யாழ்ப்பாணம் இன்னும் முழுவதுமாக தனியார் மருத்துவத்தின் பணவெறிக்கு இன்னும் முழுமையாக உள்ளாகவில்லை. இதற்கு யாழ்ப்பாண வைத்தியசாலையும் பிரதான காரணம். பெருந்திரளான மக்கள் நிரம்பி வழியும் யாழ்ப்பாண வைத்தியசாலையில் தரமான மருத்துவை சேவையை வழங்குவதில் மருத்துவர்கள் உட்பட அனைத்து ஊழியர்களும் பாராட்டுக்குரியவர்கள். இவர்கள்தான் ‘தேசிய’ சேவையை வழங்குகின்றனர். கலாச்சாரம் பறிபோகிறது, மக்கள் தொகை குறைகிறது என்றெல்லாம் கூக்குரல் போடும் வாக்குக் கட்சிகளோ, புலம் பெயர்ந்து வசதியாக வாழும் தமிழர்களோ இவற்றைக் கண்டுகொள்ள மாட்டார்கள்.
இந்த நிலையில் யாழ்ப்பாணம், திருகோணமலை ஆகிய பிரதேசங்களில் தாதியர்கள் நடத்தும் போராட்டங்கள் வீரம் மிக்கவை. மக்களைப் பலிகொடுத்த பின்னும் வெற்றிகொண்டுவிட்டதாகச் சவடால் அடிக்கும் பலருக்கு தாதியர்கள் போன்ற உழைப்பாளிகளின் அன்றாட வாழ்வியல் அவலங்கள் விளங்குவதில்லை.
தமிழ் நாட்டிலிருக்கும் தரங்கெட்ட அரசியல் வாதிகளுக்கும், அன்னிய நாடுகளிலிருக்கும் போக்கிரிகளுக்கும் எமது அவலத்தின் பெயரால் பணம் சேர்த்துக் கொடுக்கும் புலம் பெயர் வியாபார அரசியல் வாதிகள் நினைத்திருந்தால் யாழ்ப்பாண இலவச வைத்திய சாலையை உலகத் தரத்திற்கு உயர்த்தியிருக்க முடியும்.
இந்த நிலையில் மருத்துவ மனையின் வசதிகளுக்காக தாதியர்களின் போராட்டம் மக்கள் பற்றுக்கொண்டது. வடக்கில் உள்ள அரச மருத்துவமனைகளில் நிலவுகின்ற தாதியர் பற்றாக்குறையைப் போக்குமாறு கோரியும், நியமனம் செய்யப்பட்ட சிறு எண்ணிக்கையில் சிலரை நாட்டின் தென்பகுதிக்கு உடனடியாக இடமாற்றம் செய்ததைக் கண்டித்தும் அரச தாதிமார் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர்.
வட மாகாணத்தில் உள்ள 100 அரச மருத்துவமனைகளில் 3,513 தாதியர்கள் பணியாற்ற வேண்டியிருக்கின்ற போதிலும், 985 பேர் மட்டுமே பணியாற்றுகின்றனர்.
இதனால் இங்கு 2,528 தாதியர்களுக்குப் பற்றாக்குறை நிலவுகின்றது. இந்த நிலையில் ஜனவரி முதலாம் திகதி 116 தாதியர்கள் மாத்திரமே இந்தப் பகுதிக்கு நியமிக்கப்பட்டிருக்கின்றார்கள்
இவர்களில் 14 பேரை நியமனம் செய்த உடனேயே தென்பகுதியில் உள்ள வைத்தியசாலைகளுக்கு சுகாதார அமைச்சு இடமாற்றம் செய்திருப்பதைக் கண்டித்து இந்த அடையாள பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டிருந்ததாக அரச தாதியர் சங்கத்தின் உபதலைவரும், சங்கத்தின் வடமாகாண இணைப்பாளருமான பாலசிங்கம் சிவயோகம் தெரிவித்தார்.
தாதியர்களின் போராட்டத்தை இலங்கை தழுவியதாக விரிவுபடுத்தவோ அன்றி மக்கள் போராட்டமாக மாற்றவோ அரசியல் தலைமைகள் இல்லை. அரசியல் தலைமை என்று கூறிக்கொள்பவர்கள் சர்வதேச விவாகரங்களில் படு பிசியாக உள்ளனர்.
இந்த நிலையில் சுயனலமற்ற மனிதாபிமான உணர்வு மிக்க தாதியர்களின் போராட்டம் வெற்றிபெற வாழ்த்துக்களைத் தெரிவிப்பதே சிறுபான்மை ஜனநாயகவாதிகளின் கடமை.