15.11.2008.
யுத்த வெற்றி குறித்து அரசு தரப்பு அடிக்கடி பிரஸ்தாபித்து வருகின்றது. ஆனால் விடுதலைப்புலிகள் பின்னடைவு கண்டதற்கான சாதகமான போக்கு காணப்படவே இல்லை. அரச ஊடகங்கள் மட்டும்தான் இதனைக் கூறுகின்றன. தனியார் ஊடகங்களை அரசு எச்சரித்து வாய்களுக்கு கட்டுப்போட்டுள்ளது. பாதுகாப்புத் தரப்புச் செய்தி மட்டுமே தெரிவிக்கப்படுகின்றன. மற்றப் பக்கச் செய்திகளுக்கு வாய்ப்பூட்டு போடப்பட்டுள்ளது.
விடுதலைப்புலிகள் பலவீனப்பட்டதாகக் கூறுவதில் உண்மை இருப்பதாக கருத முடியாது. இடையிடையே அவர்களின் விமானத்தாக்குதல்கள் தெற்கில் இடம்பெறுகின்றன. இதன் மூலம் புலிகளின் பலம் குன்றவில்லை என்பது உறுதியாகின்றது.
இராணுவம் கூறுவது போன்று புலிகளின் இலக்குகள் தாக்கப்பட்டதற்கான சான்றுகளைக் காணமுடியவில்லை. அன்று இந்திய அமைதிப்படை வந்தபோது புலிகள் கைவிட்டுச் சென்ற பகுதிகளையே படையினர் தம்வசப்படுத்தியுள்ளனர். இதுபோன்று இதற்கு முன்னரும் பல தடவைகள் இடம்பெற்றுள்ளன. 30 வருடங்களாக யுத்தம் தொடர்கிறது. இன்றுவரையில் தமிழ் மக்களுக்கு நியாயமான அரசியல் தீர்வை பெற்றுக்கொடுக்க முடியவில்லை.
கடந்த வியாழக்கிழமை கொழும்பில் நடத்திய பாதுகாப்பு கண்காணிப்பக செய்தியாளர் மாநாட்டிலேயே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவு பிரதான அமைப்பாளரும் பாதுகாப்புக் கண்காணிப்புத் தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர மேற்கண்டவாறு தெரிவித்தார்.
புலிகளின் பயங்கரவாதம் ஒழிக்கப்படவேண்டுமானால் தமிழ் மக்களுக்கு நியாயமான அரசியல் தீர்வு முன்வைக்கப்பட வேண்டும். நியாயமான தீர்வு கிட்டுமானால் புலிகளின் போராட்டமும் முடிவுக்கு வந்துவிடும்.
யுத்தம் இன்று பிரபாகரனுக்கு மட்டுமல்ல, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கும் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கும் யுத்தம் தொடர வேண்டுமென்ற நிலை உருவாகியுள்ளது. அப்போதுதான் அவர்களால் பதவியில் நீடிக்க முடியும். தேர்தல் நெருங்குவதால் யுத்த மாயை மகிந்த ராஜபக்ஷவுக்கு மிகவும் தேவையானதொன்றாகியுள்ளது.
மகிந்த ராஜபக்ஷ எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது அவரை நாம் மாயாரத்ன என்றழைப்போம். இன்று அந்தப் பெயர் அவருக்குப் பொருத்தமானதென்பது உறுதியாகியுள்ளது.
மகிந்த ராஜபக்ஷவுக்கு இனவாதம் இன்று தேசிய கொள்கையாகிவிட்டது. ராஜபக்ஷவுடன் இருக்கும் சம்பிக்க ரணவக்கவும் ஹெல உறுமயவும் கட்டவிழ்த்துவிட்டுள்ள இனவாதம் காரணமாக கூடிய விரைவில் முஸ்லிம்களும் ஆயுதமேந்திப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்த நிலை மேலும் தொடருமானால் விரைவில் இன்னொரு பயங்கரவாதக்குழுவைச் சந்திக்கும் ஒரு அவல நிலைக்கு நாடு தள்ளப்பட்டுவிடும்.
இன்று நாம் மேற்கொள்ளவேண்டிய போராட்டம் இனவாதத்துக்கு எதிரானதொன்றாகும். இனவாதத்துக்கு எதிரான ஜனநாயக சக்திகள் இதற்காக ஓரணியில் திரளவேண்டும் என்று மங்கள சமரவீர அழைப்பு விடுத்தார்.