நம்பிக்கை வாக்கெடுப்பில் மத்திய அரசிற்கு ஆதரவாக வாக்களிக்கக் கோரி சமாஜ்வாதி கட்சியினர் தங்களுக்கு லஞ்சமாகக் கொடுத்ததாகக் கூறி, மக்களவையின் மையத்தில் பா.ஜ.க. எம்.பி.க்கள் ஆயிரம் ரூபாய் நோட்டுக் கட்டுக்களைக் கொட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மக்களவையில் அரசு கொண்டு வந்துள்ள நம்பிக்கை தீர்மானத்தின் மீது நடந்துவரும் விவாதத்தில் இன்று மதியம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. பாசுதேவ் ஆச்சார்யா பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது, மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பா.ஜ.க. எம்.பிக்கள் அசோக் அர்கால், எஃப்.எஸ். குலாஸ்ட் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ.க. எம்.பி. மகரி பகோரா ஆகியோர் எழுந்து அவைக்கு நடுவில் வந்து, மத்திய அரசிற்கு ஆதரவாக வாக்களிக்கக் கோரி சமாஜ்வாடி கட்சியினர் தங்களுக்கு ரூ.3 கோடி லஞ்சமாகக் கொடுத்ததாகக் குற்றம்சாற்றியதுடன், தாங்கள் கொண்டு வந்திருந்த ஆயிரம் ரூபாய் நோட்டுக் கட்டுகளை அவைத் தலைவர் இருக்கைக்கு முன்பு கொட்டினர். அவர்களுடன் மற்ற பா.ஜ.க. எம்.பி.க்களும் அவையின் நடுவில் வந்து கூடினர்.
இதனால் பரபரப்பு ஏற்பட்டதையடுத்து அவையின் துணைத் தலைவர் சரண்ஜித் சிங் அட்வால், அவை தள்ளிவைப்பு அறிவிப்பை வெளியிடாமலேயே இருக்கையில் இருந்து எழுந்து சென்றார். |