யாழ்ப்பாணப் பல்கலைக்கழக்த்தில் முஸ்லிம் மாணவர்களின் தொழுகைக் கூடத்தினுள் கழிவு எண்ணை வீசப்பட்டது. இது குறித்த விசாரணைகளை மேற்கொண்டபோது பல்கலைக்கழகப் பாதுகாப்பு ஊழியர்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை யாழ்ப்பாணத்தில் தீவிரமாகச் செயற்படும் புலனாய்வுப் பிரிவினராலேயோ அன்றி துணை இராணுவக் குழுக்களாலேயோ மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் எனத் தெரியவருகிறது. இலக்கத் தகடற்ற மோட்டார் சைக்கிளில் வந்த சிலர் தம்மை உள்ளே செல்ல அனுமதிக்குமாறு கேட்டபோது பாதுகாப்பு ஊழியர்கள் மறுத்துவிட்டனர். தொடர்ந்து வேறுவழிகளூடாக உள் நுளைந்த அதே நபர்கள் கழிவு எண்ணைகளால் தொழுகைக் கூடத்தை அசுத்தப்படுத்திவிட்டுச் சென்றுள்ளனர்.
யாழ்.பல்கலைகழகத்தைக் கண்காணிக்க என அதன் அருகாமையில் முகாம் அமைத்துத் தங்கியிருக்கும் புலம் பெயர் நாடுகளிலிருந்து இலங்கை சென்ற குழுவான சிறீ ரெலோ என்ற துணை இராணுவ பயங்கரவாதக் குழுவினர் பல மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்தவருட இறுதியில் பல்கலைக் கழகத்தில் மாணவர் தலைவர்கள் கைதாவதற்கு வசதியாக தமது அலுவலகம் மீது அவர்கள் குண்டுவீசியதாக பொய் குற்றம் சுமத்தியிருந்த சிறி ரெலோ அமைப்பினர், பிரித்தானியத் தமிழ்த் தொலைக்காட்சி ஒன்றிலும் இதனை உறுதிப்படுத்தினர்.
மக்களை அச்சத்தில் வைத்திருப்பதும் அவர்களது குறைந்த ஜனநாயக உரிமைகளைக் கூட பறித்துக்கொள்வதும் பாசிச ஆட்சியின் பண்பு. வட கிழக்கில் துணை இராணுவக் குழுக்களும் புலனாய்வுப் பிரிவினரும் இணைந்து அடிப்படை உரிமைகளை அழித்து இனச் சுத்திகரிப்பை நடத்திமுடிக்கின்றனர்.