இந்தியாவில் எந்த ஒரு மாநில அரசும் இந்த அளவு மத்திய அரசோடு நேரடியான மோதல் போக்கை கடைபிடித்ததில்லை. அதே போன்று எந்த ஒரு மத்திய அரசும் ஒரு மாநில அரசை இந்த அளவுக்கு பாடாய்ப்படுத்தியதும் இல்லை. அந்த அளவுக்கு மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் பிரதமர் மோடிக்கும் இடையில் உச்சக்கட்ட அதிகார மோதல் வெடித்துள்ளது.
யாஷ் புயல் பாதிப்புகளை பார்வையிட வந்த பிரதமர் மோடியை அவமதித்து விட்டார் மம்தா பானர்ஜி என்று குற்றச்சாட்டு எழுந்த நிலையில் மேற்கு வங்க மாநில தலைமைச் செயலாளர் அலபன் பந்தோபாத்யாயவை இன்று (31-05-2021) திங்கட் கிழமை அப்பதவியில் இருந்து விடுவித்து மத்திய அரசுப் பணிக்கு அனுப்ப வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டிருந்தார்.
இதை எப்படி எதிர்கொள்ளப் போகிறார் மம்தா என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் என்ன காரணத்திற்காக தலைமைச் செயலாளரை அனுப்ப வேண்டும் என்று காரணங்கள் எதுவும் இல்லாத காரணத்தால் அனுப்ப இயலாது என கடிதம் எழுதிய நிலையில் ,இன்று அதிரடியாக அலபன் பந்தோபாத்யாய தன் தலைமைச் செயலாளர் பதவியை ராஜிநாமா செய்தார். அவருக்கு அடுத்த நிலையில் இருந்த ஹெச்.கே. த்விவேதி தலைமைச் செயலாளர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். ஆனால், அதே நேரம் ராஜிநாமா செய்த அலபன் பந்தோபாத்யாய மம்தா பானர்ஜியின் தலைமை ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மத்திய ஆட்சிப்பணியில் கீழ் வரும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை மத்திய அரசு தன் தேவைகளுக்கும் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்ற நிலையில் அலபன் பந்தோபாத்யாயவை மத்தியப் பணிக்கு அனுப்பாமல் ராஜிநாமா செய்ய வைத்து அவரை தனது முதன்மை ஆலோசகராக நியமித்துக் கொண்டிருக்கிறார் மம்தா பானர்ஜி.
மத்திய அரசுக்கு சரியான பதிலடியை மம்தா கொடுத்துள்ளதாகவும் ஆனால் இத்தோடு இந்த விவகாரம் முடிந்து விடாது என்றும். அடுத்த அஸ்திரமாக மோடியும் அமித்ஷாவும் எதை ஏவப் போகிறார்கள் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றும் அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.