நேற்று பகல் 12-30 மணியளவில் நடிகர் ரஜினி ஒரு காரில் சென்னை காவேரி மருத்துவமனைக்கு வந்தார். காரை விட்டு இறங்கி அவரே மருத்துவமனைக்கு நடந்து சென்றார். இந்த செய்தி நேற்று இரவுதான் ஊடகங்களில் வெளியானது.
ரஜினிக்கு உடல் நலக்குறைவுகள் எதுவும் இல்லை வழக்கமான உடற்பரிசோதனைதான் என்று அவரது மனைவி லதா உள்ளிட்ட உறவினர்கள் சொன்னாலும் சில உடல் நலக்கோளாறு காரணமாக அவருக்கு திவீர சிகிச்சைப் பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. கவலைப்படும் படியாக எதுவும் இல்லை என்ற போதிலும் அவருக்கு இருதயம் திசுக்கள் தொடர்பான சிகிச்சை அளிக்கப்படுவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான அண்ணாத்த படத்தில் இறுதிக்கட்ட வேலைகளை முடித்துக் கொடுத்த ரஜினி இரு நாட்களுக்கு முன்னர் தன் பேரப்பிள்ளைகளுடன் அண்ணாத்த படத்தைப் பார்த்தார். அவருக்கு மத்திய அரசு வழங்கிய பால்கே விருதையும் பெற்றுக் கொண்டார். இந்நிலையில்தான் அவருக்கு நேற்று காய்ச்சல் ஏற்பட்ட உடன் மருத்துவ பரிசோதனைக்காக அவரே காவேரி மருத்துவமனைக்கு வந்தார்.
ரஜினி ஏற்கனவே சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர் அவருக்கு ரத்த நாள திசு அழிவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதை சரி செய்யும் முயற்சியில் மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளார்கள்.
அவரை சந்திக்க மாநில சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்ற போதும் அவரது உறவினர்கள் ரஜினி உடல் நலத்துடன் இருப்பதாகக் கூறினார்கள். அவரது சிகிச்சைக்கு தேவைப்படும் உதவிகளை அரசு செய்யத் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார்.