நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட பிற்பாடும் சிறைச்சாலைக்குள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கைதிகள் எட்டுப் பேர், யாழ்ப்பாண சிறைச்சாலையில் வைத்து கடந்த 23ம் திகதி முதல் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்களில் ஒரு சிங்களவரும், ஏழு தமிழர்களும் உள்ளடங்கியிருக்கிறார்கள்.
இவர்களை யாழ்ப்பாண நீதிமன்றத்தில் சமர்ப்பித்தபோது, பொலிஸாரினால் வழங்கப்பட்ட சாட்சிகளை ஏற்றுக் கொள்ள முடியாத காரணத்தினால் நீதிமன்றத்தால் இவர்கள் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள். எனினும் இவர்கள் இன்னும் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதோடு, இவர்களுக்கு மேலதிகமாக இன்னும் 30 பேர் போதுமான சாட்சிகளோ முறைப்பாடுகளோ அற்ற நிலையில் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.