10.047.2009.
யாழ். மாவட்டத்தில் சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவது கடந்தாண்டில் அதிகரித்து இருப்பதாக குடாநாட்டில் சிறுவர் நிதியம் மேற்கொண்ட ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சிறுவர் உரிமைகள் சாசனத்தின்படி 14 வயதுக்குட்பட்டவர்களை வேலைக்கமர்த்துவது நீதிமன்றத்தினால் தண்டிக்கப்பட வேண்டிய குற்றம் எனக் குறிப்பிடப்பட்டுள்ள போதும் யாழ். மாவட்ட தொழில் திணைக்களம் இது குறித்து எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் போர்ச் சூழலினால் குடும்பங்களில் நிலவும் வறுமை காரணமாக சிறார்கள் வீட்டு வேலைகளுக்கும் வர்த்தக ஸ்தாபனங்களில் வேலைக்கும் சேர்த்துக் கொள்வதும் அதிகரித்து காணப்படுவதாக சிறுவர் நிதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
சிறுவர் நிதியம், இச் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்த பாடசாலைகளை விட்டு இடைவிலகும் சிறார்களை இனம் கண்டு பாடசாலைகளில் இணைத்தும், வறுமை நிலையிலுள்ள சிறார்களின் குடும்பங்களுக்கு ஊக்குவிப்பு உதவிகளையும் வழங்கி வருகின்றது. சிறுவர் நிதியத்தின் ஆய்வுகளில் கடந்த வருடத்தில் 250 இற்கும் மேற்பட்ட சிறார்கள் வீட்டு வேலைகளுக்கும் தேநீர்க் கடை, பலசரக்கு கடைகளில் வேலை செய்வதற்கும் என பணிக்கமர்த்தப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.