1990 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் புலிகள் இயக்கத்தின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் முடங்கிப் போனது. இந்திய இராணுவம் முழுமையாக வெளியேறியிருந்தது. வடக்கிலும் கிழக்கிலுமிருந்த தமிழர்கள் இந்திய இராணுவத்தை வெளியேற்ற தமக்கு இயலுமான வழிகளில் போராடினார்கள். இந்திய ஆக்கிரமிப்பு இராணுவமும் அவற்றின் துணைப்படைகளும் வெளியேறிய பின்னர் போராட்டத்தின் திசைவழி தொடர்பான புதிய உரையாடல்கள் செயற்பாடுகள் எல்லாம் முன்னெழுந்தன. இலங்கை அரசிற்கு எதிரான ஆயுதமேந்திய மக்கள் யுத்தம் ஒன்றைத் தயார்செய்ய வேண்டும் எனவும் அழிவுகளிலிருந்து மீள அதுவே ஒரெ வழியென்றும் பலர் குரலெழுப்பினார்கள்.
புலிகள் அதனை மறுத்தபோது இலங்கை அரசிற்கு எதிராகப் போராடும் உரிமையைக் கோரி புலிகளோடு போராட வேண்டிய அவலம் ஏற்பட்டது. அந்தப் போராட்டம் புலிகளால் மூர்க்கத்தனமாக ஒடுக்கப்பட்டது,
பலர் கடத்தப்பட்டனர். பல சமூகச் செயற்பாட்டாளர்கள் தேடித்தேடி அழிக்கப்பட்டனர்.
முள்ளிவாய்க்காலில் பாசிஸ்ட் மகிந்த ராஜபக்சவின் இனக்கொலை இராணுவத்தால் சாரிசாரியாக மக்கள் படுகொலை செய்யப்பட்ட போது யாழ்ப்பாணத்திலோ கிழக்கிலோ சிறிய எதிர்ப்புப் போராட்டங்கள் கூட நடைபெறவில்லை. கஷ்மீரில் இராணுவத்தின் இரும்புக் காலடியிலிருந்து மக்கள் போராடும் போது வடக்கிலும் கிழக்கிலும் மயான அமைதி நிலவிற்று.
கோரமான இந்த அமைதியின் அத்திவாரம் 90 களின் ஆரம்பத்திலேயே அமைக்கப்பட்டுவிட்டது. சன சமூக நிலையங்களிலிருந்து, சிறிய வெகுஜன அமைப்புக்கள் ஈறாக அரசியல் இயக்கங்கள் வரை புலிகளால் தடைசெய்யப்பட்டன. ஆக. ஒன்றிற்கு மேற்பட்டவர்கள் இணைந்து பேசிக்கொள்வதே சாத்திமற்றதாகியது.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடைபெற்ற நாளிலிருந்து இன்று வரைக்கும் அணித்திரட்சியற்ற உதிரிகளான மக்களை இராணுவம் கொன்று குவிக்கிறது. 90 களின் முன்னர் இருந்த இயல்பான எந்த அமைப்புக்களும் இன்று இல்லை. அவற்றை மீளப்புச்செய்வதை இராணுவம் பயங்கரவாதம் என்கிறது. அந்த அமைப்புக்களை அதிகார வர்க்கத்தின் தொங்குதசைகள் நிரப்பிக்கொண்டன.
90 களில் ஆரம்பமான வெகுஜன அமைப்புக்களைத் தடைசெய்யும் நடைமுறை பெரும் அழிவை ஏற்படுவதற்கான முன்னறிவிப்பு எனப் பலர் எச்சரித்தார்கள். அவர்கள் அனைவரும் இல்லாமல் ஆக்கப்பட்டார்கள்.
இந்தச் சூழலில் விரக்திக்கு உள்ளான சிவரமணி, மக்களுக்காகப் போராட இயலாவிட்டால் உயிரை மாய்த்துக்கொள்வதே மேல் என தன்னைத்தானே அழித்துக்கொண்டார்.
மே மாதம் 19ம் ஆம் திகதி 1991 ஆம் ஆண்டு சிவரமணி தற்கொலை செய்துகொண்டார்.
இவர் தற்கொலைசெய்துகொண்ட சில காலங்களின் பின்னர் சிவரமணியின் நண்பரும் கவிஞருமான செல்வி புலிகளால் கடத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.
இலங்கை அரசிற்கு எதிராகப் போராடும் உரிமைகோரி மடிந்துபோன சிவரமணியையும் செல்வியையும் இலங்கை அரசின் ஒட்டுண்ணிகள் தமது அதிகாரவர்க்க அரசியலுக்காகப் பயன்படுத்திக்கொள்கின்றன. இப்புலியெதிர்ப்புக் கும்பல்கள் சிவரமணியைப் பலதடைவை கொலைசெய்துவிட்டன.
புலி ஆதரவு தேசிய வியாபாரிகளின் கொள்ளைக் கூட்டங்கள் மனித இரத்தத்தில் மூழ்கி எழுந்து மக்கள் நடக்க ஆரம்பிக்கும் வேளையிலும் நடந்தவை எல்லாம் நல்லவையே என இந்துத்துவ தத்துவம் பேசுகின்றன.
சிவரமணியின் ‘யுத்தகால இரவொன்றின் நெருக்குதல்’:
யுத்தகால இரவொன்றின் நெருக்குதல்:சிவரமணி
எங்கள் குழந்தைகளை
வளந்தவர்களாக்கி விடும்.
முகமற்ற மனித உடலும்
உயிர் நிறைந்த
அவர்களின் சிரிப்பின் மீதாய்
உடைந்து விழும் மதிற் சுவர்களும்
காரணமாய்
எங்களுடைய சிறுவர்கள்
சிறுவர்களாயில்லாது போயினர்.
நட்சத்திரம் நிறைந்த இரவில்
அதன் அமைதியை உடைத்து வெடித்த
ஒரு தனித்த துப்பாக்கி சன்னத்தின் ஓசை
எல்லாக் குழந்தைகளினதும் அர்த்தத்தை
இல்லாதொழித்தது.
எஞ்சிய சிறிய பகலிலோ
ஊமன்கொட்டையில் தேர் செய்வதையும்
கிளித்தட்டு மறிப்பதையும்
அவர்கள் மறந்து போயினர்.
அதன் பின்னர்
படலையை நேரத்துடன் சாத்திக்கொள்ளவும்
நாயின் வித்தியாசமான குரைப்பை இனம் காணவும்
கேள்வி கேட்காதிருக்கவும்
கேட்ட கேள்விக்கு விடை இல்லாதபோது
மௌனமாயிருக்கவும்,
மந்தைகள் போல எல்லாவற்றையும்
பழகிக் கொண்டனர்.
தும்பியின் இறக்கையை பிய்த்து எறிவதும்
தடியையும் பொல்லையும் துப்பாக்கியாக்கி
எதிரியாய் நினைத்த நண்பனைக் கொல்வதும்
எமது சிறுவரின் விளையாட்டானது.
யுத்தகால இரவுகளின் நெருக்குதலில்
எங்கள் குழந்தைகள்
“வளர்ந்தவர்கள்” ஆயினர்.
-சிவரமணி-
——————————————–
சிவரமணிக்கு…:அஜித் சி. ஹேரத்
உன்னிடமொன்றைச் சொல்லும்
தேவை எனக்கிருக்கிறது
எனினும் நான் வாய் திறக்கும்வரை
பார்த்திருந்த அவர்கள் எனது நாவைச் சிதைத்தனர்
உன்னைப் பார்க்கவென
நான் விழிகளைத் திறக்கையில் அவர்கள்
அவற்றைப் பிடுங்கி எறிந்தனர்
அச்சமானது தாய்த் தேசத்தைச் சூழ்கையில்
உனை நான் இதயத்தில் உருவகித்தபடி
போய்க் கொண்டிருந்தேன்
எனைப் பிடித்துக் கொண்ட அவர்கள்
இதயத்தைத் துண்டம் துண்டமாகச் சிதைத்து
உனை என்னிடமிருந்து பறித்துக் கொண்டனர்
அந்தகாரத்துக்குள் பிறந்த நான்
அந்தகாரத்துக்குள் பிறந்த நீ
ஒருவரையொருவர் அறிந்துகொள்வோமென்று ஐயமுற்ற அவர்கள்
இறுதித் தாரகையையும் தூள்தூளாக்கினர்
நிரந்தரமான இருளுக்குள்ளேயே
எங்களைப் பிரித்துக் கொன்றுபோட்டனர்
இப்பொழுது பிணங்கள்
கரையொதுங்குகையில்
நீயும் நானும்
தற்கொலை செய்துகொண்டதாக அறிவிப்பார்கள்
நீ வடக்கிலும், நான் தெற்கிலும்
இன்னும் நிரப்பப்படாத
பொதுக் கல்லறைகள் இரண்டினுள்ளே
வெவ்வேறாக படுத்திருப்போம்
இக் குளிர்ந்த நிலக் கருவறைக்குள்ளே இடைவெளியானது
பிணங்களாலும் இருளினாலும் நிறைந்திருக்கிறது
சிவரமணி, அன்பிற்குரிய சகோதரி
வடக்கிலும் தெற்கிலும்
புதைக்கப்பட்ட அனேகரோடும்
இன்னும் நிறைய நாட்கள்
இங்கு நாங்கள் அமைதியாகச் சாய்ந்திருப்போம்
சகோதர விழிகளிலிருந்து உதிரும்
உஷ்ணக் கண்ணீர்த் துளியொன்று வந்து
எமது குளிர்ந்த நெற்றியை மெதுவாக முத்தமிட்டு
இம் மரணத்தின் தொடர்ச்சி
இத்தோடு முடிந்துவிட்டதென உத்தரவாதமளித்து
எம்மை மீண்டும்
வாழ்க்கையை நோக்கி அழைக்கும்வரை
நாமிங்கு அமைதியாகச் சாய்ந்திருப்போம்
ஏனெனில் மரணத்துக்கு முன்னர்
நீ இவ்வாறு எழுதியிருக்கிறாய்
“ஆனால்
நான் வாழ்ந்தேன்
வாழ்நாளெல்லாம் நானாக
இருள் நிறைந்த
பயங்கரங்களின் ஊடாக
நான் வாழ்ந்தேன்
இன்னும் வாழ்கிறேன்.”
– அஜித் சி. ஹேரத்
தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை
(ஈழத்துப் பெண் கவிஞர் சிவரமணி தனது 23 ஆம் வயதில் தற்கொலை செயதுகொண்டார்.)
லங்காசிறி அதிர்வு தமிழ் சி.என் தமிழ் வின் போன்ற கடைந்தெடுத்த விடுதலையை பணம் பெறும் வியாபாரமாக்கி தமிழ்சமூகத்தை மலடாக்கி வைத்துள்ள இந்த இணையங்களில் மூழ்கியுள்ள சமூகத்திற்கு செல்வியை புரியுமா சிவரமணியைத்தான் புரியுமா?