01.01.2009.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் யுத்த முனைகளில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டும் 11,500க்கும் மேற்பட்ட படையினர் காயமடைந்துமுள்ளதாக பாதுகாப்பு கண்காணிப்பகத்தின் பேச்சாளரும் எம்.பி.யுமான மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைகளுக்கான தேர்தல் பெப்ரவரி மாதம் 7 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் அந்தத் திகதிக்குள் விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனை கைதுசெய்வோமென அமைச்சர் ஹெலிய ரம்புக்வெல கூறியதன் மூலம் இந்த யுத்தத்துடன் அவர் அரசியல் விளையாடுவதாகவும் மங்கள சமரவீர சாடியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்;
இந்த அரசாங்கம் முறையான விதத்தில் போர் செய்யாததால் மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் 3000 க்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டும் 11,500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்து ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புலிகள் தலைவர் பிரபாரகனை பெப்ரவரி மாதம் 7 ஆம் திகதிக்குள் கைது செய்யப்படுவாரென அமைச்சர் ரம்புக்வெல திங்கட்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டமொன்றில் கூறியுள்ளார். அன்றைய தினமே மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைத் தேர்தல்கள் நடைபெறவுள்ளது.
வேட்பு மனுத்தாக்கல் செய்யப்பட்டு முடிந்ததும் தேர்தல்கள் ஆணையாளரே தேர்தலுக்கான திகதியை தீர்மானிப்பார். அப்படியிருக்கையில் தேர்தல் 7 ஆம் திகதி நடைபெறுமென இவரால் எப்படிக்கூற முடியும்?
கிளிநொச்சியை கைப்பற்றுவதுடன் புலிகளின் தலைவரையும் கைது செய்வோமென இந்த அரசாங்கம் கூறிவந்த போதும் இது வரை அவர்களால் எதுவுமே செய்ய முடியவில்லை.
தேர்தலில் வெற்றிபெறுவதற்கான அரசின் ஒரே கோஷம் யுத்தம்தான் எனினும் நாட்டு மக்கள் தற்போதைய யுத்தம் குறித்து நன்கு அறிந்துள்ளனர். யுத்தத்தில் ஏற்படும் இழப்புகள் குறித்த விபரங்களை வேறு எவரையும் விட அப்பாவிக் கிராம மக்கள் நன்கு அறிந்துள்ளதுடன் அவர்கள் தான் பெருமளவு சடலங்களையும் பெற்றுவருவதாகவும் தெரிவித்துள்ளார்.