இசைப்பிரியா என்ற போர்க்காலக் கலைஞரை இனப்படுகொலை இராணுவம் உயிரோடு கைதுசெய்து பிணமாக்கிய செய்திய சனல் 4 காணொளி போர்க்குற்ற ஆதரமாக வெளியிட்டிருந்தது. போர்க்குற்ற விசாரணைக்கான போதுமான ஆதரங்கள் சனல் 4 இனால் 2013 ஆம் ஆண்டிலேயே வெளியிடப்பட்டிருந்தது. அதுவும் காணொளிகளாக வெளியிடப்பட்டது. இதன் பின்னர் சில நிழல்படங்களை பிரித்தானிய தமிழர் பேரவை 2014 18ம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவு நாளின் இரண்டு நாட்களின் முன்பதாக வெளியிட்டடு போர்க்குற்ற விசாரணைக்கான முன்னடவடிக்கை என அறிவித்திருந்தது.
முள்ளிவாய்க்கால் நினைவு நாளின் முன்பதாகவும், மாவீரர் தின நிகழ்வுகளுக்கு முன்பதாகவும் இவ்வாறான போர்க்குற்ற விசாரணைக்கான படங்கள் என புலம்பெயர் அமைப்புக்களால் வெளியிடப்படுவது வழமை.
இசைப்பிரியா தொடர்பாக சனல் 4 இனால் வெளியிடப்பட்ட ஆதாரங்கள் போர்க்குற்ற விசாரணைக்குத் தேவையானவையும் போதுமானவையுமாகும். ஆக, பிரித்தானிய தமிழர் பேரவை முள்ளிவாய்க்கால் நினைவு நாளின் முன்னதாக வெளியிட்டவை போர்க்குற்ற விசாரணையை நோக்கமாகக் கொண்டவை அல்ல. வெறுமனே மக்களை உணர்ச்சிவசப்படுத்தி முள்ளிவாய்க்கால் நினைவுதினக் கூட்டத்திற்கு அழைப்பதே அவர்களின் நோக்கம் என வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
தவிர, தவணை முறையில் இவ்வாறு வெளியிடப்படும் காணொளிகளின் நோக்கம் மக்களை திடீர் உணர்ச்சிக்கு உள்ளாக்கி அவர்களைப் பயன்படுத்திக்கொள்வதே.
ஆக, தவணை முறையில் மக்களை உணர்ச்சிவசப்படுத்தி மக்களை மந்தைகளாக்குவதை பிரித்தானியத் தமிழர் பேரவை போன்ற அமைப்புக்கள் தவிர்த்து தம்மிடமுள்ள அனைத்து ஆதாரங்களையும் மக்கள் மன்றத்தில் முன்வைக்க வேண்டும். உண்மைகளை மக்களிடமிருந்து மறைக்காமல் வெளிப்படையாகச் சொல்லவேண்டும். தவிர, ராஜபக்ச போன்ற இனக்கொலையாளிகளுக்கு எதிரான பொதுப்புத்தியை உலக மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்கான செயற்பாடுகளே புலம்பெயர் நாடுகளில் அவசியமானவை. அதற்கான அரசியல் வேலைத்திட்டம் ஒன்றை மக்கள் முன்வைக்கவேண்டும். அவ்வாறன்றெனின் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் மக்களின் பங்களிப்புத் தேய்ந்து வருவது போன்று புலம்பெயர் நாடுகளில் அனைத்தும் வெகுவிரைவில் அழிக்கப்பட்டு இலங்கை பாசிச அரசினதும் ஏகாதிபத்தியங்களதும் நோக்கம் நிறைவேற்றப்பட்டுவிடும்.