யுத்தப் பிரதேசங்களில் பணியாற்றிய மருத்துவர்கள் குறைந்தது ஒரு வருடத்திற்காவது தடுத்துவைக்கப்பட்டு விசாரிக்கப்படுவர் என்றும் அதன் பின்னரே வழக்கு பற்றித் தீர்மானிக்கப்படும் என்றும் சிறீ லங்கா அரசு கூறுகிறது.
விடுதலைப் புலிகளுடன் இணைந்து செயல்பட்டார்கள் என்ற சந்தேகம் காரணமாக அவர்கள் குற்றப் புலனாய்வுத் துறையினரால் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என்று இலங்கை மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
ஒரு வருடம் அல்லது அதற்கு மேற்பட்ட காலம் அவர்கள் தடுத்துவைக்கப்பட்டிருப்பார்கள் என்றும், அதன் பின்னர் அவர்கள் மீது வழக்கு நடக்கும் என்றும், ஆனாலும் இடைப்பட்ட காலத்தில் மாதம் ஒருமுறை அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுவருவார்கள் என்றும் இலங்கை அரசாங்க தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இம்மருத்துவர்களை விடுதலை செய்யக் கோரி செஞ்சிலுவைச் சங்கம், சர்வதேச மருத்துவர் சங்கம் ஆகியன முன்னதாகக் இலங்கை அரசாங்கத்திற்கு வேண்டுகோள்களை அனுப்பியிருந்தன.