற்க மறுத்தார்கள். இன்னும் சிலரோ, தமது கொள்கைக்காக தமக்கு நியாயமாக கிடைத்தாக வேண்டிய பதவிகளை இழக்க நேரிட்டது. இப்படிப்பட்ட துணிச்சலான புத்திஜீவிகளை நாம் பெறும்மட்டும் எமது சமூகத்தின் அறிவுத்துறை வளர்ச்சியானது அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு சேவை செய்வதாகவே தன்னை மட்டுப்படுத்திக் கொள்வது தவிர்க்க முடியாததாக அமைந்திருக்கும். இப்படிப்பட்ட ஒரு துணிச்சலை இந்த நிகழ்வுகளின் போது யாரிடமும் காணமுடியாமல் போனது எமது சமூகத்தின் அறிவுத்துறையின் கையாலாகாத்தனத்தின் வெளிப்பாடாகவே புரிந்து கொள்ளப்பட வேண்டும்.
இந்த முயற்சியில் ஈடுபட்ட பலரதும் அக்கறையை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் இந்த முயற்சியானது முன்னர் குறிப்பிட்டவாறு தவறான அரசியல் தொடங்கப்படுவதால் நாம் எதிர்பார்த்த நோக்கங்களை எட்ட முடியாமல் போனதுடன், இடைக்காலத்தில் இன்னும் பல அரசியல் தவறுகளை இளைப்பதிலும் போய்முடிகிறது. யாழ் பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்தை சீர்படுத்துவது – நீங்கள் குறிப்பிடும் அளவிற்கு முதன்மையான முக்கியத்துவம் வாய்ந்தத்தாக இல்லாவிட்டாலுங்கூட – ஒரு குறிப்பிட்ட அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த்துதான் என்பதை மறுக்க முடியாது. ஆனால் இந்த சீர்படுத்தலானது கீழிருந்து தொடங்கப்பட வேண்டியதொன்றாகும். மாணவர்களை அரசியல் சக்திகளின் எடுபிடியாக இருப்பதில் இருந்து விடுவிப்பதிலிருந்து இது தொடங்கப்பட வேண்டியதொன்றாகும். மாணவரை அறிவொளியூட்டி, அமைப்பாக்குவதுடன், அதற்கு துணையாக நாம் செயற்படுவதுடன் தொடங்கப்பட வேண்டியதாகும். இதற்கு மாறாக, இந்த நிலைமைக்கு காரணமானவர்களைக் கொண்டே, அவர்களது முதுகிற்கு பின்னாலேயே இதனை செய்து முடித்துவிடலாம் என்று கருதுவது எமது குட்டிமுதலாளிய கனவேயாகும். அத்துடன் இந்த விதமான சாகசவாதங்கள் தமிழ் மக்களது அரசியலை நீண்டகாலத்தில் பாதிக்கக்கூடியதாகும் என்பதால் ஒரு சமுதாயத்தில் அரசியலை விலையாகக் கொடுத்து இப்படிப்பட்ட சிறிய சீர்திருத்தங்களை செய்ய முனைவதை தவிர்பதே தமிழ் மக்களது நீண்டகால அரசியல் நலன்களுக்கு நல்லது.
“அவர்கள் வரும்போது அவர்களது கரங்களில் பைபிளும், எமது கரங்களில் நிலங்களும் இருந்தன. இப்போது எமது கரங்களில் பைபிலும், அவர்களது கரங்களில் நிலங்களும் இருக்கின்றன”, – கட்டுரைக்கு 50 புள்ளிகள் என்றால் கவிதைக்கு 100.
அவ்வளவு விசயம் செய்தவராக அளந்து கொட்டி விட்டு,அருகதை கிடையாது எனத் தீர்ப்பும் கொடுப்பது, பங்காளிப் பிணக்கில் கோள்மூட்டுவது மாதிரியுள்ளது.
கருத்தாளர் மீது பகிரங்கக் குற்றச்சாட்டு வாசிக்கும் நபர் தன்னை வெளிப்படுத்தி,ஆதாரங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
இனியொருவும் இதைக் கவனத்தில் எடுத்தால் நல்லது.
இரத்தின ஜீவனின் ஒர் சகோதரனின் பால்ய காலத்துநண்பன் என்ற வகையில் அவருக்கு ஆதரவு கொடுத்துள்ளேன். டொரன்டொவில் அவரையும் அவரது குடும்பத்தினரையும் சந்தித்தும் இருக்கிறேன்.
அவரது மதம் சார்ந்த கருத்துக்கள் பற்றிய கண்டனங்கள் மெல்ல வரும் பொழுது அது உண்மையா என்றும் சந்தேகப்பட்டேன். பின்னர் அவற்றை வாசித்த பொழுது அவை உண்மை என்றும் அவை அமெரிக்க இவாஞலிஸ்ட் போதகர்களால் இந்தியாவில் இந்துக்களுக்கெதிராக மேற் கொள்ளப்படும் பிரச்சாரங்களை ஒத்திருந்ததையும் கவனித்தேன்.
இவர் அமெரிக்காவில் அதிக காலம் வாழ்ந்தமையால் ஏற்பட்ட பாதிப்போ புரியவில்லை. தவிர இரத்தினஜீவனின் தந்தை பேரன் ஆகியவர்கள் பாதிரியார்கள் என்பது தெரிந்த விஷயம்.
யாழ்ப்பாணத்து அங்கிலிக்கன் சமயத்தவர்கள் தனியாக “தென்னிந்திய திருச்சபை” என்ற அமைப்பை நடாத்துகிறார்கள். கொழும்பிலுள்ள அங்கிலிக்கன் தலைமைப் பீடத்துடன் சம்பந்தம் இல்லாமல் தங்கழுக்கென்று தனியாக ஒரு “பிஷப்”பையும் வைத்திருக்கிறார்கள். ஆயினும் இவர்களது மத பீடத்தின் சர்வதேச தலைவர் பிரிட்டிஷ் மகாராணி எலிசபெத் என்பது குறிப்பிடத் தக்கது.
யாழில் புலிகள் இருந்த காலத்தில் இவரது தென்னிந்திய திருச்சபை புலிகளின் இளம்பரிதியை யாழ்ப்பணக் கல்லூரிக்கழைத்து உபசரித்துள்ள வரலாறும் உண்டு. புலிகள் எச்சரிக்கை எதுவும் இல்லாமல் கொல்வதுதான் வழக்கம். ஆனால் இரத்தின ஜீவன் கிறிஸ்தவன் என்பதனால் பல முறை எச்சரிக்கை விடப்பட்ட பின்னரே அவரை நாட்டை விட்டு வெளியேற வைத்தனர்.
யாழில் உள்ள பாடசாலைகளில் பெரும்பான்மை பாடசாலைகள் ஒரு காலத்தில் இந்த அங்கிலிக்கன் பிரிவினரின் கைகளில் இருந்ததும் அவை பண்டாரநாயக்காவினால் தேசிய மயமாக்கப்பட்டதும் வரலாறு. இந்த யாழ் அங்கிலிக்கன் பிரிவினர் தங்களை “உயர்சாதியாகவே” கருதிக் கொள்பவர்கள். எஸ்.ஜே.வீ.செல்வனாயகமும் இந்த பிரிவைச் சேர்ந்தவரே என்ற காரணத்தினால் அவரது அரசியலுக்குக் கண்ணை மூடிக்கொண்டு இந்த மதப் பிரிவினர் ஆதரவு கொடுத்துள்ளனர்.
யாழ் பலகலைக் கழகம் அமைக்கப்பட்ட பொழுது “எங்கடை ஜப்னா கொலிஜ்ஜை” சிங்களவன் பிடிச்சிட்டான் என்று ஆதங்கப்பட்டவர்கள். யாழ் பல்கலைக் கழகம் அமைவதையே எதிர்த்தவர்கள். இந்த எதிர்ப்பில் கூல் குடும்பமும் அடங்கும்.
பின்னர் யூ.என்.பி அரசு காலத்தில் அங்கிலிகன் ரனிலைப் பிடித்து யாழ்ப்பாணக் கல்லூரியை தங்கள் வசமாக்கியவர்கள்.
யாழ்ப்பாணத்துப் பெரும்பான்மை இந்துக்களுக்கெதிராக இவ்வளவு மோசமான கருத்துக்களை மனதில் வைத்துக் கொண்டு தானே எதிர்த்த ஒருநிறுவனத்தின் தலைவராக வருவதற்கு இரத்தின ஜீவன் எதற்காக முயல வேண்டும்?
ரகுமான் ஜானின் கருத்துக்களுடன் முரண்பாடுகள் இல்லை. ஆயினும் அவர் பல முன்னாள் புலிகளுடன் சுற்றிக் கொண்டிருந்த விஷயமும் எனக்குத் தெரியும். சேரன் காற்றடிக்கும் பக்கம் சாந்து கருத்து எழுதுவதில் வல்லமை பெற்ற ஆள். ஜானின் சினேகிதர்கள் பற்றி எனக்கு கடுமையான விமர்சனங்கள் உண்டு.
புலிகளினால் விரோதிக்கப்பட்ட ஒருநபர் என்ற வகையில் இரத்தின ஜீவனுக்கெதிராக (உண்மையாகவிருப்பினும்) கருத்துக்கள் எழுதுகிறாரா அல்லது விஞ்ஞான அறிவை முதன்மைப்படுத்தி பதவிக்கு விண்ணப்பிக்கும் இரத்தினஜீவன் அஞ்ஞானத்தை வாழ்வுநெறியாக வைத்து அமரிக்க பிரச்சாரங்களை முன்னெடுக்கிறாரா என்பதனையும் ஜான் தெளிவு படுத்த வேண்டும்!
செல்வநாயகம் அங்கிலிக்கன் இல்லை. எனினும் உயர்சாதி கிறிஸ்தவர்கள் என்று கருதப்படும் பிரிவையே சேர்ந்தவர்.
யாழ்பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டதை கூட்டணியினர் எதிர்த்தனர். அவர்களின் கோரிக்கை இந்துப்பல்கலைக்கழகமே ஒழிய தமிழ் பல்கலைக்கழகமல்ல. தென்னிந்தியத் திருச்சபைக்கும் அங்கிலிக்கன் சபைக்கும் வேறுபாடு உண்டு. அவை இரு வேறு சபைகள் முதலாவது அமெரிக்கப்பின்னணி கொண்டது. அடுத்தது இங்கிலாந்துப்பின்னணி கொண்டது.
தேசம்நெற் குழுமம் என்ன செய்கின்றார்கள் என்று ஜானுக்கு இவ்வளபு நாளும் இன்னும் தெரியாமல் இருப்பது பூனை கண்ணை மூடிக்கொண்டு பால் குடிச்ச மாதிரி. இப்ப வந்து ஏதோ விமர்சனம் என்று வெட்டிப் புடுங்கினா எல்லாம் சரியாகிடுமோ?
இது விமரிசனம் இல்ல கரிசனை புலி போனதுக்குப் பிறகு இப்ப வியாபாரம் படுத்துட்டுது அதனால இப்பிடி நடிச்சுத்துத்தான் பிழைக்க வெண்டி இருக்கு.
ரகுமான் ஜான்! உங்களுக்கு பிரச்சனை கூல்இன் கருத்துகள் அல்ல. அவரின் அரசியலை புலிகளுக்கு எதிரான நிலைப்பாட்டை பொறுக்க முடியாமல் தான் துள்ளி குதிக்கிறீர்கள். சிவசேகரமும் ஒரு பொறியியல் பேராசிரியர் தான். அவர் அது கடந்து எழுதுவது உங்கள் கண்களுக்கு தென்படவில்லையா?
எனக்கு ஒரே குழப்பமாக இருக்கு, ரூம் போட்டு யொசிப்பாங்களோ என்ன மாதிரி ஆளுகள குழப்ப, ரகுமான் ஜான் முஸ்லிமா க்ரிஸ்டியனா இல்லை புலியா, ஒரே குழப்பமா இருக்கு
அவர்கள் யாராக இருந்தாலும் காசு பார்க்கிறார்கள்.
புலிகள் உயிரோடிருந்த வேளை புலம்பெயா்ந்த மண்ணில் திலகா்,அன்ரன் பாலசிங்கம் என்ற பாமரா்களைத்தவிர எந்த புத்தி யீவிகளும் தமக்காக செயற்பட முன்வரவில்லை என்று புலிகள் புலம்பியதை கேட்கமுடிந்தது,ஆனால் புலிகள் அழிந்த பின்போ பல நூறு புத்தி யீவிகள் தம்மை வெளிக்காட்டத்துடிப்பதும் அதில் சிலா் தம்மை புலிகளின் சிந்தனை மையத்தை சார்ந்தவா்கள் போலவும் காட்டிக்கொள்ள முற்படுவதும் மிக மிக வேடிக்கை.
இவா் எதற்காக இதை எழுதினார் என்பது எனக்கு முக்கியம் இல்லை ஆனால் மிகவும் முற்போக்கான நவீன சிந்தனைகள் இதற்குள் நிரம்பியுள்ளன மிகவும் அருமையானவை.
நல்ல நகைச்சுவையாக இருக்கிறது!(கருத்துக்கள்)
இவர் என்ன சொல்ல வருகின்றார் என்று விளஙகவில்லை, புலி இருந்த போது முட்டாள்களை தவிர யாரும் அங்கே வாய் திறக்கவில்லை, ரட்ணஜீவன் கூல் இப்போது பயப்படாமல் த்னது கருத்தினை கூறுகின்றார், கனவு கானாமல் போனது புலிக்க் தவிர ரட்ணஜீவன் கூலுக்கு அல்ல
ஊா் சார்ந்து,மதம் சார்ந்து,சாதி சார்ந்து,இறுதியில் இயக்கம் சார்ந்து எதையும் நோக்குபவா்களால் பொது நியாயத்தை கண்டறிவதென்பதும் கடைப்பிடிப்பதென்பதும் சாத்தியமற்றது,மனிதம் சார்ந்து நடுநிலை வகிப்போரிடமே ஒரு சமூகத்தின் முன்னேற்றமும் எதிர்காலமும் தங்கியுள்ளது. துரதிஸ்டவசமாக அப்படிப்பட்டவா்கள் நம்மில் மிகக்குறைவு.
இங்கே ரட்ணஐீவனைக்காப்பாற்றுவதோ அல்லது இந்த ஆக்கத்திற்கு உரிய ஐான் என்பவருக்கு முண்டு கொடுப்பதோ எனது வேலை அல்ல நல்ல கருத்தை யார் சொன்னாலும் ஏற்றுக்கொள்வது எனது இயல்பு அவ்வளவுதான்.
குமார் நீங்கள் கூறுவது ஆழமான கருத்து. நான், எனது குடும்பம், எனது ஊர், சுற்றத்தார், எனது இயக்கம், எனது குழு என்று இப்படி ஒவ்வொன்றோடும் இருக்கும் பற்றுதலால் அவற்றை நியாயப்படுத்த ஒவ்வொரு தத்துவமும் எழுகிறது. அது தான் சமூகத்தை சீர்ழிக்கிறது. நியாயத்திற்காக இதற்கு எல்லாம் எதிராக பேசுபவர்கள் ஒரு சிலரே. இவரோடு பகைத்துக்கொண்டால் இது நடக்காது, அவரோடு நட்பு வைத்தால் அது நடக்கும் என்று இயக்கங்கள் வளர்த்துவிட்ட யாவாரிகள் ஏராளம்.
ஜீவன் கூல் கடந்த வருடம் யாழ்ப்பாணம் போகுமுன் யாழ் பல்கலைக்கழகத்தில் கலாச்சார சீரழிவு நிகழ்வதாக தேசம்நெட்டில் தொடர்ந்து செய்திகளும் புலனாய்வுக் கட்டுரைகளும் பல தொடர்ந்து வெளிவந்தன. அப்பவே அனைவருக்கும் ஊகிக்கக்கூடியதாக இருந்தது; ஜீவன் கூல் யாழ். பல்கலைக்கழக விசி பதவிக்கு வலைவீசத்தொடக்கி விட்டாரென்பதை.
ஜீவன் கூல் தேசத்தில் இவ்வாறு முதல் கோணலாய் தொடங்கிய விசிக்கனவு யாழ்ப்பாணத்தில் மிக அசிங்கமாக டக்கிளசின் காலடியில் போய்விழுந்தும் நிறைவேறாமல் முற்றும் கோணலாய் முடிந்தது.
மகிந்தவுக்கு லண்டனில் தமிழ் மக்கள் காட்டிய எதிர்ப்புக்கு எதிராக இலங்கையில் இங்கிலீசு ஊடகங்களுக்கு விழுந்துகட்டி எழுதிய ஜீவன் கூல் கடைசியில் கண்டதென்ன?
உண்மையில் கூலை கூழ் ஆக்கியதில் தேசம்நெட்டுக்கு அதிக பங்குண்டு.
கூலும்,தேசம்நெட்டும் ஆளையாள் தோழமை கொண்டு,பரஸ்பர சவாரி செய்து மகிந்தவிடம் தேசம்நெட் ‘சின்ன உதவி’யும், கூல் ‘சின்ன’ பதவியும் எடுத்துக் கொண்டார்கள்.
பரமார்த்த குரு,சீடர்களின் பகல் கனவு பலிக்கும் என அவர்களே நம்பினார்களோ தெரியவில்லை.
ஆனால் நீங்கள் ஏதோவெல்லாம் எழுதுகிறீர்கள்…….
Portuguese brought Catholism.
Dutch brought protestant Christianity.
Third invaders English and second invaders Dutch religion are the same or identical.
Therefore, English do not have the need to convert people.
When English came their first priority was capture Kandy Kingdom.
English did not convert people to their religion so they need a mechanism to spy island people.
The mechanism English found totally different from Portuguese and Dutch.
English did not use force to convert people to their religion.
English brought few missionaries scatted them all over island.
Missionary’s duty to find a local family who must be economically very poor, then not converted by Portuguese or Dutch.
English missionary ask poor family to live within a church.
Poor family adult (Father and Mother) cook and do house work for missionary.
Poor family children learn English and Englishman life style.
These children are given very high position in Ceylon government during British rule.
There are the special loyal spies for British rulers.
British Anglican Church and people associated with this church are children of former spy family.
What you can expect from them?
கட்டுரை சற்று நீண்டதாக அமைத்தது தவிர, அதன் உள்ளடக்கம் என்பது மிக நீண்ட நாளைக்குப் பின்னர் நல்ல கட்டுரை ஒன்றை வாசித்த நிறைவைத் தருகிறது. பல இடங்களில் முரண்பாடான பகுதிகளைக் காணக்கூடியதாக உள்ளது. குறிப்பாக ஆறுமுக நாவலர் சைவ சமயத்தை நவீனமயப்படுத்தியதாக் கூறுவது தவறு. யாழ்ப்பாணத்தில் இருந்த வழிபாட்டு முறையை நிலப்பிரபுத்துவத்திற்கு ஏற்றவாறு மிகவும் பிற்போக்கானதாக மாற்றி சாதி அமைப்பு முறையை காலனிய அதிகாரத்திற்கு ஏற்ப இறுக்கமாக அறிமுகப்படுத்தி வேளாள ஆதிக்கத்தைக் கொண்டு வந்ததும் அவரே. நாங்கள் அடக்கப்படுகிறோம் ஒன்று சேருங்கள் என்று கூறுகின்ற யாழ்ப்பாண வேளாள சிந்தனைக்கு கொஞ்சம் கூடக் குற்ற உணர்வு இல்லாமல் இப்படிக் கேட்கிறார்கள். இதற்கு ஆரம்ப கர்த்தா ஆறுமுக நாவலர்தான். நாம் கிறீஸ்தவ வெளாளரைப் பற்றிக் கூறும் போது இந்து அதிகார வெறியையும் சேர்த்தே பார்க்க வேண்டும். நீண்ட கட்டுரையில் அதனைக் கூறாமலிருப்பது கூரையற்ற வீடு போல் ஆகிவிட்டது.
கட்டுரைக்குத் தொடர்பில்லாதது: முதலில் புளட் அமைப்பைத் திருத்த வேண்டும் என்று நீங்கள் எண்ணிய அப்பாவித்தனத்தை பார்த்திருக்கிறேன். பின்னர் தீவிர தேசிய வாதிகளை நம்பியதையும் பார்த்திருக்கிறேன். இப்போது தேசம் நெறின் கருத்து என்ற என்று அப்பட்டமாகத் தெரிந்த போதும் அதனைப் பயன்படுத்தலாம் என்று எண்ணும் முட்டாள் தனத்தையும் பார்க்கிறேன்.
இனி ஒருவும் புலி வாலுகலின் கருத்தினை பிரதிபலிக்க்கின்றது, சரி பணம் இருக்கும் பக்க்கம் தானே உங்களின் நியாயமும் இருக்கும்
ரகுமான்ஜான் எழுத்துக்கள் வண்ணமாகத் தான் இருக்கிறது. வண்ணமான எழுத்துக்கள் மக்களை ஒரு மாயைக்குள்ளேயே கொண்டு செல்லும்.
புலிகளோடு டக்கிளஸ் தேவானந்தாவை ஒப்பிடும் ஜான் 19.05.2009 திகதிக்கு முதல் எங்கிருந்தார்? புலிகள் அழிபட்டு முடியட்டும் அதன்பிறகு தாம் அரசியல் செய்வோம் என்று காத்திருந்தாரா?.
இலங்கையில் நீண்டகாலம் புலம்பெயர்ந்த தமிழ்மக்களின் பணத்தில் நடத்தப்பட்ட உள்நாட்டு யுத்தத்தில் பலியாக்கப்பட்டவர்கள் அடக்கியொடுக்க பட்ட அப்பாவி தமிழ் மக்களே! வசதியுள்ளவன் பாதுகாப்பு கிடைக்குமென்று கொழும்புக்கு ஓடிவந்து விட்டான். இன்னும் வசதிகிடைத்தவர்கள் 360 பாகையில் விமானம் ஏறிவிட்டார்கள் ஒருவழிப் பாதையில். யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்ததில் மகிந்தாராஜா பக்சாவுக்கு எவ்வளவு பங்கிருக்கிறதோ அதேயளவு பங்கு டக்கிளஸ் தேவானந்தாவுக்கும் தமிழ்மக்கள் மத்தியுள் உண்டு.
ஊழல் லஞ்சம் முதாலித்துவ சமுதாயத்தின் குணாம்சங்களில் ஒன்று. இதுவெல்லாம் மகிந்தாவிடமோ டக்கிளஸ்யிடமோ இல்லையென்று யாரும் சொல்வார்களே யானால் அது முட்டாள்தனம். புலிகளுக்கு லஞ்சம் கொடுத்து தான் மகிந்தா புலிகளை தோற்கடித்தார் என்பது அவரின் சாணக்கியம். ஐக்கியதேசகட்சி ஆட்சியில் இருந்திருந்தால் புலிகளை ஒருபோதும் தோற்கடித்திருக்க முடியாது. இனப்பிரச்சனையை உருவாக்கி விட்டவர்களுக்கு வருமானம்-விளைச்சல் குறைவாக இருக்கும் என்பதே அதன் அர்த்தம். மீன் கிடைக்காத கொக்கு மாதிரி வாடிவதங்கி அலைவார்கள். இதற்கு நல்ல உதாரணம் சம்பந்தர் மாவை சுரேஸ் அடைக்கலம் வன்னித்தமிழன் சிறீதரன்.
ஒருசிலர் ரகுமான்ஜான் மாக்ஸியவாதி என்று சொல்லுகிறார்கள். அப்படியே இருந்துவிட்டு போகட்டும். மாக்ஸியம் முதலித்துவ அமைப்புமுறைக்கு எதிராகத்தான் போர்தொடுக்கிறது. எந்தவொரு தனிமனிதனுக்காகவும் அல்ல. மகிந்தாவையும் டக்கிளஸ்சையும் தோற்றகடிக்கப்பட வேண்டுமானால் முதாலிதுவத்திற்கெதிரான போராக இருக்கவேண்டும். முதாலித்துவத்தை தோற்கடிக்க வேண்டுமென்றால் இலங்கை தொழிலாளி வர்க்கத்தை ஸ்தாபனப்படுத்தினார்.. பாடுபட்டார் என்பதிலேயே தங்கியிருக்கிறது. இதை எமக்கும் சொன்னால் எமது பங்களிப்பையும் நாமும் வழங்குவோம். இல்லையேல்….. ரகுமான்ஜானும் ஒரு குறெளிவித்தைப் பேர்வழியே!.
புலியின் ஒரு உளவு அமைப்பாக: ஆள்காட்டி அமைப்பாக: ஆட்களை போட்டுத்தள்ள உதவும் அமைப்பாக: புலம்பெயர் நாடுகளில் மக்கள் விடுதலையை முன்னிறுத்திய ஒரு அரசியல் வந்து விடாது திசை திருப்பும் அமைப்பாக “தமிழீழக்கட்சி”யை புலிகளுடன் சேர்ந்து உருவாக்கியவர்தான் ரகுமான் ஜான்!
புலிக்கான இருத்தலுக்கும், தமிழ் மக்கள்மீதான புலியின் பாசிச ஆதிக்கத்துக்கும் “தமிழீழக்கட்சி “மூலம் உந்துதல் மற்றும் சித்தாந்த முண்டுகொடுத்த ரகுமான்ஜான் மார்க்சியத்தில் தேசியம் பற்றிய குறைபாடு உள்ளதாக தத்துவம் பேசி வந்தவர். மார்க்சியத்தில் பற்றாக் குறை உள்ளதாக கூறி திருத்தி முன்தள்ளிய கடந்தகால எதிர்ப்புரட்சி அரசியலை”தன்னியல்பு”வாதம் என்ற கோட்பாட்டுக்குள் மூடிக்கட்டி மார்க்சியத்தை மறுத்தும், திரித்தும் வந்தவர்தான் ரகுமான் ஜான்!
தற்போது புலிகளின் எதிர்ப்பாளர்களான ஹூல் குடும்பத்தவர் மீதான கசப்புணர்வில் இந்த கட்டுரையை எழுதியிருப்பது அவரது எழுத்தில் இருந்து புரிகிறது. தன் மீதான கடந்த கால விமர்சனகளுக்கு சரிவர பதில் சொல்ல மறுக்கும், சுய விமர்சனம் செய்ய மறுக்கும் ரகுமான் ஜான் தன் அரசியலோடு முரண்படுபவர்களை பற்றி பகிரங்கமாக விமர்சிக்க முயல்வது ஒரு தற்காப்பு நடவடிக்கையாகவே தோன்றுகிறது
இந்த கட்டுரையில் சிந்தனை தேடலை உருவாக்கக்கூடிய பலவிடயங்களை திரு.ர.ஜான் அவர்கள் தொட்டுச்சென்றிருக்கின்றார். அது அவரது ஆழ்ந்த வாசிப்பை வெளிப்படுத்துகின்றது. ஆறுமுகநாவலர் ஆகம வழிபாட்டுமுறையை தூக்கிப்பிடித்ததை சமயசீர்திருத்தமாக அன்றி மிகபிற்போக்கான சமஸ்கிரிதமயமாக்கல் என்றே புரிந்துகொள்ளப்படவேண்டும் என எண்ணுகின்றேன். சிறுதெய்வ வழிபாட்டில் இருந்த நெகிழ்ச்சித்தன்மையை ஒழித்து வர்ணாச்சிரமதர்மத்தை தூக்கிநிறுத்தியது இது. இன்றும் ஆறுமுகநாவலரின் வாழ்க்கை வரலாற்றை எழுதுபவர்கள் “சைவமும் தமிழும் ஒருகொடியில் பூத்த இருமலர்களாக நறுமணம் வீசும் யாழ்ப்பாணத்தில் சைவவேளாள உயர்குடியில் அவர் பிறந்தார்” என்றே குறிப்பிடுவர். மட்டுநகர் சிறுவிவசாயிகளின் சிறுதெய்வ தாந்திரிக வழிபாட்டுமுறை அவர்களது சாதியநெகிழ்வுத்தன்மைக்கு மட்டுமன்றி அவர்கள் வாழ்வியலில் காணப்படுகின்ற மானிட இயல்பு வாழ்விற்கும் காரணமாக இருக்கின்றது என்பது என் துணிபு. மாறாக ஆ.மு.நா வும் அவர்சார் வெள்ளாள நிலப்பிரபுத்துவமும் யாழில் நிலைநிறுத்திய ஆகமவழிபாடு,சிந்தனைமுறை அடுத்தநூறு ஆண்டுகளுக்கு நிலப்பிரபுத்துவ உற்பத்திமுறையை, சாதிய உறவுகளை பாதுகாக்க் பயன்பட்டது என்பது மிகையல்ல. இன்றும் யாழ்ப்பாணத்தில் ஒடுக்கப்பட்ட சாதியினருக்குள் உள்ள முன்னேறிய பிரிவினர் தம்மை பிராமணராக கற்பிதம் செய்து ஆகமமுறையில் தமது கோவில்களில் திருவிழாக்கள் எடுக்கும் அபத்தத்தையும் பார்க்கின்றோம். சுண்டுக்குழி நல்லூர்பகுதிகளில் செறிவாகவாழுகின்ற அங்கிலிக்கன் வெள்ளாள ஆதிக்கசாதியின் குரல்தான் கூல் குடும்பத்தினது என கட்டுரையாளர் சரியாகவே கணித்திருக்கின்றார். கிறிஸ்தவத்திலிருந்துதான் மனிதநாகரிகம் ஆரம்பித்ததுஎன சாதிக்கமுனைகின்ற கிறிஸ்தவ மத அடிப்படைவாத, மிஷனரிகளின் கற்பித்தல்தான் கூல் குடும்பத்து அரசியலின், சமூகபார்வையின் அடிப்படை என்பதில் மாற்றுக்கருத்தில்லை. இந்த அங்கிலிக்கன் ஆதிக்கவெள்ளாளர்கள் யாழ்ப்பாணத்தில் தவறிப்பிறந்த அமெரிக்கர்களாகவே தம்மை வெளிப்படுத்துவர். அவர்களது ஏகதிபத்திய சார்பு அமெரிக்க ராஜங்க திணைக்களத்தினால் அடிப்படைவாத மிஷனரிகளுக்கு வருடாவருடம் வழங்கப்பட்டுவரும் பல மில்லியன் டொலர்களை கவனிக்கும்போது ஆச்சரியபடத்தக்கதொன்றல்ல. மேலும் கிறீஸ்தவமிஷனரிகள் உருவாக்கிய கல்விக்கூடங்களும். பணப்பயிர்செய்கையும், ந்கரமயமாக்கலும் சாதிய உறவுகளில் நெகிழ்வுத்தன்மையை உருவாக்கியிருந்தாலும்கூட கத்தோலிக்க கிறீஸ்தவமும் எவ்வாறு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கானலாக மாறியதென்பதனை கே.டானியல் தனது “கானல்” நாவலில் உண்மைசம்பவங்களின் மூலம் விபரித்துப்போகின்றார். இன்றும் கேரளாவில் பல கத்தோலிக்க தேவாலயங்களில் ஒடுக்கப்பட்ட சாதியைசேர்ந்த கிறீஸ்தவர்களையும், எனையோரையும் தடுப்புச்சுவர் எழுப்பி பிரித்துவைத்தே ஆராதனைகள் இடம்பெறுவதாக அறிகின்றேன். இந்த கட்டுரை வரைந்த ர.ஜானுக்கு நன்றி. அதே வேளை இரண்டு கேள்விகள். 1. அவதூறு,கிசுகிசு என்பவற்றை விமர்சனம் என்றபெயரில் ஊக்குவித்து, அரசியல்விவாதங்களையே சிதறடிக்கும் நோக்குடன் நடாத்தப்படுகின்ற “தேசம்” இணையத்தில் நீங்களும் கட்டுரை எழுதி கிச்சு கிச்சு மூட்டியதன் காரணமென்ன? 2. புளட் வெள்ளாள இயக்கம் என்பதற்காகவே புளட்டில் சேர்ந்து உங்களுடன் தீப்பொறிவரை வந்த சாதியதிமிர்கொண்ட பிற்போக்குசக்திகளை எப்போது இனம் கண்டீர்கள்.
கூடுவிட்டு கூடுபாய்ந்து…. உங்களுக்கும் கிச்சு கிச்சு மூட்டி எங்களுக்கும் கிச்சு கிச்சு மூட்டி… “Aalavantha” ஆளவந்த ரகுமான் ஜான் .
கட்டுரையின் கீழ் அவதூறு பபப்பும் விசமி ஒருவரின் பின்னூட்டம் தவறுதலாகப் பதியப்பட்டதற்கு மன்னிப்புக் கோருகிறோம். அதனைச் சுட்டிக்காட்டிய நெருஞ்சிக்கு நன்றி.