இந்தியா முழுக்க தான் ஆட்சி செய்யாத மாநிலங்களில் ஆளுநர்களை வைத்து மறைமுக ஆட்சியை நடத்த முயல்கிறது பாஜக.இந்நிலையில் மேகாலயா மாநில ஆளுநர் சத்ய பால் மாலிக் மோடியை விமர்சித்துள்ளார்.
மேகாலாயா மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்ற தேசிய மக்கள் கட்சியின் தலைவர் கான்ராட் சங்மா (வயது 40), பாரதீய ஜனதா உள்ளிட்ட சில கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைத்து உள்ளார். கான்ராட் சங்மா முதல்வராக உள்ளார். அங்கு சத்யபால் மாலிக் என்பவரை ஆளுநராக பாஜக நியமித்தது. பொதுவாக ஆளுநர்கள் பாஜகவுக்காக செய்ல்பட்டு வரும் நிலையில் அவர் பிரதமர் மோடி மீது பகிரங்கமாக சில குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார்.
சமீபத்தில் வேளாண் சட்டங்கள் தொடர்பாக பிரதமரிடம் ஆலோசிக்கச் சென்ற போது மோடியின் அணுகுமுறை அதிருப்தியை உருவாக்கியதாக தெரிவித்துள்ளார். பிரதமருடனான சந்திப்பு குறித்து ஹரியானாவிலுள்ள தாத்திரியில் ஒரு விழாவில் கலந்துகொண்டபோது பேசிய ஆளுநர் சத்ய பால் மாலிக், “விவாதிக்க ஆரம்பித்த ஐந்து நிமிடங்களிலேயே பிரதமர் நரேந்திர மோடி மிகவும் கோபத்துடனும் ஆணவத்துடனும் பேசினார்.
“எங்கள் விவசாயிகள் 500 பேர் இறந்து விட்டார்கள்” என்று நான் அவரிடம் கூறிய போது பிரதமர் “அவர்கள் எனக்காகவா இறந்தார்கள் என்று கேட்டார். நான் அதற்கு ஆம் என்றேன். “காரணம் நீங்கள் இந்தியாவின் பிரதமர்” என்றேன். இறுதியாக நான் பிரதமரிடம் இந்த விவகாரம் தொடர்பாக வாக்குவாதம் செய்தேன். பின்னர், அவர் என்னிடம் அமித் ஷாவைச் சந்திக்குமாறு கூறினார். நான், அதையும் செய்தேன்”என்றார்.
பிறகு பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்த ஆளுநர் சத்திய பால் மாலிக், “இந்தப் போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டது என்று அரசு நினைத்தால், அது நிச்சயம் கிடையாது. போராட்டம் நிறுத்தி மட்டும்தான் வைக்கப்பட்டிருக்கிறது. விவசாயிகளுக்குக் கொடுமையோ அல்லது அநீதியோ ஏற்பட்டால் போராட்டம் மீண்டும் தொடங்கும். எந்தச் சூழ்நிலையிலும் நான் விவசாயிகளுடன் துணை நிற்பேன்” எனக் கூறினார்.தொடர்ந்து பேசியவர், “வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டங்களின்போது விவசாயிகள்மீது பதிவுசெய்யப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும். பயிர்களுக்குக் `குறைந்தபட்ச ஆதரவு விலை’ நிர்ணயிக்க சட்டபூர்வ கட்டமைப்பை ஏற்படுத்த மத்திய அரசு நேர்மையுடன் செயல்பட வேண்டும்” என்றார்.