11.03.2009.
யுத்த வலயங்களிலிருந்து இடபெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களில் உள்ள மக்கள் சுதந்திரமாக இடம்பெயர அனுமதி அளிக்கப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகளின் அவசர நிவாரண இணைப்பாளர் ஜோன் ஹோம்ஸ் தெரிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாடு ஒன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
நாள்தோறும் அதிக எண்ணிக்கையிலான மக்கள் கொல்லப்படுவதாகவும், எனினும் இந்தத் தகவல்கள் உறுதிப்படுத்தப்படுவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
யுத்தத்தினால் இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள் சுதந்திரமாக இடம்பெயர அனுமதி அளிக்கப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
இடைத்தங்கல் முகாம்களின் நிலைமை குறித்து தீவிரமாக ஆராயப்பட்டதன் பின்னரே ஐக்கிய நாடுகள் அமைப்பு தொடர்ச்சியாக நீண்ட கால உதவிகளை வழங்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதே வேளை வன்னியில் இடம்பெற்று வரும் உக்கிர மோதல்களில் பொது மக்கள் உயிரிழப்புக்கள் குறித்து உன்னிப்பாக அவதானித்து வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இடம்பெற்று வரும் மனித பேரவலம் குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பு கூர்ந்து கவனித்து வருவதாகவும் பொதுச் செயலாளர் பான் கீ மூனின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் இவ்வாறான இழப்புக்களுக்கு வழியமைக்காது உடனடியாக இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஆயுதங்களைக் களையுமாறும், மோதல் பிரதேசங்களிலிருந்து மக்கள் வெளியேற உதவுமாறும் அவர் விடுதலைப் புலிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.